news-details
சிறப்புக்கட்டுரை
வேர்களைத் தேடிய புனிதப் பயணத்தில்...!

எங்கள்கொன்சாகாபெருங்குடும்பம் இம்மண்ணில் இருநூறு ஆண்டுகளைக்  கடந்து, மூன்றாவது நூற்றாண்டை நோக்கி 250 ஆண்டுகள் உயிரோட்டம் உள்ளதாய்த் தொடர்ந்து பயணித்து, தன் இருப்பாலும் வாழ்வாலும் பணியாலும் சாட்சியம் பகர்ந்து கொண்டிருக்கின்றது என்று எண்ணும் போதே, என் உள்ளம் எல்லாம் வல்ல இறைவனை நோக்கி இருகரம் குவிக்கின்றது, கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன, பேச்சற்று மெய்சிலிர்த்து நிற்கின்றேன்.

சீராக்கின் ஞானநூல் 17:21-இல் கூறுவது போல், “ஆண்டவர் நல்லவர்; அவர் தம்முடைய படைப்புகளை அறிவார்; அவற்றை அவர் அழித்துவிடவில்லை; மாறாக, அவற்றை அவர் பாதுகாத்தார்.” ஆம், இம்மண்ணில் 250 ஆண்டுகள் துறவற அர்ப்பணம் வழி கொன்சாகாவின் துறவிகளாய் நாங்கள் பணிசெய்ய எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பிற்காய் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.

நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள், ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள், திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள், கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள் (எசா 1:17) என்ற இறை வார்த்தைகளும்,  “ஏழையருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார் (லூக் 4:16-18) என்ற நற்செய்தியின் மறைவாக்குகளும் எம் நிறுவுநர் இறை ஊழியர்  மைக்கேல் அன்சால்தோவுக்கு வாழ்வூற்றாய் அமைந்தன போன்று, எம்மவர்க்கும் ஒளிவிளக்காய் அமைந்தன என்றால் அது மிகையில்லை.

தந்தை மைக்கேல் அன்சால்தோவிடம் கனன்று கொண்டிருந்த கனலின் நெருப்பினை ஒவ்வொரு கொன்சாகா சகோதரியும் பெற்று இன்றுவரை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று பணிசெய்து கொண்டிருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை.

கி.பி. 1771-இல் இந்தியாவின் புதுச்சேரி அரிக்கமேடு பகுதிக்குக் கடல் வழியாக இத்தாலியிலுள்ள செசிலி தீவிலுள்ள மெசினா நகரிலிருந்து வந்த இயேசு சபை அருள்பணியாளர் மைக்கேல் அன்சால்தோ, அன்று தன் அன்பான பணியால், இரக்கப் பார்வையால், கருணைமிக்க உள்ளத்தால்மைக்கேல் நாதர்என்றழைக்கப்பட் டார். கி.பி. 1775-இல் தந்தை அவர்கள் தனது முதல் பயணத்தில், முதல் பார்வையில், முதல் சவாலாய் உருவாக்கிய மடம்தான் புனித லூயிஸ் தே கொன்சாகா மடம்.

தீண்டத்தகாதவர்என்று ஒரு சாராரைப் புறக்கணித்த சாதியப் பிளவுபிரெஞ்சுப் போரின் தாக்கத்தி னால் பெற்றோரை இழந்து திக்கற்றவர்களாய் அனாதைகளாக்கப்பட்ட குழந்தையர், கணவனை இழந்து தவித்த இளம் விதவை, கணவனால் கைவிடப்பட்ட திக்கற்ற மகளிர், தாழ்த்தப்பட்ட மகளிர் போன்றோர் மிகக் கேவலமாக நடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை, சுரண்டலுக்கு ஆளாகும் நிலை இருந்தது. இதுபோன்ற அடிமைத்தன அவலத்தைப் போக்க பாதிக்கப்பட்டவர்களோடு, புறக்கணிக்கப்பட்டவர்களோடு தோழமை கொண்டு, அவர்களின் மனிதம் காக்க உருவாக்கப்பட்டதுதான் புனித லூயிஸ் தே கொன்சாகா மடம் - பேரன்பின் இல்லம். இன்று இது இறையருளாலும் பராமரிப்பாலும், எம் நிறுவுநர் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோவின் செபப் பரிந்துரையாலும், எமது முன்னோர்களின் தியாக வாழ்வாலும் பெரிய விருட்சமாய் வளர்ந்திருக்கிறது. திக்கற்றவர்களுக்கு அடைக்கலமாய், உறைவிடமாய் இருந்து வருகிறது.

