தமிழ்நாடு அரசியலும் திரைத் துறையும் பின்னிப் பிணைந்தவை. 1950-களுக்கு முன் சேலம், கோவை என்ற ஊர்களில் படப்பிடிப்புத் தளங்கள் இருக்கும். படப்பிடிப்புகள், படப்பிடிப்புத் தளங்களில் மட்டுமே நடக்கும். பாலு மகேந்திரா, மகேந்திரன், பாரதி ராஜா போன்ற இயக்குநர்கள் வந்தபின்பு பொதுவெளிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
கோவை
இராமநாதபுரம் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா, 16 திரைப்படங்களை
எம்.ஜி.ஆர். அவர்களைக்
கதாநாயகனாகக் கொண்டு தயாரித்தவர். இவர் விலங்குகளை வைத்து திரைப்படம் எடுத்துப் பெரும் பணம் ஈட்டினார். இவர் ஒருமுறை செய்தியாளர்களிடம் “விலங்குகள் கால்ஷீட் சொதப்பாது; ஒரு படம் ஓடிவிட்டால் அதிக சம்பளம் கேட்காது; தயாரிப்பாளரை வீண் தொந்தரவு செய்யாது”
என்றார். சின்னப்பாவை எம்.ஜி.ஆர். ‘முதலாளி’ என
அழைப்பார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
எம்.எம்.ஏ. சின்னப்பா பணத்தை
மூட்டைக் கட்டிக்கொண்டு படம் எடுக்க வந்ததைப் பார்த்த இந்தி திரைப்படத் துறையினர் அதிர்ந்தனர். இவர் தன் வருவாயில் நான்கில் ஒரு பங்கை பழனி, மருதமலை கோவில்களுக்கு வழங்கினார் என்பது கூடுதல் தகவல்.
இந்தச்
சின்னப்பா ‘ஆட்டுக்கார அலமேலு’ என்ற திரைப்படத்தை எடுத்தார். மந்த புத்தியுள்ளது எனக் கூறப்படும் ஆடு, திரைப்படத்தில் அற்புதமாக நடித்து அசத்தி இருந்தது. திரைப்படம் வெள்ளி விழா கண்டது. அன்று வெள்ளி விழா என்பது 175 நாள்கள் ஓடுவது. திரைப்படத்தில் நடித்த ஆட்டை ஊர்கள் தோறும் திரையரங்குகளில் காட்சிக்கு அனுப்பினார். ஆட்டைப் பார்க்க கூட்டம் அலை மோதியது. நெரிசல் அதிகமானது. இதைக் கண்டு வருத்தமுற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதினார்: ‘ஆடு கம்பீரமாகத்தான் நிற்கிறது; ஆனால், மனிதர்கள்தான் மந்தையாகிப் போனார்கள்.’ இன்று நாட்டு நடப்பும் அப்படித்தானே இருக்கிறது!
சில
வருடங்களுக்கு முன் அதிகபட்சமாக, பள்ளிக் குழந்தைகள் தங்கள் கதாநாயகனை, கதாநாயகிகளைக் காண வீட்டிலிருந்து காணாமல் போவர். சிலர் அந்தக் கதாநாயகனை, கதாநாயகியைக் கல்யாணம் செய்வேன் என ஊர் முழுவதும்
கூறிக்கொண்டு அலைவர். பெண்கள் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டப்பட்டு எல்லாம் இழந்தார்கள். இரசிகர்கள் கட்-அவுட்டுக்குப் பாலாபிஷேகம், பட வெளியீடு அன்று
திரையரங்குகளில் திருவிழாக்கள் நடத்தினர். இதில் ‘எங்க தலைவனுக்குதான் பெரிய கட்-அவுட்’ என உயரப்போட்டி நடத்தினர்.
பரிணாம வளர்ச்சியாக ‘பாக்ஸ் ஆபிஸ்’ புள்ளி விவரங்களைப் போட்டு நொறுக்கினர்.
ஒரு
கதாநாயகி ஒரு முக்கிய நகரத்தில் நகைக்கடையைத் திறக்க வருகிறார். நகரப் போக்குவரத்து மூன்று மணி நேரம் முடங்கிப்போகிறது. சமீபத்தில் கண்ட ஒரு கட்சி அதிர்ச்சி அடைய வைக்கிறது. சுற்றுலாத்தலம் ஒன்றில் ஓடாத ஒரு படத்தில் ஒரேயொரு காட்சியில் நடித்த ஒரு பெண்மணியை அடையாளம் கண்ட கூட்டம் புகைப்படம் எடுக்க, கைகுலுக்க அலைமோதியது. அதிர்ந்து போனோம். அதன் உச்சமாக இரசிகர்கள் என்ற சுயம் இழந்தவர்களால், சுயாதீனம் இல்லாதவர்களால், அவர்களது சிந்தனையற்ற செயல்களால், அக்கறையின்மை காரணமாக, புத்துயிர் பெற்ற இரசிகச் சடலங்களால் ஓர் ஊரே பிணக்காடாகி உள்ளது. வழிநடத்தப்படாத
அரசியல் மோதலின் வழி, சக்தி வாய்ந்த துன்பவியல் அரங்கேறி உள்ளது. இவை நம் வார்த்தைகள் அல்ல; சோம்பிகள் குறித்த அகராதி தரும் விடையிது. இது தமிழ்நாடு அரசியலில் கால் பதித்துள்ள ‘இரசிகர்கள்’ என்ற
புதிய தலைமுறையினருக்குப் பொருந்தும்.
