news-details
சிறப்புக்கட்டுரை
ஒடுக்கப்பட்டோருடன் ஓரணியாய்!

அன்பின் மகுடம், ஏழையின் துயர் துடைக்கும் சேவை ஒன்றே ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலில்தான் இறைவனின் நீதி ஒலிக்கிறதுஎன இந்தியத் திருநாட்டிலே, குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் காலங் காலமாக ஒடுக்கப்பட்ட, கைவிடப்பட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்வு செழித்தோங்க தங்கள்  வாழ்வையே அர்ப்பணித்தவர்கள்தாம் எம்பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சகோதரிகள்.’

1775-ஆம் ஆண்டு இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ அவர்களால் தொடங்கப்பட்டு, தனது 250-ஆம் ஆண்டு யூபிலி விழாவைக் கொண்டாடும் எம் தாயாம் கொன்சாகா சபையை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன்.

ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்த இயேசுவின் பணியைத் தங்கள் நோக்கமாகக் கொண்டு, இரண்டரை நூற்றாண்டுகளாகச் சத்தமில்லாத ஒரு சமூகப் புரட்சியை நிகழ்த்திவரும் எம் கொன்சாகா சபையின் அரும்பணிகள் வியப்புக்குரியன. சமூகத்தில் துன்புறுவோருக்கு குறிப்பாக, ஏழைகள், கைவிடப்பட்ட மகளிர் மற்றும் குழந்தையரின் மறு வாழ்வை உள்ளுயிராகக் கொண்டு கொன்சாகா பெரும் குடும்பம் இயங்கி வருகிறது.

ஒடுக்கப்பட்டவருடன் ஓரணியாய், வறியோரின் விடுதலையாய், முகமிழந்தோரின் முகவரிகளாய் கொன்சாகா சகோதரிகளாம் யாம் ஆற்றி வரும் இறைப்பணிகள் எண்ணிலடங்கா!

நற்செய்திப் பணியே கொன்சாகா சபையின் இதயத் துடிப்பு. கல்விப்பணி வழி ஏழை எளிய மக்கள் அறிவொளி பெற உழைத்தாலும், நற்செய்தி போதிக்கவில்லையெனில் கல்விப்பணியே செய்ய மாட்டோம் என உறுதிபூண்ட முன்னோரைக் கொண்ட வரலாறு எம் சபையின் வரலாறு.

சமூகத்தில் அநீதிகள் தழைத்தோங்கும் போதெல்லாம் எம் கொன்சாகா சகோதரிகளின் கரம் அநீதிக்கு எதிராய் ஓங்கி நிற்கிறது. சமூகத்தால் கைவிடப்பட்டோரைத் தாயன்புடன் அரவணைப்பதே எங்கள் சேவையின் உச்சம்.

எம் தாயாம் கொன்சாகா சபையின் 250-ஆம் ஆண்டுகாலத் தியாகப் பயணம் வெறும் வரலாறல்ல; அது சமூக மாற்றத்தின் ஆவணம். சாதிப் பிரிவினையை அகற்றி, மனிதநேயத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு விளிம்புநிலை மக்களின் வாழ்வு மேம்படவும், சமூகத்தில் நீதி மற்றும் சமத்துவம் நிலைபெறவும் எம் சபை தொடர்ந்து உழைத்து வருகிறது.

அவமானமும் அடக்குமுறையும் சூழ்ந்த போதிலும், தொய்வின்றித் தாழ்த்தப்பட்ட சமூகம் துளிர்விட்டுத் தழைத்தோங்க, கொன்சாகா சகோதரிகள் செய்துவரும் மகத்துவப் பணி என்றென்றும் தொடரட்டும்!