news-details
சிறப்புக்கட்டுரை
வரலாற்றுச் சிறப்புமிக்க யூபிலி

பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சபையின் (FSAG) 250-வது யூபிலி விழா மிகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் உள்ளது.

இந்த எனது உரையில் சபையின் தோற்றம், நிறுவுநரின் அர்ப்பணிப்பு, இயேசு சபைக்கும் கொன்சாகா சபைக்கும் உள்ள ஆழமான உறவு மற்றும் ஏழை எளியோருக்காகச் சபையினர் ஆற்றும் பணி ஆகியவற்றை எடுத்துரைக்க விரும்புகிறேன். 250-வது யூபிலி விழா வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்!

தலைமை அருள்சகோதரி மோ. தெரேசா ஞானமணி உள்பட அனைத்து அருள்சகோதரிகளுக்கும் மாநிலத் தலைவிகள், நிர்வாகிகள் மற்றும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் உடன் உழைப்பாளர்கள் அனைவருக்கும் யூபிலி விழா வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இயேசு சபை துறவிகள் மற்றும் கொன்சாகா சபை (FSAG) உறவு இயேசு சபைக்கும் கொன்சாகா சபைக்கும் இடையேயான பிணைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இயேசு சபைக்கும், கொன்சாகா சபைக்கும் இடையே உள்ள உறவு தொப்புள் கொடி உறவாகும்.

கொன்சாகா சபையை நிறுவியவர் இளம் வயதில் இந்தியாவுக்கு வந்த ஓர் இயேசு சபை அருள்பணியாளரான இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ ஆவார். இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகத்தை அடித்தளமாகக் கொண்டு, ‘எதைச் செய்தாலும் இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும்என்ற உந்துதலுடன் சபையின் பணிகளைத் தொடங்கினார். இந்த இயேசு சபையின் வேகமும் துடிப்பும் இன்றும் கொன்சாகா சகோதரிகளிடம் நிலைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இயேசு சபையினரும் சகோதரிகளும் இணைந்து பணியாற்றும் இந்த உறவு எதிர்காலத்திலும் ஆழமாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அன்சால்தோ அவர்களின் வாழ்க்கைப் பயணம் மற்றும் அர்ப்பணிப்பைக் கொன்சாகா சகோதரிகள் தங்களின் வாழ்வாக மாற்ற வேண்டும்.

1773-ஆம் ஆண்டில் இயேசு சபை தடை செய்யப்பட்ட போதும் தந்தை அவர்கள்  துவண்டு விடாமல் புதுச்சேரியில் ஆழமான ஆய்வு செய்து தனது ஆன்மிக வாழ்வை அடித்தளமாகக் கொண்டு, சமூக அக்கறையுடன் செயல்பட முடிவெடுத்தார். சமூகத்தில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய தாழ்த்தப்பட்ட பெண் குழந்தைகளுக்காக ஓர் இல்லத்தை அமைத்து அவர்களுக்கான பள்ளிக்கூடத்தையும் தொடங்கினார். சபை மற்றும் பிற ஆதரவுகள் இல்லாத சூழலிலும், கடவுளின் துணையையும் ஓர் இந்து நண்பரின் உதவியையும் மட்டுமே நம்பி கார்மேல் கான்வென்ட் கொன்சாகா இல்லம் மற்றும் போன் செக்கர்ஸ் இல்லம் ஆகியவற்றைத் தொடங்கினார். பெண்களுக்குக் கைத்தறிநெசவு போன்ற தொழில்களைக் கற்றுக்கொடுக்க நிறுவனங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார்.

36 வயதில் சபையை ஆரம்பித்து, 34 ஆண்டுகள் நம் தாய் மண்ணில் பணியாற்றி, 66 வயதில் காலமானது தந்தை அவர்களின் அயராத உழைப்பையும், இந்தியா மீதான அன்பையும் காட்டுகிறது.

கொன்சாகா சபையினர்ஏழைகளுக்கு நற்செய்திஎன்பது வெறும் வாக்கியத்தில் மட்டுமல்ல, ஏழைகளுக்கு இதயத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்ற உன்னதக் கொள்கையைத் தங்கள் பணிகளில் செயல்படுத்தி வருகின்றனர்.

மீண்டும் ஒருமுறை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 250-வது ஆண்டு யூபிலி விழாவைக் கொண்டாடும் அனைத்துக் கொன்சாகா சகோதரிகளுக்கும், உடன் உழைப்பாளர்கள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.