ஆரம்பத்தில் இயேசு சபை கலைக்கப்பட்ட போது இயேசு சபைக்கு மட்டும் இருண்ட காலம் அல்ல; இயேசு சபை கலைக்கப்பட்ட வேளையில் மறைப்பணியாளராக இந்தியா வந்து, தனது கொள்கையில் உறுதியாக நின்ற அருள்பணி. மைக்கேல் அன்சால்தோவால் உருவாக்கப்பட்ட எம் சபைக்கும் அது இருண்ட காலமே. அதனால் எம் சபை அமைதியான, ஆடம்பரமில்லா ஒரு வரலாற்றை தன்னகத்தே கொண்டு, மறைக்கப்பட்ட உலகிற்குத் தெரியாத ஒரு சபையாக இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே. ஆனாலும், கைவிடப்பட்ட இயேசு சபை அருள்தந்தையாக இருந்தாலும், மாற்று வாய்ப்புகள் இருந்தாலும், சொந்த நாட்டிற்குச் செல்லாமல், தான் விரும்பி ஏற்ற மறைப்பணியைச் செய்வதிலேயே அதிமிகு ஆர்வம் கொண்டார். அதோடு நின்றுவிடாது மக்களிடையே மலிந்து கிடந்த மூடப்பழக்க வழக்கங்களை  வேரறுக்கவும், சமூகத்தில் கல்வி மறுக்கப்பட்டுகடைநிலையினர்என்று முத்திரை குத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி அறிவைப் புகட்டவும், மகளிரின் அடிமைத்தன விலங்கொடித்து, சுயமாய் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து, சுயதொழில் செய்து முன்னேற அவர்களுக்கான நெசவுத் தொழிற்கூடங்களை உருவாக்கியும் எனப் பல்வேறு சமூக அக்கறையுள்ள பணிகளை ஈரமுள்ள நெஞ்சுரம் கொண்டவராய் செய்தார். தான் மட்டும் செய்யாமல், தன் அர்ப்பணிப்புப் பணியில் இயேசுவின் அடியொற்றி அர்ப்பணிப்புடன் தன்னலம் மறுத்து வாழ்ந்த ஆர்வமுள்ள மகளிரையும் இணைத்துக்கொண்டார். இவர்களைக் கொண்டு ஆதரவற்ற சிறார்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை குழந்தையருக்குக் கல்வி புகட்டினார். கைம்பெண்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான மகளிருக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கினார்.

சுயமாகப் பொருள் ஈட்டும் வகையில் தொழிற் கல்வி அளித்து, சுயமரியாதையோடு வாழ வழி செய்தார். பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போன்று, தந்தையோடு இணைந்து பணியாற்றிய சகோதரிகளுக்கும் ஆழ்ந்த இறைநம்பிக்கையும் சமூக அக்கறையும் ஒடுக்கப்பட்டோர்மீது பரிவிரக்கம் காட்டுவதும் இயல்பாகிப் போனது.

கி.பி. 1778 முதல் கி.பி. 1903 வரை 125 ஆண்டுகாலம் வரை 8 தலைமைத் தாயார் நியமனம் பெற்று, தங்களிடம் அடைக்கலம் தேடி வந்த பிள்ளைகளை, இளம் சகோதரிகளைக் கொண்டு பாதுகாப்புடன் பராமரித்து வந்தனர். சகோதரிகளுக்கென்று ஒழுங்குகளும், தினசரி செபிக்கும் செபங்களும், அவர்கள் அணிந்துகொள்ளும் உடைகள் குறிப்பிட்ட நிறங்களைக் கொண்டதாய் சீருடையாய் வடிவமைத்துத் தரப்பட்டன. 1858 முதல் துறவு உடை அணியத் தொடங்கினர். பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையோடு இணைக்கப்பட்டதோடு, திருப்புகழ்மாலை செபிக்கவும் பழகிக் கொண்டனர். பல்வேறு அன்னையர்கள், சகோதரிகள் பாண்டி தவிர பிற இடங்களில் பணி செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர். பாண்டிச்சேரியில் பொதுப்பள்ளியில் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. 18.07.1886 முதல் திருத்தந்தை 13-ஆம் லியோ அவர்களால் திரு அவை அங்கீகாரம் பெற்ற சபையாக வளர்ச்சி கண்டது. 1903 முதல் தேர்தல் வழி சபை தலைமைச் சகோதரிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைமைச் சகோதரி அன்னை கிளாரம்மாள்.

