இறையாட்சியை வாழ்ந்துகாட்டி அடையாளப்படுத்துவதும், சுற்றியிருக்கும் சமூகத்தில் ஈடுபட்டு அதை நற்செய்தி விழுமியங்களால் ஊடுருவி அதனைப் பரவச்செய்யும் ஆற்றல்மிகுக் கருவியாகச் செயல்படுவதுமே திரு அவையின் வாழ்வும் பணியும். இவ்வாறு அது வாழவும் செயல்படவும் உதவும் வகையில் அதன் உறுப்பினர்களுக்குத் தூய ஆவியார் பல்வேறு அருங்கொடைகளையும் ஆற்றல்களையும் அளித்துள்ளார். அவற்றுள் ஆயர், அருள்பணியாளர், திருத்தொண்டர் எனும் முப்பெரும் திருப்பணிகள் திரு அவையின் அமைப்பு சார்ந்த இன்றியமையாத பணிகள். இதனால்தான் தொடக்கத்திலேயே தோன்றி இன்றுவரை அவை எல்லாத் திரு அவைகளிலும் நிலைத்திருக்கின்றன.
இவை
தொடக்ககாலத்திலிருந்து
இன்றுவரைத் திரு அவையில் நிலைத்திருப்பவை என்றாலும், வரலாற்றின் போக்கில் அவற்றைச் செயல்படுத்தும் முறை பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாகியுள்ளது. இன்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் பல. உலகின் பல பகுதிகளில் உள்ள
திரு அவைகளில் அருள்பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது; அருள்பணியாளர் மேற்கொள்ளும் கட்டாய மணத்துறவும், பரவலாக நிலவும் அருள்பணியாளர் ஆதிக்கமும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன; மேலும், பொதுநிலையினர் பல்வேறு பணிகளை ஏற்றெடுக்க முன்வந்துள்ளனர். இதனால் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கிவைத்த இப்பணிகளின் புதுப்பித்தல் இன்னும் ஆழமாகத் தொடரப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். இதற்குப் பதிலிறுப்புச் செய்யும் வகையில் 16-வது ஆயர் மாமன்றமும் இணைந்து பயணிக்கும் முறையில் இப்பணிகளை எவ்வாறு புரிந்துகொள்ளவும் செயல்படுத்தவும் வேண்டும் என்பதற்காகப் பின்வரும் சில புதிய பார்வைகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.
குழுமக் கூட்டியக்கத்திற்கு
உதவுபவர்கள்
“திரு அவையில் உள்ள எல்லாத் திருப்பணிகளைப்போல் ஆயர், அருள்பணியாளர், திருத்தொண்டர் எனும் பணிகளும் நற்செய்தி அறிவிப்பு, திரு அவைக் குழுமத்தைக் கட்டி வளர்த்தல் என்பவற்றிற்கு உதவவே இருக்கின்றன” (இஅ
68). இம்மூவகையினரும்
இறைவார்த்தைப் பணி, திருவழிபாடு, அனைத்திற்கும் மேலாக அன்பிரக்கச் செயல்பாடுகள் என்பனவற்றின் வழியாக இறைமக்களுக்குப் பணியாற்றுபவர்கள். எனினும், அவை ஒவ்வொன்றும் திரு அவையின் வாழ்விலும் பணிகளிலும் வகிக்கும் இடமும் பொறுப்பும் தனித் தன்மை வாய்ந்தது. இவற்றுள் அருள்பணியாளர்களும் திருத்தொண்டர்களும் பங்கு, நற்செய்தி அறிவிப்பு, கல்வி, கலைகள், இறையியல் ஆய்வு, அருள்வாழ்வு மையங்கள் எனப் பல வகைகளிலும் துறைகளிலும்
பணியாற்றுகின்றனர். அவர்களது அரும்பணிகளுக்காக மாமன்றம் அவர்களுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது. அவர்களுள் பலர் தனிமையையும் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர்
என்பதை உணர்ந்து, கிறித்தவக் குழுமங்கள் தங்கள் இறைவேண்டல், நட்புறவு, ஒத்துழைப்பு என்பனவற்றால் அவர்களை ஆதரிக்கவேண்டும் எனவும் அது கேட்டுக் கொள்கிறது.
