news-details
சிறப்புக்கட்டுரை
மது விலக்கு திரு அவையின் கடமை

அண்மையில் 20 கத்தோலிக்கக் குடும்பங்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் பெரும்பாலும் கட்டட வேலை, 100 நாள் வேலை மற்றும் விவசாயக் கூலித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் தினம் ரூ. 300 முதல் ரூ. 500 வரை சம்பாதிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் கல்வி, மருத்துவம், குடும்ப நிகழ்ச்சிகள், கிராமத் திருவிழாக்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடன் வாங்கி, மாதம் ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை திருப்பிச் செலுத்துகின்றனர்.

ஆண்கள் தினம் ரூ. 700 முதல் ரூ. 1,000 வரை சம்பாதித்தாலும், பெரும்பாலோர் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் ரூ. 150 முதல் ரூ. 200 வரை மதுவுக்குச் செலவிடுகின்றனர். மேலும், திருமணம், மரணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை மதுவிற்குச் செலவாகிறது. இளைஞர்களும் வாரந்தோறும் மதுவை அருந்துவது வருத்தத்திற்குரியது.

தமிழகத்தில்டாஸ்மாக்கடைகள் மற்றும் கள்ளச்சாராயம் சமூக வாழ்வில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. குடும்பப் பிளவுகள், மகளிர்-குழந்தையர் துயரங்கள், உடல் நலப் பிரச்சினைகள், இளம் வயது மரணங்கள், வறுமை, கடன்சுமை, வன்முறை ஆகியவை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. கிராமப்புறக் கத்தோலிக்க விழாக்கள் மற்றும் இறுதிச் சடங்குகளிலும் மதுவின் தவறான பயன்பாடு அதிகரித்துள்ளது.

பல கத்தோலிக்கச் சமூக சேவை மையங்கள் மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்புப் பணி செய்து வருகின்றன. அவர்களின் பணி பாராட்டத்தக்கது. இருந்தாலும், திரு அவையின் சமூகப் பொறுப்பாக மதுவிலக்குப் பிரச்சினையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது அவசியமாகிறது.

கத்தோலிக்கத் திரு அவை அரசியல் சார்புடையதல்ல; ஆனால், கடந்த காலங்களில் சமூக அவலங்களைக் கண்டித்தும், மக்களின் நலனுக்காக ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தும் வந்துள்ளது. 2018-19-ஆம் ஆண்டுகளில் ஆயர் பேரவை இயற்கைவளச் சுரண்டல், விவசாயிகள் பிரச்சினைகள், ஸ்டெர்லைட், சாதிக்கொலைகள் போன்ற பல சமூகச் சிக்கல்களைத் தொடர்ந்து வலியுறுத்தியது.

2021 சட்டமன்றத் தேர்தலில் ஆயர் பேரவையின் அரசியல் வழிகாட்டல் ஆட்சி மாற்றத்திற்குப் பங்காற்றியது. அதன் பலனாக, தற்போதைய அரசு சிறுபான்மை நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், மதுக் கடைகள் குறைக்கப்படும், படிப்படியாக மூடப்படும் என்ற வாக்குறுதி மட்டும் நிறைவேறவில்லை.

தமிழகத்தில் மதுவிலக்கு - மீள்பார்வை

1948: சென்னை மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அறிவிக்கப்பட்டது; 50 ஆண்டுகள் தொடர்ந்தது.

1981: எம்.ஜி.ஆர். அரசு மதுவிற்பனையை மீண்டும் அனுமதித்தது.

1983: டாஸ்மாக் நிறுவப்பட்டது.

1989: மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்திய கருணாநிதி அரசுக்குப் பின்னர் ஜெயலலிதா அதை இரத்து செய்தார்.

2003: சில்லறை விற்பனை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, டாஸ்மாக் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

இன்று, 4,829 டாஸ்மாக் சில்லறைக் கடைகள், 2,919 பார்கள் இயங்குகின்றன. அதன் வருவாய்...

2003-04: ரூ. 3,694 கோடி

2010-11: ரூ. 14,965 கோடி

2015-16: ரூ. 25,845 கோடி

2019-20: ரூ. 33,133 கோடி

2022-23: ரூ. 44,121 கோடி

2023-24: ரூ. 45,856 கோடி

2024-25: ரூ. 8,344 கோடி

இவ்வாறு வருவாய் அதிகரித்தாலும், அதனுடன் சமூகச் செலவுகளும் (மருத்துவம், கல்வி பாதிப்பு, குடும்ப நலன்) உயர்ந்து வருகின்றன.

அண்மைக்காலங்களில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்துள்ளன. 2023 ஜூன் - விழுப்புரம், செங்கல்பட்டு: 22 பேர் உயிரிழப்பு. 2024 ஜூன் - கள்ளக்குறிச்சி: 65 பேர் உயிரிழப்பு, 150 பேர் சிகிச்சைகடந்த ஐந்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை மதுவிலக்கின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

கணவன்-மனைவி தகராறு, குடும்ப வன்முறை, பெண்களின் உழைப்புப் பணம் மதுவுக்குச் செல்வது, இளம் விதவைகள், குழந்தைகளின் கல்வி பாதிப்பு, சிறுவர் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்புகர்ப்பிணி மகளிர் மற்றும் குழந்தையரின் உடல் நலப் பிரச்சினைகள் என சமூகம் சிதைந்து போகின்றது.

தமிழ்நாடு திரு அவை இதனை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும். முதல்வரிடம் பூரண மதுவிலக்கு தொடர்பான மனுவை நாம் வழங்கவேண்டும். ஆலயங்கள், கல்வி நிறுவனங்கள், மகளிர் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாம் நடத்தவேண்டும். மது விடுதலை மையங்கள், கைம்பெண்-குழந்தையருக்குப் பொருளாதார ஆதரவை நாம் வழங்கவேண்டும்.

அடுத்தத் தேர்தலில் பூரண மதுவிலக்கு உறுதி செய்யும் அரசையே கத்தோலிக்க மக்கள் ஆதரிப்போம் என்று வெளிப்படையாக நாம் கூறவேண்டும்.

திருவிவிலியப் பார்வையில்

மது மனிதனைக் கேலி செய்கிறது; கள்ளம் இரக்கமற்றவன் (நீமொ 20:1). “உங்கள் உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் (1கொரி 6:19).  ஆகவே, மனித உடலும் குடும்பமும் மதுவிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்; திரு அவை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, “உண்மையை அறிந்தால் அது உங்களை விடுதலை செய்யும் (யோவா 8:32) என்ற வாக்குறுதியின் அடிப்படையில் சமூக விடுதலைக்குப் போராடவேண்டும்.

மதுவிற்பனையும் கள்ளச்சாராயமும் வறுமையை அதிகரிக்கும் சமூகக் கொலைகள் ஆகும். தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமெனில், பூரண மதுவிலக்குத் தவிர்க்க முடியாதது.

தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவை, தன் வரலாற்றுச் சமூகப் பங்கினைப் போலவே, இன்றும் மதுவிலக்குப் பிரச்சினையை முன்னெடுத்து, மக்களின் உயிர், குடும்பநலம், எதிர்காலத் தலைமுறை பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். இதுவே, நம் கிறித்தவச் சாட்சியம்; காலத்தின் அவசியமும் கூட.