1903 முதல் 1964 வரை தேர்வு செய்யப்பட்ட தலைமைச் சகோதரிகள் கல்விப்பணி, மறைப்பணியோடு பல்வேறு அருள்பணிகளைத் தங்கள் பணிகளாக இணைத்துக் கொண்டனர். பல்வேறு இடங்களில் புதிய புதிய பணித்தளங்கள் உருவாயின. 1929-இல் மியான்மரில் பணி செய்ய சகோதரிகள் அனுப்பப்பட்டனர். சிறிது நிலங்கள் வாங்கப்பட்டன. குழந்தையர் பராமரிப்பைச் சீரிய முறையில் செய்ய பால்வாடிகள் தொடங்கி நடத்தப்பட்டன. செவிலியர் படிப்பு, தட்டச்சுப்படிப்பு  போன்றவை சகோதரிகளுக்கு உயர் படிப்பாக வழங்கப்பட்டன. தொடக்க நிலையிலிருந்து சகோதரிகள் சிறிது முன்னேற்றம் கண்டனர். ஆனால், சகோதரிகளிடமிருந்து இறைப்பக்தி, சமூக அக்கறை, ஒடுக்கப்பட்டோர்மீது காட்டிய பரிவிரக்கம் கொஞ்சமும் குறைவுபடவில்லை.

1899 முதல் 1922 வரை மூன்று முறை தலைமை அன்னையாய் விளங்கிய காணிக்கை மேரி, தவ வாழ்வின் மணிமகுடமாய் விளங்கினார். இரவு நேரங்களில் விழித்திருந்து செபித்தவர் இவர்.

1935-1958 வரை மூன்று முறை சபைத் தலைவியாய் உயர்த்தப்பட்ட அன்னை பெர்க்மான்ஸ் மேரி, நற்கருணையில் வாழ்வு உள்ளது என்பதை உணர்ந்து நற்கருணைப் பக்திக்கு அனைவரையும் உந்தித் தள்ளியவர் என்பது எம் சபைக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

1959-1964 வரை சபைத்தலைவியாக இருந்து வழிகாட்டியவர் அன்னை ழாந்தார்க் மேரி. இவர்கள் ஒழுங்குகளை அனுசரிப்பதால் மட்டுமே உயர்வடைய முடியும் என்பதை எண்பித்துக் காட்டினார்.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு எம் சபையிலும் பல்வேறு வளர்ச்சி நிலைகள், ஏற்றங்கள், உயரங்கள் எட்டப்பட்டன. மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்று அழைக்கப்பட்டவர் அன்னை டென்னிஸ் மேரி. இவர் 1965-1976 வரை இரண்டு முறை சபைத்தலைவியாகத் தலைமைப் பொறுப்பில் இருந்தார். சமகாலத்தை உணர்ந்து, சபையின் வளங்களைக் கண்டறிந்து, செயல்திட்டம் தீட்டிசபையைச் சார்ந்த பணிகளைச் செழுமையாக்கினார்.

அன்னை பார்பரா மேரி அவர்கள் 1977-1982 வரை சபையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வரலாற்றில் இடம்பெறச் செய்தார். தனித்து விடப்பட்ட பர்மா சகோதரிகள் மீண்டும் நம் தாய்ச் சபையோடு இணைக்கப்பட இணைப்புப் பாலமாய்ச் செயல்பட்டார். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்கிட 1978-இல் ஆந்திராவில் உள்ள இராப்பூரில் பணி செய்ய வாய்ப்பைப் பெற்று மனிதநேயத்தை வென்றெடுத்தார்

