“ஆண்டவரின் செயல்கள் வியப்புக்குரியவை” (சீராக் 11:4)
பிரான்சிஸ்குவின்
புனித அலோசியஸ் கொன்சாகா சபையின் 250-ஆம் ஆண்டின் யூபிலி விழாவைக் கொண்டாடும் இந்த மாபெரும் வேளையில், எம் கொன்சாகா பெருங்குடும்பத்தில் 50 ஆண்டுகளாக... அதாவது, அரை நூற்றாண்டுகளாக வாழக்கிடைத்த பேற்றினை நினைத்து ஆண்டவருக்கு நன்றிகூறுகிறேன்.
தாயின்
கருவில் உருவாகும் முன்னரே முன்குறித்து, ‘அஞ்சாதே நான் என்றும் உன்னோடு இருப்பேன்’
என்று திடப்படுத்தி, ‘என் வல்லமையால் செயல்படு’
என்று கூறி, இன்றுவரை வாழவைத்த மாபெரும் கருணைக்கு இறைவா உமக்கு என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன். இது ஒரு சாதாரண விழா அல்ல! இது நம் சபையின் புனித வரலாற்றைப் பெரும் மகிழ்ச்சியுடன், கடவுளைப் போற்றிப் புகழ்ந்து நன்றி செலுத்தும் தருணமாகும். இந்த மாபெரும் யூபிலி நம் சபையின் நீண்ட நெடிய பயணத்தை நம் கண்முன் நிறுத்தி இறைவன்மீது கொண்ட மாறாத நம்பிக்கை, கடின உழைப்பு, பொறுமை, எளிமையான வாழ்வு, சேவை, அன்பு, தியாகம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் மாபெரும் வரலாறு ஆகும். கடந்த 250 ஆண்டுகளாகப் பல தலைமுறைகளை உருவாக்கி,
பல சாதனைகளைப் படைத்து வெற்றி பாதையில் இன்று நாம் பயணிக்கிறோம். எம் முன்னோர் வாழ்வில் ஒளிர்ந்த இறைநம்பிக்கை, எனது வழியையும் ஒளிரச் செய்தது.
என்னுடைய
பொன்விழா ஆண்டை இத்தனை பெருமைக்குரிய யூபிலியுடன் இணைத்து கொண்டாடுவதில், என் இதயம் நன்றியால் நிரம்புகிறது. இந்த ஐம்பது ஆண்டுகள் நான் அறிவு, ஆளுமை மற்றும் ஆன்மிகத்தில் வளரவும், சபை என்மீது முழு நம்பிக்கை வைத்து பல்வேறு பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்தது. உண்மையுடனும் நேர்மையுடனும் உழைத்து கிறிஸ்துவுக்குச் சாட்சியாக சான்று பகர்ந்து வாழ்ந்திட ஒவ்வொரு நாளும் ஓர் ஆசிர்வாதமாகவும், ஒவ்வொரு சவாலும் ஒரு கற்றல் அனுபவமாகவும் இருந்தது.
இன்று
பின்னோக்கிப் பார்த்து, கடவுளின் கரங்களால் எழுதப்பட்ட இந்த அருள்மிகு பயணத்திற்காக நன்றி செலுத்துகிறேன். மேலும், எதிர்காலத்தை நோக்கிப் பார்த்து, நம்பிக்கை, அன்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றோடு தொடர்ந்து வாழ்ந்து சேவை செய்திடவும், இந்த 250-ஆம் ஆண்டு யூபிலி நம் அனைவரையும் நம் தந்தை அன்சால்தோவின் கனவைத் தொடர்ந்து நிறைவேற்ற ஓர் உந்துசக்தியாக அமையட்டும். நம்
புனித தந்தை அலோசியஸ் கொன்சாகாவின் தூய்மை நம்மை வழிநடத்தட்டும்; கடவுளின் அருள் நம் சபையின் ஒவ்வோர் உறுப்பினரின் வாழ்விலும் தொடர்ந்து பெருகட்டும்; இடம் மாறி வந்தாலும் இலட்சியங்கள் தடம்மாறிப் போவதில்லை. நம்மை அழைத்தவருக்கு நம்பிக்கையோடு இருந்தால், அவர் அருள் நம் வாழ்வை வழிநடத்தும்.