வத்திக்கானில் கத்தோலிக்கத் திருவிவிலிய வல்லுநர்களுடனான கலந்துரையாடலில், திருத்தந்தை லியோ மக்களுக்காக அவர்கள் ஆற்றிவரும் பணியைப் பாராட்டி, தனது நன்றியையும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தனது கருத்துகளை முன்வைத்த அவர், தெய்வீக வெளிப்பாடு குறித்த கோட்பாடான ‘தேய் வெர்பும்’-இன் (Dei Verbum) 60-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் திருவிவிலியத்தை எல்லா இடங்களிலும் எளிதாக அணுகவும் மகிமைப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ள அவர் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய திருத்தந்தை, இன்றைய சூழலில் இளம் தலைமுறையினர் புதிய டிஜிட்டல் உலகில் வாழ்கின்றனர் எனவும், அங்கு கடவுளின் வார்த்தை எளிதில் மறைக்கப்பட்டு விடுவதாகவும் குறிப்பிட்டு, இளம் தலைமுறையினர் திருவிவிலியத்தை எளிதாக அணுக வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.