சிகரங்களை நோக்கி கொன்சாகா பெருங் குடும்பத்தைப் பயணிக்க வைத்தவர், 1983 - 1994 வரை சபையை வழிநடத்திய அன்னை நம்பிக்கை மேரி. சபையானது வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு, வட்டாரத் தலைவியர் ஓராண்டு நிர்ணயிக்கப்பட்டும், பிறகு தேர்தல் முறையிலும் தேர்வு செய்யப்பட்டு ஆளுகையில் உடன் பணியாளர்களாக மிளிர்ந்தார்கள். சகோதரிகளிடம் அளவு கடந்த அன்பும், இறை நம்பிக்கையில் ஆழமாய் வளர்த்தெடுக்க வேண்டுமென்ற தாய்க்குரிய பாசமும் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் மிளிர்ந்தது. தவறு காணும் இடத்தில் கண்டித்துத் திருத்தும் தந்தையாகவும், மன்னிக்கும் இடத்தில் வானகத் தந்தையாகவும் செயல்பட்டு அனைவருக்கும் முன்மாதிரிகையாய் திகழ்ந்தார்.

சமூக சீர்திருத்தவாதியாய், சமூகத்தின்மீது அக்கறை கொள்வதே நம் நிறுவுநர் மைக்கேல் அன்சால்தோவின் உள்ளுயிர் என்பதை ஒவ்வொரு சகோதரியரும் உணரச் செய்தவர் 1995-2000 வரை சபையை நிர்வகித்த அன்னை L.C. மரியா. விளிம்பு நிலை மக்களை மையத்திற்கு அழைத்து வருவதே நம் பணி என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளச் செய்தார். எம்மவர் உள்ளத்தில் சாதனையாளராய் எப்போதும் மிளிர்கின்றார். இவர் காலத்தில்தான் கொன்சாகா சபையின் புகழ் திருச்சபையெங்கும் பரவத் தொடங்கியது. ஏனென்றால், இவரது அயராத முயற்சியால் 1996 அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களால்  எம் சபை திருத்தந்தையின் நேரடி ஆளுகைக்குட்பட்ட சபையாக உயர்த்தப்பட்டது. இது திரு அவையால் எம் சபைக்குக் கிடைக்கப்பெற்ற  மாபெரும் அங்கீகாரம். இவரின் இந்தப் பணி எம் சபை உள்ளவரை மறக்கப்படாது. 1997-இல் வட்டாரங்கள் தன்னிறைவோடு கூடிய மாநிலங்களாய் உயர்ந்திட வழிகாட்டி நின்றார்.

எல்லாரும் நலம் பெற்றவராய், வளங்கள் பல சபைக்குரியதாய் மாற்றப்பட, சபை பல உயரங்களை எட்டிட வித்திட்டவர் 2000-2012 ஆண்டுகள் சபைத் தலைவியாக அரும்பணியாற்றிய அன்னை நோயல் ராணி அவர்கள். உயர் கல்வி அளிப்பதற்காக நிறுவுநரின் பெயரால் கல்வியியல் கல்லூரியையும், சபையின் பெயரால் கலை மற்றும் அறிவியல் கல்லூரியையும் உருவாக்கி, சபையைப் பல உயர்ந்த சபைகளின் வரிசையில் நிலைநிற்கச் செய்தார். சபை அமைப்புச் சட்டம் மற்றும் வழிநூலைத் தொகுத்து, அதற்குரிய திரு அவை அங்கீகாரம் பெறச்செய்து அனைத்துச் சகோதரிகளும் துறவற அர்ப்பண வாழ்வில் ஆழம்பெறச் செய்தார். அசுர வளர்ச்சியைச் சபையும், சபை சகோதரிகளும் பெற்றிட வழி செய்தார். இவரின் காலத்தில் சபைக்கென்றுவாழ் வகம்என்ற நற்செய்திப் பணிமையம் உருவாக்கப்பட்டு, அதில் பல பொதுநிலையினர், சகோதரிகள் இன்றும்  பயிற்சிபெற்று வருவது திரு அவைக்காகப் பல நற்செய்திப் பணியாளர்களை உருவாக்குவது எம் சபைக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வரம்.