1970-களில் எழுத்தாளர்
ஜெயகாந்தன் ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’
என்ற கதையில் பாமர மக்களின் சினிமா மோகம் பற்றி எழுதியிருக்கிறார். அன்று கவிஞர் கண்ணதாசனும், நடிகர் சிவாஜி கணேசனும் காங்கிரஸ் சார்பாகத் திரைத்துறையில் எம்.ஜி.ஆருக்கு எதிராகக்
களம் கண்டனர். கண்ணதாசன் தன் பத்திரிகையில், ‘சினிமாவுக்குப் போன சித்தாள்’
என்று சிறுகதையாக எழுத ஆரம்பித்து, அது ஐந்து, ஆறு வாரம் வருகிற குறுநாவலாக முடிந்தது. சினிமா போதையில் ஓர் ஏழைக் குடும்பமும், அடித்தட்டு மக்களும் பாதிப்பதைப் படம்பிடித்தது அந்தக் குறுநாவல். எம்.ஜி.ஆர். அவர்களை
‘ஆயிரத்தில் ஒருவன்’ என்பதிற்குப் பதில், ‘இலட்சத்தில் ஒருவன்’ என்றும் ஜெயகாந்தன் கதையை வடிவமைத்தார். அன்றைய தி.மு.க.வினர் இச்சிறு கதையை எழுதிய எழுத்தாளர் ஜெயகாந்தனைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். அன்று தி.மு.க.
விதைத்த வினையை இன்று அதே தி.மு.க.வே அறுவடை செய்கிறது.
பின்னாள்களில்
ஆந்திர முதல்வராக என்.டி. ராமராவ் பதவி ஏற்றபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறினார்: “தமிழ்நாட்டைப் பிடித்த சனி ஆந்திராவையும் பிடித்தது”
என்று. மின்னணு ஊடகங்கள் வளர்ச்சிப்பெற்ற நிலையிலும், கதாநாயகப் பிம்பம் உடைபடவில்லை. ஏழை, எளிய, அடித்தட்டுப் பாமர மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அதிலும் 75 சதவிகிதம் பேர் இளைஞர்கள் என்பது பெரும் கவலையளித்தது. தங்களைச் சுற்றிய சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை உணர்வதில்லை. ஏன், அன்றாட நாட்டு நடப்புகள் தெரியாத கூட்டமாக இருக்கிறார்கள். தமிழினத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற அடிப்படை அறியாத, சினிமா மோகத்தில் எடுப்பார் கைபிள்ளைகளாக உள்ளார்கள். அடிப்படை நிலைகளைப் புரிந்துகொள்ளாத அறிவிலிகளாக உருமாறி விட்டார்கள். இவர்கள் தங்கள் திரைநாயகனின் திரைக்கதை போன்ற கனவு உலகில் வாழ்கிறார்கள். இவர்களது கதாநாயகனும் அப்படியே வாழ்கிறார்.
எனது
இளம் வயதைத் தன் கதைகளால் பெரிதும் ஆக்கிரமித்தவர் பாலகுமாரன். அவரை இன்றைய இளைய தலைமுறைக்கு ரஜினிகாந்த் அவர்களின் பஞ்ச் டயலாக் வசனகர்த்தா எனக் கூறி அறிமுகம் செய்யலாம். அவர் கதாநாயக நடிகர்கள் பற்றிக் கூறுகிறார்: “நடிகர்களிடம் எங்கோ தவறு இருக்கிறது. நான் சாதாரணமானவன் இல்லை என்கிற எண்ணம் இருக்கிறது. யாரோ கதை சொல்ல, எவரோ வசனம் எழுத, எந்த இயக்குநரோ தவித்துத் தண்ணீராய் உருகிப் படம்பிடிக்க, இரவு-பகல் தெரியாது, அவர் நடிப்பு குறை தெரியாது, யாரோ பிலிம் தொகுத்துக் கொடுக்க, பின்னணி இசை சேர்க்க, நூறு பேர் சேர்ந்து வெளிச்சத்தில் ஓர் ஆளைத் தூக்கிப்பிடிக்க, வெளிச்சத்தில் கண்ட ஆளே அத்தனைக்கும் காரணம் என மக்கள் நம்ப,
அந்த ஆள் உலகமே தன் காலடியில் என்று நடக்க... சினிமா விசித்திரம்தான்.”
எல்லாக்
கதாநாயர்களின் நினைப்புகூட இதுதான். இவர்கள் மனநலக் குறிப்புகளில் உள்ளபடி என்.பி.டி. எனப்படும்
சுயநலச் சிக்கல்களால் பாதிப்பு அடைகிறார்கள். இது இன்று முதல்வர் கனவு, கலவரம் என்று நிறுத்தி இருப்பது கண்கூடு. இவர்களது வெறிபிடித்த இரசிகர்களின் வழிபாட்டுக் கலாச்சாரம் (கல்ட்) உயிர்ப் பலிகளை வாங்கியுள்ளது. துன்பவியல் நிகழ்விற்குப் பின்னான அவர்கள் தங்கள் பதிவுகள் வழியே கதாநாயக நடிகர் பின் நின்றார்கள். நேரில் மட்டுமல்ல, சமூக வலைத்தளப் பதிவுகளில் கூட உயிரிழந்த, காயமடைந்த மக்கள் பின் நிற்கவில்லை. இது பெரும் இனக் கொடுமை அன்றோ! இது நம் தமிழ்ச் சமூகம் முன்னுள்ள பெரும் சவால் என உணர்ந்து, அறிவார்ந்த
பெற்றோர், தம் குழந்தைகளுக்கு ஊடகக் கல்வி புகட்டும் அளவு விழிப்புணர்வு பெறவேண்டும்.