தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு, இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வித்தியாசமான பாதையில் சென்றது என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கு அரசியல் மையங்கள், கட்சித் தலைமைகள், மக்கள் இயக்கங்கள் எனப் பலவற்றுக்கு உயிர் கொடுத்தது திரை உலகம். அரசியல் தலைவர்கள் திரையில் தோன்றிய கதாபாத்திரங்கள் மூலமே மக்களின் இதயங்களில் நுழைந்தனர்.
இன்றுகூட
‘திரையில் தோன்றுபவர் நாளை தலைவராக வருவார்’ என்ற நம்பிக்கை பொதுமக்களின் மனத்தில் உறுதியான பிம்பமாக நிலைத்துள்ளது. இந்த நிலை உருவாகக் காரணம் என்ன? திரை மற்றும் அரசியல் இணைந்த நம் மாநிலத்தில் இது ஒரு சமூகப் பிம்பமாக மாறிவிட்டதா? இன்றைய இளம் தலைமுறையினர் இதை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள்?
இந்திய
விடுதலைக்குப் பின் தொடர்ந்த காலம் அரசியலின் பொற்காலம் என்று கூறலாம். அப்போது அரசியல் என்பது மக்கள் நலனுக்கான ஓர் அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துதல் எனும் எண்ணம் கொண்ட தலைவர்கள் மட்டுமே அரசியல் களத்தில் நுழைந்தனர். இந்தக் காலகட்டத்தில் மாணவர்களும் சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வுடன் அரசியலில் ஈடுபட்டனர். ஆனால், காலம் மாறியது. இன்று அரசியல் ஓர் அதிகாரப் போட்டி, ஒரு தனிநபர் நலப் பந்தயம், ஒரு புகழ் மேடையென மாறிவிட்டது.
அரசியலின் மையநோக்கம் - மக்கள் சேவை மறைந்து, அதிகார ஆசை முன்னிலை பெற்றுள்ளது. இதுவே அரசியலைச் சீரழிக்கும் முக்கியக் காரணம். இன்றைய அரசியல் சிந்தனைகள் இன, சாதி, மொழி எனப் பிரிக்கப்பட்டு, சமூக ஒற்றுமை சிதைந்த, பொருளாதார, சமூக ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்காகப் போராட வேண்டிய மாண்பை மறந்து, இன்று வாக்கு வங்கிகளைப் பிடிக்கும் ஒரு விளையாட்டாக மாறிவிட்டது.
தமிழ்நாட்டில்
அரசியலையும் சினிமாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. திரையுலகம் தலைவர்களை உருவாக்கிய தாயகம். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா
இவர்கள் அனைவரும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த தலைவர்கள். அவர்களின் திரைப்படங்கள் மக்களிடையே ஒருவித நம்பிக்கையையும் வெற்று வீரத்தையும் உருவாக்கின. ‘திரையில் நாயகன்; நிஜ வாழ்விலும் தலைவன்’ என்ற கற்பனை மக்களின் மனத்தில் வேரூன்றிவிட்டது. இன்றுகூட நம் இளம் தலைமுறை திரையுலக நாயகர்களையே தங்கள் அரசியல் மாதிரியாகக் காண்கிறது. சமூக நலனுக்கான சிந்தனைக்குப் பதிலாக, திரைப்படக் கவர்ச்சி மற்றும் புகழை அரசியலின் அடையாளமாகக் காண்கின்றனர். இது ஓர் ஆபத்தான மாற்றமாகும்.
இன்றைய
இளம் தலைமுறை சமூக ஊடகங்களின் காலத்தில் வளர்கின்றவர்கள். அவர்கள் அரசியலை ‘ட்ரெண்ட்’
அல்லது ‘விளையாட்டு’ போல
அணுகுகிறார்கள். தெளிவில்லா அரசியல் ஈடுபாடு ஒரு வெறும் ஆவேசம் மட்டுமே. தெளிவில்லாமல் சினிமா நட்சத்திரங்களை அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொள்வது, சனநாயகத்தின் ஆழமான நோக்கத்தைச் சிதைக்கிறது. அரசியல் என்பது மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தி; ஆனால், அதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் நிலை ஆபத்தானது.
சினிமா
என்பது கலை வடிவம்; அது நம் வாழ்க்கையின் கலவையான பிரதிபலிப்பு. ஆனால், அது நம் வாழ்வை நிர்ணயிக்கக்கூடாது. நாயகன் திரையில் தோன்றுவது கற்பனை உலகம்; ஆனால், நிஜ வாழ்வில் ஒரு நாயகன் உருவாக வேண்டுமெனில் கல்வி, நேர்மை, சமூகப் பொறுப்பு ஆகியவை அவசியம். அரசியல் தலைவர்கள் சினிமாவிலிருந்து வருவது தவறில்லை; ஆனால், அவர்கள் திரைப்படக் கவர்ச்சியைவிட, மக்களுக்கான அர்ப்பணிப்பை முன்னிலைப்படுத்தினால் மட்டுமே அது உண்மையான தலைமை எனலாம்.
நம்
சமூகம் அறிவார்ந்தது; ஆனால், தற்போது அது தவறான திசையில் செல்கிறது. ‘திரையில் தோன்றினாலே தலைவனாகத் தகுதி வந்துவிடும்’ என்ற
எண்ணம் வேரூன்றும்போதே, உண்மையான அரசியல் நோக்கம் அழிகிறது. அரசியல் என்பது மக்கள் வாழ்வை உயர்த்தும் தளம்; சினிமா என்பது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தளம். இவை இரண்டும் இணையும்போது, ‘பொறுப்புள்ள கலைஞன்’ உருவாகலாம். ஆனால், பொறுப்பில்லாமல் இணையும்போது அது ‘மாயை அரசியல்’ ஆகிவிடும்.
தற்போதைய
இந்த நிலையை மாற்றுவது கல்வி மூலமே சாத்தியம். கல்வி என்பது மனிதனை அறிவார்ந்த குடிமகனாக மாற்றும் கருவி.
ஆசிரியர்கள்,
மாணவர்களுக்கு அரசியல் என்றால் என்ன என்பதைத் தெளிவாக நன்கு புரிய வைக்கவேண்டும்.
•
அரசியல் என்பது மக்கள் நலத்திற்கான பொறுப்பு என்பதை எடுத்துக்கூற வேண்டும்.
• சினிமா என்பது கலைக்கான மேடை; அரசியல் என்பது சேவைக்கான மேடை என்பதை மாணவர்கள் பிரிந்துணர்ந்திட பயிற்சியளித்தல் வேண்டும்.
• சிந்தனையுள்ள தலைமுறையே தூய்மையான அரசியல் களத்தில் நின்று போராடும் என்பதை அவர்களின் மனத்தில் மிக ஆழமாகப் பதிய வைத்தல்வேண்டும்.
ஆசிரியர்கள்.
மாணவர்களில் சமூக பொறுப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு, சமூக நீதி பற்றிய புரிதல் ஆகியவற்றை வளர்க்கவேண்டிய நேரம் இது.
ஆகவே,
இன்றைய இளம் தலைமுறை அரசியலை சிந்தனையுடன், விழிப்புணர்வுடன், பொறுப்புடன் அணுக வேண்டும். அதற்கு வழிகாட்டும் வெளிச்சம் கல்வித்துறை, ஆசிரியர்கள் மற்றும் அறிவார்ந்த சமூகம்தான். அதுவே நாளைய அரசியலின் தரத்தை உயர்த்தும் அறிவார்ந்த தலைமுறையின் தொடக்கம் ஆகும்.