நமது பணிகளை இந்தியாவின் இதயமாம் தில்லியை நோக்கி, வட மாநிலங்களை நோக்கி நகரச் செய்தவர், 2012-2018 வரை சபையை வழி நடத்திய அன்னை மேரி ஸ்டெல்லா. வட மாநிலத்தில் நம் சிறகை விரித்துக் கிளை பரப்பிட அயராது உழைத்தார். சகோதரிகளைத் தன்னிறைவு கொண்டவர்களாய் உருவாக்கிட மேற்படிப்புப் படித்திட வழிகாட்டினார். தொழில்நுட்பங்களைச் சகோதரிகள் கற்றுத் தேர்ந்திட வாய்ப்பு வழங்கியதோடு, இசை குறுந்தகடுகளை உருவாக்கிட ஆர்வம் உடையவராய் அனைத்துச் சகோதரிகளையும் ஈடுபாடு உடையவராக்கினார். மேலும், சபைக்கென கொன்சாகா அனிமேஷன் மையத்தை உருவாக்கிய பெருமை இவரைச் சார்ந்தது. ஒரே சமயத்தில் 120 நபர்கள் இதில் தங்கிப் பயனடையும் ஒரு தளமாக இது இருப்பது கூடுதல் சிறப்பு

சபை நிறுவுநர் மைக்கேல் அன்சால்தோ புனிதராவதற்குத் தகுதி உடையவர். அவரது புனிதர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள தடையேதும் இல்லை என்பதை உலகறியச் செய்து, இறை  ஊழியர் மைக்கேல் அன்சால்தோ என எல்லாராலும் அழைக்கப்பட சிறப்பான முயற்சியைச் செய்தவர் 2018-2024 வரை சபைத் தலைவியாக இருந்து செயல்பட்ட அன்னை G. ராஜாமணி அவர்கள். வட மாநிலத்தைத் தனி வட்டாரமாக உயர்த்தியும், புனித வளனாரின் பெயரில் புதிய கல்லூரியை உதயம் பெறச் செய்தும், வளங்களை அதிகப்படுத்தியும் எனப் பல்வேறு சாதனைகளை நிறைவேற்றி சரித்திரத்தில் கொன்சாகாவை இடம்பெறச் செய்தார். மேலும், நிறுவுநருக்காக மணிமண்டபம் அமைத்து, இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோவின் வழி அனைவரும் இறைவனின் பதமலரைப் பற்றிக் கொள்ள வழிவகுத்தார்.

சபையின் 250 ஆண்டுகால அசுர வளர்ச்சியைப் பார்க்கையில், முகவரியற்றவர்களின் முகமாய் சகோதரிகள் மாறிப் போயிருக்கிறார்கள். சமூக அவலங்களைக் கண்டு சமரசம் செய்துகொள்ளாமல், சாட்டை எடுத்து எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய இயேசுவைப் பின்பற்றி, சமூகத்தின் சீர்கேடுகளைத் தூய்மைப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களாய் உருமாறியிருக்கிறார்கள். மானுடத்தின் மாண்பு சிதைக்கப்படும்போதெல்லாம் மறு கிறிஸ்துவாய் தங்களை உருமாற்றி, மானுடத்தைத் தலைநிமிரச் செய்திருக்கிறார். புனித அலோசியஸ் கொன்சாகாவின் தூய்மையான வாழ்வையும் இறைநம்பிக்கையையும் தம்மிரு கண்களாகக் கொண்டு ஈரமுள்ள நெஞ்சம் கொண்டவர்களாய் இயேசுவின் பார்வை கொண்டு, எளியோரை உற்றுப்பார்த்துப் பணிவிடை செய்திருக்கிறார்கள்.

வானகத் தந்தையே தன் தந்தை, இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் தன் சகோதரர், சகோதரிஎன நினைத்து, எல்லாவற்றையும் இழந்து நிர்வாணமாய் நடுத்தெருவில் நின்ற புனித பிரான்சிஸ் அசிசியைப் போன்று ஆடம்பரம் விடுத்து, அந்நியராய் யாரையும் எண்ணாமல், சாமானியர் போன்று சாமானியரோடு கைகோர்த்து எளிய வாழ்வே ஏற்றமிக்கது என்பதை ஏற்று யாரும் பணி செய்ய முடியாத இடங்களைத் தேர்வு செய்து, அங்கே அன்பு ஒன்றை மட்டும் ஆடையாக அணிந்து பணி செய்திருக்கிறார்கள்.

