news-details
சிறப்புக்கட்டுரை
அருள்சகோதரிகளின் மகத்தான வளர்ச்சி

புனித அலோசியஸ் கொன்சாகா சபை தொடங்கி 250-வது ஆண்டு யூபிலி விழாவைக் கொண்டாடும் அருள்சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! இந்தத் துறவற சபை ஆல்போல் வளர்ந்து, இன்னும் பல நூற்றாண்டுகள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை வளப்படுத்த எனது செபங்கள்.

ஆன்மிகத் தெளிவும் பணியின் சான்றும்

இயேசு சபையினரால் தொடங்கப்பட்டாலும், சபை புனித அசிசியாரின் ஆன்மிகத்தை (எளிமை, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் நோக்கிய பணி) பின்பற்றுவது மிகச் சரியானதொரு முன்னறிவிப்பு. உங்களின் நற்செய்திப் பணி, நலவாழ்வுப் பணி, சமூக மாற்றுப்பணி மற்றும் கல்விப்பணி ஆகியவை பல ஆண்டு காலமாக விளிம்புநிலை மக்களை நோக்கியே அமைந்திருப்பதற்கு இதுவே சான்று. உங்களின் வாழும் வரலாறு எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால் இதை உறுதியாகக் கூறுகிறேன்.

மகத்தான வளர்ச்சிக்குக் கிடைத்த பதிலடி

ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்ட நீங்கள், இன்று உலகில் எட்டுத்திக்கும் சென்று, பல மொழிகளைக் கற்று, கடவுள் பணி  செய்கிறீர்கள். ஆங்கிலம் மட்டுமின்றி, இத்தாலிய மொழி, ஜெர்மனி மொழி, இந்தி எனப் பல மொழிகளில் தேர்ச்சி பெற்று, திரு அவைக்கும் சமூகத்திற்கும் இன்றியமையாத எடுத்துக்காட்டாக உயர்ந்துள்ளீர்கள்.

உயர்கல்வி நிறுவனங்கள், இமயம் தொடும் கல்விச்சாலைகள் என இன்றைய இளைய சகோதரிகள் உருவாக்கி வருவது, உங்களைக் குறைவாக மதிப்பிட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் உரத்த பதிலடி.

இலட்சியப் பயணம் தொடர வேண்டும்

உங்கள் பயணம் இதோடு நின்றுவிடக் கூடாது. விளிம்புநிலை மக்களின் வாழ்வு, குறிப்பாக, மகளிரின் வாழ்வு உச்சங்களைத் தொட வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களைப் பல்கலைக்கழகங்களாக உயர்த்துங்கள்பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யுங்கள். மகளிருக்கான சிறப்பான நிறுவனங்கள் பலவற்றை உருவாக்கி, ‘நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்என்பதை நிரூபிக்க வேண்டும்.

உங்களை உளமார வாழ்த்துகின்றேன்... உங்களுக்காகத் தொடர்ந்து வேண்டுகின்றேன்!