வத்திக்கானில் நடைபெற்ற உலகச் சுகாதார மாநாட்டில் ‘AI மற்றும் மருத்துவம்: மனித மாண்பின் சவால்’ என்ற தலைப்பில் சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், மனிதகுலத்தின்மீது AI மற்றும் பிற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது நாம் சிந்திக்கும் விதத்தைப் பெரிதும் பாதிக்கிறது என்றும், நம்மையும் மற்றவர்களையும் நாம் எப்படி உணர்கிறோம் என்பதை மாற்றுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். “நாம் தற்போது இயந்திரங்களுடன் இடைத்தரகர்கள் போலத் தொடர்புகொள்கிறோம்; இதனால் அவற்றின் நீட்டிப்பாக மாறிவிடுகிறோம்; அவ்வாறே, நம்மைச் சுற்றியுள்ள மக்களின் முகங்களை நாம் மறந்துவிடுவது மட்டுமல்லாமல், மனிதத்தை எவ்வாறு அங்கீகரிப்பது, போற்றுவது என்பதையும் மறந்துவிடுகிறோம்” என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.