எம் மூத்த அன்னையரின், அவர்தம் புனிதம் நிறைந்த புண்ணிய வாழ்வை நினைத்துப் பார்க்கையில், அன்பும் அடக்கமும் அமைதியும் தவழ்ந்திட, ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாத வாழ்வை      இலைமறை காய்போல் ஈரக்கசிவைக் கண்களில் பனிக்கச் செய்து, உண்மையை உரக்கப் பேசி, உள்ளதை எல்லார்க்கும் பகிர்ந்தளித்து, ஊனமில்லா இதயம் கொண்டு, எளிய மனம், எளிய பணி, எளிய வாழ்வு என்பதில் ஏக்கம் கொண்டுஇயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதே எங்களின் உன்னதப் பணி என்று எண்ணிஐயம் களைந்து ஒற்றுமையைத் தங்கள் பாடமாக்கி, ஒவ்வொரு பேச்சும், விடும் மூச்சும்  ஒடுக்கப்பட்டோருக்காய் அமைய வேண்டுமெனஓராயிரம் இடர்களை எதிர்கொண்ட போதும் இடிந்து போகாமல், தடைகள் வந்த போதும் தளர்ந்து போகாமல், அவமானங்கள் பல சந்தித்த போதும் உடைந்து போகாமல், சறுக்கல்கள் பல வந்த போதும் சஞ்சலம் கொள்ளாமல், சோகங்கள் வந்த போதும் வேதனை கொள்ளாமல், சோதனை வந்த போதும் சோம்பித் திரியாமல், நலிவுற்ற போதும் வேதனை கொள்ளாமல், நலிவுற்ற போதும் நடுங்கிப் போகாமல், நாணயத்தையும் நேர்மையையும் கடின உழைப்பையும், நிறுவுநரின் கனவையும் நெஞ்சுரமாக்கிக் கொண்டு எல்லாக் காலங்களிலும் நேரங்களிலும்  எம்மவரின் ஒவ்வோர் அசைவும், எம் பணிகளுக்கான இசைவும் நாங்கள் பயணிக்கும் திசையும் ஒடுக்கப்பட்டோர் உரிமை பெற்று வாழ என்பதைத் தாரக மந்திரமாய்க் கொண்டு, நிறுவுநரின் உள்ளுயிரை நனவாக்க  கனவு கண்டால் மட்டும் போதாதுநிறைவேற்றுவதில் எம்மவர்க்கு முழுப் பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட உண்மைத் தொண்டராய்  வீறு கொண்டு  எழவேண்டும் என்பதை உணர்கின்றோம்.

சிறகு கிடைத்தவுடன் பறப்பதற்காக அல்லமாறாக, சிலுவை கிடைத்தவுடன் சுமப்பதுதான்  உண்மையான பணி வாழ்வு என்பதை உணர்ந்துஒருங்கிணைந்து செயல்பட ஒன்று கூடுகின்றோம். எம் அன்னையர், மூத்தவர், முன்னோர் போன்று சவால்கள் மேல் சவாரி செய்து சாதனை படைத்திடவும், சரித்திரத்தில் இடம்பிடித்து இன்னும் பல நூறு ஆண்டுகள் எம் சபை நிறுவுநரின் பாதையில் தீரமாய்ப் பயணித்திட உழைப்பை மட்டும் தானமாய் கொடுக்க இருக்கின்றோம்.

இவ்வீரக் காவியங்களில் துயரங்களையும் துக்கங்களையும் தூர எறிந்துவிட்டு, தொடரவிருக்கும் பயணத்தைச் சலிப்பின்றி-களைப்பின்றிக் கடப்பதற்கு, எம் அன்னையர்களின்  அனுபவப் பாடங்களை எங்களுடையதாய்  மாற்றிக் கொள்கின்றோம். தலை சாயும் நிலையே வந்தாலும் தன் மானத்தை ஒரு போதும் இழந்து போகாமல், தியாகத் தாய்களாய் கொன்சாகா பெருங்குடும்பத்தை 250 ஆண்டுகளைக் கடக்க உதவிய அன்னையரை ஒரு போதும் மறந்து போகாமல், நெஞ்சுரத்தின் ஆழத்தில் நிலைநிறுத்தி நெஞ்சுரம் பெறுகின்றோம்.

விடியல் தேடிய பயணத்தை வீறுகொண்டு தொடர்கின்றோம். வீண் பேச்சகற்றி விவிலிய பேச்சாக மட்டுமே எம் பேச்சை மாற்றிக்கொண்டுசுவாசிக்கும் மூச்சும் யாசிக்கும் கரங்களும் யோசிக்கும் மூளையும் எம் இலக்கு மக்களுக்குரியதாய் மட்டும் அமையும் என எம் முன்னோரின் வாழ்வை மாதிரியாக்கிஎங்களுடையதாய் உருமாற்றிக் கொள்கின்றோம்.

