news-details
சிறப்புக்கட்டுரை
கொன்சாகாவின் இலட்சியப் பயணம்

திரு அவையின் அழிக்க முடியாத வரலாற்றைப் போன்று புனித அலோசியஸ் கொன்சாகா சபையின் நீண்ட நெடிய 250 ஆண்டு கால வரலாறு மறக்க இயலாத சாதனை வரலாறு என்றுதான் கூறவேண்டும்.

சபையினுடைய வரலாற்றைப் பார்க்கின்றபொழுது காலச்சுவடுகள் இல்லை. பாதச்சுவடுகளின் அச்சு, அழுத்தம், சபை நிறுவுநர் தந்தை மைக்கேல் அன்சால்தோவின் இறைவனில் கலந்த வாழ்வு, சபையின் இலக்கு, மக்களுக்கான தெளிவு மற்றும் செயலாக்கம் இயேசுவின் இறையாட்சிப் பணிக்கான பன்முக நற்செய்திப் பணிகளில் மிளிர்ந்து ஒளிர்வதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில், இந்தியாவில் இன்னும் வெளி நாடுகளில் இவற்றைச் சிறப்பாகப் பார்க்க முடிகிறது.

வரலாற்றில் சபை சகோதரிகளின் தனிவரத்தில் பிறழாத துறவு வாழ்வும், அர்ப்பணத்தில் தோய்ந்த சாட்சிய வாழ்வும்தான் என்றால் மிகையாகாது. தன் வேர்களைத் தேடி தன்னைப் பெரிதாக்கிக்கொள்ள ஆழப்படுத்தும் விருட்சம்போலத் தன்னையே புடம்போட்டுப் பொலிவு கொள்வதற்காக, சுட்டெரிக்கப்படும் தங்கம்போல இந்த 250-ஆம் ஆண்டு வரலாற்று யூபிலியை, புனித அலோசியஸ் கொன்சாகா சபை இன்று கொண்டாடி, தன் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து, இலக்கின் இலட்சியப் பயணத்தை உரசிப் பார்ப்பது காலத்தின் கட்டாயம்.

எனவே, இந்த யூபிலி விழா அருமையிலும் அருமைதான். ஒரு மனிதர் வாழ்வில் உயர்வதும் தாழ்வதும் அவரவரின் தனிப்பட்ட கடின உழைப்பாலும் முயற்சியாலும் மட்டும்தான் என்பது மறுக்க இயலாது. ஆனால், ஒரு துறவற சபை இத்தனை ஆண்டுகள் உயர்விலும் தாழ்விலும் வெற்றியிலும் தோல்வியிலும் மேடு பள்ளங்களைக் கடந்து இறைவனின் இறையாட்சிப் பணிக்கான பயணத்தில் சிகரம் தொடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது, உயர்ந்திருக்கிறது என்றால், அது கடவுளின் கடைக்கண் பார்வைதான் என்றால் அது மிகையாகாதுகடவுளின் கடைக்கண் சகோதரிகளுக்கும், சிறப்பாக அன்றிலிருந்து இன்றுவரை சபையைத் தலைமையேற்று வழிநடத்துகின்ற மேனாள், இந்நாள் சகோதரிகள் மனநிலையோடு தங்களையே கரைத்துக்கொண்டு அவர்கள் வாழ்ந்ததால்தான் இத்தனை ஆண்டுகள் இது உயர்ந்திருக்கிறது.

இந்த அருமையான நேரத்திலே உங்களை வாழ்த்துவதிலே பெருமை கொள்கிறேன். இந்தச் சபையின் வரலாற்றுப் புத்தகத்திலே பதிவு செய்யப்படும் நாள். இந்த தருணம் கடவுள் தந்த தருணம். கொண்டாடி மகிழ்ந்து நிறைவாழ்வை நோக்கிய எதிர்நோக்குப் பயணத்தில் இந்தச் சபை வாழ்வை வாழ்த்தி நேற்று, இன்று, நாளை என முக்காலமும் திரு அவையினுடைய மனித நேயச் சமத்துவச் சமுதாயப் பணிகளை முதன்மைப் பணிகளாக முன்னெடுத்து, இயேசுவின் இறையாட்சிக் கனவை நனவாக்கும் இறையருள் பெற்ற சபையாக வாழ்ந்திட, வளர்ந்திட 500 ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள்... அதற்கு மேலும் பணியாற்றிட, இறையாட்சியை நனவாக்கிட வாழ்த்தி செபிக்கிறேன்.