ஆதிக்கம் அற்ற
அருள்பணி
அவர்களது
ஆக்கம் மிக்க பணிக்குப் பெரும் தடையாக இருப்பது அருள்பணியாளர் ஆதிக்கம். இறைவனது அழைப்பைத் தவறாகப் புரிந்துகொள்வதன் விளைவாகத் தோன்றுவதே இவ் வாதிக்கம். இது அவ்வழைப்பைப் பணி என்பதை விட சிறப்புரிமையாகக் கருதுகிறது. மேலும், இது அதிகாரத்தை உலகப் பாணியில் கையாண்டு, தன்னைத் தணிக்கைக்கு உட்படுத்த மறுக்கிறது. இவ்வாறு இது அருள்பணியாளர் அழைப்பையே சீர்குலைக்கிறது.
“தனது நலனுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவதே அருள்பணியாளர் ஆதிக்கம் என நாம் புரிந்துகொள்ளலாம்.
இறைமக்களின் பணிக்கான திரு அவையின் அதிகாரத்தை அது சீர்குலைக்கிறது. இது திருப்பணியாளர்களின் பாலியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த முறைகேடுகள், மனச்சான்று மற்றும் அதிகாரம் என்பவற்றைத் தவறாகப் பயன்படுத்துதல் எனும் பல வடிவங்களில்
வெளிப்படுகிறது” (இஅ
74). உருவாக்கத்தின் தொடக்க நிலைகளிலிருந்தே இந்த ஆதிக்க மனநிலை வேரறுக்கப்பட வேண்டும்.
“கூட்டியக்கத் திரு அவையில் அருள்பணியாளர்கள் தங்கள் மக்களுடன் நெருங்கியத் தொடர்பு, அனைவரையும் வரவேற்று அவர்களுக்குச் செவிகொடுக்கத் தயாராக இருத்தல் எனும் உளப் பாங்குடன் தங்கள் பணியை வாழ்வாக்க அழைக்கப்பட்டுள்ளனர்“ (இஅ
72). மக்களுடன் நெருங்கிய உறவு, தேவையில் இருப்போருக்குப் பணியாற்றும் நடைமுறை அனுபவம் என்பனவற்றிலிருந்து கற்றுக்கொள்வது அதற்கு இன்றியமையாதது.
அருள்பணியாளர்கள்
ஆயரின் முதன்மையான ஒத்துழைப்பாளர்கள். அவருடன் ஓர் அருள்பணிக் குழுமமாக ஒன்றித்துச் செயல்படுவர்கள். ஒருபுறம், ஆயருடனும் அருள்பணியாளர் குழுமத்துடனும் ஒத்திசைவு; மறுபுறம், ஏனைய திருப்பணிகள் மற்றும் அருங்கொடைகளுடன் ஆழ்ந்த ஒன்றிப்பு என்பன அவர்கள் தங்கள் பணியை நன்முறையில் செயல்படுத்த இன்றியமையாதவை.
மணத்துறவு பற்றி
மறு
ஆய்வு
அவசியம்
அருள்பணியாளர்களின்
மணத்துறவு இறைவாக்குத்தன்மையுடன் இயேசுவுக்கு ஆற்றலுள்ள
முறையில் சாட்சியம் பகர உதவுவது என எல்லாராலும் பாராட்டப்படுவது.
இறையியல் பார்வையிலும் அது அருள்பணியாளர் பணிக்கு ஏற்றதே. இருப்பினும், இன்று அருள்பணியாளர் பற்றாக்குறை பல திரு அவைகளில்
நிலவுகிறது. மேலும், பல பண்பாட்டுச் சூழமைவுகளிலும்
அது மிகக் கடினமாகவும் உள்ளது. இந்நிலைகளில், இலத்தீன் மரபுத் திரு அவையில் உள்ளது போன்று அது அப்பணிக்குச் சட்டமுறையில் கட்டாயத்
தேவை ஆக்கப்படவேண்டுமா? எனும் கேள்வியும் எழுப்பப்பட்டது.