நாங்கள் தொடர இருக்கும் பயணம் எம் அன்னையர் தொட்டு விட்டப் பயணத்தின் தொடர்ச்சியே என்பதை மறந்து போகாமல், வலிகளை வலிந்து பற்றிக்கொண்டு வாழ்வு நெறிகளைக் கருத்தாய்ப் பின்பற்றி, சமூகத்தின் இழிநிலைகளுக்கு எங்களது வாழ்வால், பணியால், ஆன்மிக உறவால், பதிலிறுக்கத் தெடர்ந்து காலம் காட்டும் திசை நோக்கிப்  பறக்கத் தொடங்கியிருக்கின்றோம். தூரம் அதிகம் என்றாலும் பாரமாய் எண்ணாமல் சாரம் கொடுத்த இயேசுவையும்  இயேசுவைப் பின்பற்றிய எம் பாதுகாவலர் புனித அலோசியஸ் கொன்சாகா, புனித பிரான்சிஸ் அசிசி, எம் நிறுவுநர் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ, இயேசுவின் வளர்ப்புத் தந்தை புனித யோசேப்பு, மீட்பின் திட்டத்தில் பங்கெடுத்த அன்னை மரியா...  இவர்களின் வாழ்வின் அனைத்துப் புண்ணியங்களை, புண்ணிய முயற்சிகளை, தியாகங்களை எங்களுடையதாய் மாற்றிக்கொண்டு, புனிதத்தில் நிறைவு காண புதுப் பார்வையோடு, புதிய உத்வேகத்தோடு புறப்பட்டிருக்கின்றோம்.

இதோ இன்று முதல் எங்கள் பேச்சு, நாங்கள் விடும் மூச்சு, எங்கள் பணி இயேசுவின் உண்மை சீடத்திகளாய் மட்டுமே  எங்களை அடையாளப்படுத்தும். அதற்காய் எங்களை இழப்போம். எம் நிறுவுநரின் கனவினை நனவாக்க முன்னோரின் வழிகளில் எம் இலக்கு மக்களுக்காய் தொடர் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்வோம். இதுவரை காத்தவர் இனியும் காப்பார், வழிநடத்துவார் என்பதே எங்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை நங்கூரத்தை  இதயத்தில் இறக்கி வைத்துள்ளோம். இறையாசிர் எங்கள் ஒவ்வொருவர் மீதும், எங்கள் சபை மீதும், நாங்கள் பணி செய்யும் மக்கள் மீதும், எங்களை வழிநடத்தி, ஆலோசனைகள் அளித்து வரும் திரு அவையின் ஒவ்வொரு தலைவர்கள் மேலும் என்றும் தங்கட்டும்.

காரிருளில் ஒளிக்கீற்றல் மின்னுவதுண்டு. முட்டும் சந்துகளில் முன்னேற்றத்திற்கான  புதிய பாதை தெரிவதுண்டு (கிடைப்பதுண்டு). முடிந்து விட்டது என்றெண்ணும்போதுவெற்றியின் புதிய தொடக்கங்கள் பிறப்பதுண்டு. அதற்கு உயிருள்ள சாட்சி எம் தாயாம் பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா. புனித லூயிஸ் தே கொன்சாகா மடமாய் மண்ணில் விழுந்த சிறிய விதை  பெரும் விருட்சமாய்க் கிளைப்பரப்பி எம் நிறுவுநரின், முன்னவரின், மூத்தோரின், அன்னையரின், அன்புப் பணிகளுக்குச் சாட்சி சொல்கிறது.

இதோ இன்று நாங்களும் கிறிஸ்துவின் அன்புக்குச் சாட்சி சொல்ல  வேர்களைத் தேடிய புனிதப் பயணத்தில் எங்களை இணைத்துக் கொண்டு, இன்னும் பல  பிரமாண்டங்களை, இறை விருப்பத்தில் பல அதிசயங்களைக் காண இறையோடு எம் கரம் சேர்த்துப் பலம் பெறுகின்றோம்.

வாழ்க எம் தாயாம் கொன்சாகா! எம்மவரின் இலக்கு மக்கள் பணியால் இறைவன் புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும்.

இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக!