news-details
ஆன்மிகம்
அன்பும் நட்பும் (சதுக்கத்தின் சப்தம் – 6)

இயேசுவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்புகூர வேண்டும் என்ற அன்புக் கட்டளை மையம் கொண்டுள்ளது. இக்கட்டளை கிறித்தவத்தின் அடையாளமல்ல; மாறாக, மனிதாபிமானத்தின் ஆழமான வெளிப்பாடு; உடன்பிறந்த உறவு; மனித வாழ்க்கையின் அடித்தளம்.

நமது பிறப்பு முதல் வளர்ச்சிவரை, பிறருடனான உறவுகளின் ஆதரவு இல்லாமல் நாம் வாழமுடியாது. இருப்பினும், உலகம் இன்று மோதல்கள், அநீதிகள், தனிமைகள் மற்றும் வெறுப்பால் சிதறிப்போயுள்ளது. இந்த இருளை வெல்லும் ஒரே ஒளி உடன்பிறந்த அன்பே (யோவா 15;12-15) என்ற மையப்பொருளோடு நமது திருத்தந்தை லியோ தனது புதன் மறைக்கல்வி உரையை நிகழ்த்தினார்.

அன்பில் வீரம்: மில்டன் ஆலிவ்

சிகாகோவில் ‘மில்டன் ஆலிவ் பார்க் என்ற ஒரு நகராட்சி பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவின் பெயர் ஒரு வீரத்தின் நினைவாக வைக்கப்பட்டது. மில்டன் ஆலிவ் என்பவர் 19 வயது போர்வீரர். அவர் வியட்நாமில் போராடியவர். 1965, அக்டோபரில் ஒரு கையெறி குண்டு நேரடியாக வெடிக்க இருந்தபோது, அவர் தன்னைத்தானே குண்டின்மீது வீசி, நான்கு தோழர்களின் உயிரைக் காப்பாற்றினார். மில்டன் ஆலிவ் தன் உயிரை இழந்தபின், அவருக்கு மரியாதை பதக்கம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் கூறியதாவது: “அவர் இறக்க முடிவு செய்த அந்த நிமிடம் மிகவும் கடினமானது. அதேநேரத்தில் அவர் மற்றவர்களை முதலிடத்தில் வைத்து, தன்னைக் கடைசியில் வைத்தார். இது எவ்விதமான மனிதனாலும் எடுக்க முடியாத உயர்ந்த முடிவாகும் என்று நான் நம்புகிறேன்.” எனவே, அந்த வீரத்தின் நினைவாக, பூங்காவின் பெயர் ‘மில்டன் ஆலிவ் பார்க் என்று வைக்கப்பட்டுள்ளது. மில்டன் ஆலிவ் எதிர்கொண்ட சூழ்நிலை கடுமையாக இருந்தது. ஆனால், எவ்வளவு சுலபமான சூழ்நிலைகளில்கூட, மற்றவர்களை முன்வைத்துக்கொள்வதில் நாம் தயாராக இருக்கிறோமா?

ஒரு ஹீரோ எப்போதும் கூறுவதுபோல, “ஒரு ஹீரோ தன்னால் பாதுகாக்க முடியாததைத் தியாகம் செய்து, மற்றவர்களைக் காப்பாற்றுகிறான்.” ஆனால், நம்முடைய நாயகன் இயேசுவோ நம்மீது கொண்ட அன்பினால் தம்மால் இயன்றபோதும் கூட மற்றவரைத் துன்புறுத்தாது, தாமே தம் சாவை வலிந்து பற்றிக்கொண்டார்.

இயேசுவின் நண்பர்கள் யார்? கிறித்தவ வாழ்வின் நான்கு முக்கிய அடையாளங்கள்

மனித வாழ்க்கையில் நட்பு ஒரு பெரும் செல்வம். ஆனால், இந்த உலகின் எந்த உறவையும் மிஞ்சும் உயர்ந்த உறவு ஒன்று உள்ளது; அது இயேசுவின் அன்பு நட்புறவு! யோவான் 15:12-17-இல் இயேசு, “நீங்கள் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், நீங்கள் என் நண்பர்கள் என்று கூறுகையில், தன்னைத்தானே எல்லாருக்கும் நண்பன் என அறிவிப்பதில்லை; மாறாக, தமது நண்பர்களின் பண்புகளைத் தெளிவாகக் கூறுகிறார். இன்று நாமும் அந்த நற்செய்தி சத்தியத்தை ஆராய்ந்து, இயேசு நம்மைத் தம் ‘நண்பர்கள் என்று அழைப்பாரா? என்பதைப் பார்ப்போம்.

1. அன்பு - இயேசுவின் நண்பர்களின் முதன்மை அடையாளம் (யோவா 15:12-13,17)

இயேசு தமது சீடர்களை, “ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள் என்று ஒரே இரவில் பலமுறை கட்டளையிட்டார். ஏனெனில், அன்பு பளபளக்கும் வார்த்தை அல்ல; தன்னலமில்லாத அர்ப்பணிப்பு. அவருடைய அன்பு என்பது சிலுவையில் தம்மைத் தாமே பலியாக அளித்த அன்பு. இன்றும் கிறித்தவர்கள் நடுவே பல மோதல்கள், பிளவுகள் ஏற்படுவதற்குக் காரணம் தன்னலம். அன்பு உணர்ச்சி மட்டுமல்ல, அது செயலாக வெளிப்படும் தியாகம். வீட்டில், தேவாலயத்தில், சமூகத்தில் நாமே முதலில் தன்னலத்தை மறுத்து, மற்றவரின் நன்மையை நாடும்போதுதான் கிறிஸ்துவின் அன்பு தெரிய வரும்.

இயேசுவின் சீடர்கள் ஒரேமாதிரியான மனிதர்கள் அல்லர்; மத்தேயு - உரோமை பேரரசின் அதிகாரி; சீமோன் - உரோமை அரசுக்கு எதிராகப் போராடிய தீவிரவாதி. இருவரையும் ஒரே குழுவில் வைத்து, “அன்பு செய்யுங்கள் என்று கட்டளையிட்டது அன்பின் உண்மையான சோதனை. தேவாலயங்களிலும் இதே சோதனை இன்று நடக்கிறது. இயேசுவின் நண்பராக இருக்க விரும்புகிறவர்களுக்கு அன்பு கட்டாயம்!

2. கீழ்ப்படிதல் - நட்பின் உறுதியான அடையாளம் (யோவா 15:14)

இயேசு கூறுகிறார்: “என் கட்டளைகளைச் கடைப்பிடித்தால் நீங்கள் என் நண்பர்கள்.” கீழ்ப்படிதல் நம்மை நண்பர் ஆக்குவதில்லை; ஆனால், நண்பனாகியவரின் அடையாளம் அதுவே. இயேசுவுடன் நெருக்கம், அவரது வார்த்தையை அறிந்து, அதை வாழ்வில் செயல்படுத்தும் இடத்தில்தான் இருக்கிறது. இயேசுவின் நண்பர் என்ற பெயர் வாயால் கூறப்படும் ஒரு பட்டம் அல்ல; வாழ்க்கை நடத்தையால் தெரியும் ஓர் உண்மை.

3. உண்மையைப் புரிந்துகொள்ளுதல் - நண்பர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு (யோவா 15:15)

அடிமைக்குத் தலைவனின் நோக்கம் தெரியாது. ஆனால், நண்பருக்கு எல்லாம் வெளிப்படையாகக் கூறப்படும். அதுபோல இயேசு, தந்தையிடமிருந்து கேட்ட அனைத்தையும் தமது சீடர்களோடு பகிர்ந்தார்.

இன்று நமக்காகத் தூய ஆவி மற்றும் இறை வார்த்தைகள் இறைவனுடைய நோக்கங்கள், நியாயங்கள், உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. இதனால் கிறித்தவர்கள் உலகத்தின் எந்த ஞானியையும் மிஞ்சிச் செல்லும் உண்மையை அறிகிறார்கள்:

படைப்பாளியான கடவுளை அறிதல்.

மீட்பின் வழியை, அருளைப் புரிதல்.

நிலைவாழ்வின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்துதல்.

வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் இறைவனுடைய நோக்கத்தை ஆழமாக அறிதல்.

உண்மையைப் புரிந்து, அதன்படி வாழ்வதே இயேசுவின் நண்பர்களின் மற்றோர் அடையாளம்.

4. கனி கொடுத்தல் - தேர்வுக்குரிய நோக்கம் (யோவா 15:16)

இயேசு தெளிவாகக் கூறுகிறார்: “நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்.” அவரது அழைப்பு வெறும் மீட்புக்காக மட்டுமல்ல; மாறாக, கனி கொடுக்க. இந்தக் கனி கிறிஸ்துவைச் சந்திக்கும் ஆத்துமாக்கள். அவர்களை அவர் காக்கிறார்; அவர்களின் வாழ்க்கை நிலைத்த கனி. ஆனால், கனி அளிப்பது மனித முயற்சியால் அல்ல, செபத்தால்! இறைவன் மட்டுமே தமது இதயத்தைத் திறந்து புதிய வாழ்க்கை அளிக்க முடியும்.

அனைவரும் சகோதர-சகோதரிகள் என அசிசியின் புனித பிரான்சிஸ் அறிவித்த ஆத்தும குரல், இன்றும் அதே வலிமையுடன் நம்மில் ஒலிக்கிறது. மனிதர்களை வேறுபடுத்தாமல் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க அழைக்கிறது நமது கிறித்தவ வாழ்வு. திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்ட ‘Fratelli tutti’ இப்படிப்பட்ட உலகளாவிய சகோதரத்துவத்தை மீண்டும் நினைவூட்டி, ‘இயேசுவின் அன்புக் கட்டளை புதியது; ஏனெனில், அதனை அவர் சிலுவையில் முழுமைப்படுத்தினார் என்கிறது.

நான் உங்களிடம் அன்புகொண்டதுபோல...” என்பது ஒரு குடும்ப மரபு அன்பல்ல; தியாகமும் மன்னிப்பும் நிறைந்த மறுபிறப்பு அன்பு. இந்த அன்பு நம்மைச் சுயநலம், பிரிவினை, பகைமை ஆகியவற்றிலிருந்து விடுவித்து, கிறிஸ்துவின் ஆவியில் புதுப்பிக்கிறது. நாம் உண்மையிலே ‘உடன்பிறந்தோர் என வாழத்தொடங்கும்போது, கிறிஸ்துவின் பாதை நம்முடைய வாழ்க்கையில் வெளிச்சமாகிறது. எனவே, அன்பில் ஒன்றிப்போம்; கிறிஸ்துவின் சமாதானத்தை உலகில் விதைப்போம்.