பணியில் பகிர்வு
இன்றியமையாதது
அருள்பணியாளர்கள்
தங்கள் பணியில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
தனிமை, தனித்துப் பணியாற்ற வேண்டிய நிலை, மிகுதியான பணிச்சுமை என்பன அவற்றுள் முக்கியமான சில. மாமன்ற அனுபவம் கற்றுத்தரும் பின்வரும் பாடம் அவர்களுக்கு உதவ முடியும். அது இறைமக்கள் சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களின் ஒத்துழைப்பை அவர்கள் தேடி, தங்கள் பணியைக் கூட்டுப்பொறுப்புடன் நிறைவேற்ற முயல்வதே. “பணிகளையும் பொறுப்புகளையும் பரவலாகப் பகிர்ந்தளிப்பதும், என்னென்ன திருநிலைப்பாட்டுத் திருப்பணிக்கே உண்மையாக உரியன, எவற்றையெல்லாம் ஆற்ற பிறருக்குப் பதிலாள் உரிமை தரலாம், தரவும் வேண்டும் என்பவை பற்றிய துணிச்சலான தெளிதேர்வுடனும், அருள்பணிசார் இயக்கத் தன்மையுடன் அப்பணியை ஆற்ற உதவும்”
(இஅ 74). மேலும், இது முடிவெடுக்கும் முறைகளைக் கூட்டியக்கத்தன்மை உடையவை ஆக்கவும் அருள்பணியாளர் ஆதிக்கத்தை மேற்கொள்ளவும் உதவ முடியும்.
நிலையான திருத்தொண்டர்கள்
இன்னும்
ஏன்
இல்லை?
நிலையான
திருத்தொண்டர் பணி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப் பின்பே இலத்தீன் மரபுத் திரு அவையில் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், இன்றளவும் அது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரு அவைகளில் அறியப்படாததாகவே உள்ளது. “நிலையான
திருத்தொண்டர் பணி தம்மையே எல்லாருக்கும் பணியாளர் ஆக்கிக்கொண்ட இயேசுவின் மாதிரியைப் பின்பற்றித் திரு அவை தாமும் பணியாளாக வளர்ச்சி காண உதவும் பயனுள்ள வளம் என்பதை இனங்கண்டு, அதிகத் தாராளமாக அதை வழங்கத் தலத்திரு அவைகள் காலம் தாழ்த்தாமல் இருக்க நல்ல பல காரணங்களைப் (2-ஆம்
வத்திக்கான் பொதுச்சங்கம்) படிப்பினை ஏற்கெனவே தந்துள்ளது” (இஅ
73). ஆனால், இன்றுவரை அப்பணி ஏழைகளுக்கும் தேவைகளில் இருப்போருக்கும் ஆற்றப்படும் வகையில் விரிவாக்கப்படவில்லை; மாறாக, அது பெரிதும் திருவழிபாடு சார்ந்ததாக மட்டுமே நடைபெறுகிறது.
செயல்படுத்த சில
பரிந்துரைகள்
1. நிலையான
திருத்தொண்டர் பணி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
என்பது பற்றிய மதிப்பீட்டாய்வு செய்யப்பட்டு, புத்தாக்கம் பெற வேண்டும். ஏழைகளுக்கும் நலிவுற்றோருக்குமான பணியாகவும் அதை விரிவாக்கம் செய்யும் வழிமுறைகள் கண்டறியப்படவேண்டும்.
2. அருள்பணியாளர்களும்
திருத்தொண்டர்களும் தங்கள் பணிப்பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றுகின்றனர் என்பதைச் சரியான கால அளவுகளில் தணிக்கை செய்வதற்கான வழிமுறைகளையும் அமைப்புகளையும் தலத் திரு அவைகள் கண்டறிந்து நடைமுறைப்படுத்தவேண்டும்.
3. தங்கள்
திருப்பணியை விட்டு விலகியிருக்கும் அருள்பணியாளர்களின் உருவாக்கத்தையும் அனுபவத்தையும் பயன்படுத்தும் வகையில், சூழ்நிலைக்கு ஏற்ப என்னென்ன அருள்பணிகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்யலாம் என்பதை அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பச் சிந்தித்து முடிவெடுக்கலாம்.