“ஏம்பா சகாதேவன், அந்த யாழினி ஏன் உன்னைக் கட்டிக்கமாட்டாள்னு நினைக்கிறே?” என்று கேட்டாள் தாய் சுந்தரி.
“அவள் ரொம்பத் தலைக்கனம் பிடிச்சவள். நானும் அடிக்கடிப் பேசிப் பார்க்கிறேன். எங்கூட சந்தோசமாய் பேசுறதே இல்லே” என்றான் சகாதேவன்.
“அதற்கு அடிப்படையான காரணம் என்னப்பா?” என்றார் தந்தை கலையரசன்.
“அதுதான் தெரியலே! நானும் அப்படி இப்படின்னு அடிக்கடிப் பேசுறதுண்டு. அவள் பிடி குடுக்காமல் போயிடுறாள். ‘உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு, என்னை நீ கட்டிக்கிறாயா?’ன்னு
டாக்டர்ட்டே கேட்க முடியாதே!” என்றான் சகாதேவன்.
“அதைவிடு சகாதேவன், நிறைய பொண்ணுங்க நம்ப வீட்டுக்கு வரக் காத்துக்கிட்டிருக்கு. அதோட பணவசதி படைச்ச அரசியல்வாதிகள், அதிகாரிகள் பெண் குடுக்க ‘நான், நீ’ன்னு போட்டிப் போட்டுக்கிட்டிருக்காங்க” என்றார்
கலையரசன்.
“அதையெல்லாம் விடுங்கப்பா. டாக்டர் யாழினியைக் கல்யாணம் பண்ற வழி என்னன்னு யோசிங்க. அதுக்காக யாரைப் பிடிக்கலாம்னு பாருங்க” என்றான் சகாதேவன்.
“இப்ப மூணு பெண்ணோட சாதகம் கைவசம் இருக்கு. ஒண்ணு, நம்ப ஆளுங்கட்சியிலே மாவட்டமாய் இருக்கிறவரோட பொண்ணு. இரண்டாவது, ரெண்டு காலேஜ் வெச்சிருக்கிறவரோட மகள். மூணு, தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளர் பொண்ணு. மூணும் வெல்டு பார்ட்டி! நம்பக் குடும்பத்துக்கு ஏத்த சரியான பொண்ணுங்க”
என்று சிரித்தார் கலையரசன்.
“அவன் சொல்றதை விட்டுட்டு, உங்க கதையையே பாடினாக்கா எப்படிங்க? அவன்தான் யாழினி டாக்டர்தான் பொருத்தமான பொண்ணுன்னு அடம்பிடிக்கிறானே! அதைப் பத்தி யோசிங்க” என்றாள் சுந்தரி.
“அதையும் யோசிப்போம். அவங்க வீட்லேயே போய் பெண் கேட்போம். என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம். அடுத்து மத்ததைப் பேசுவோம்”
என்றார் கலையரசன்.
“ஏம்பா, அவங்க வீடு எங்கே இருக்கு? இந்த யாழினியோட அப்பா, அம்மா என்ன வேலை செய்றாங்க?” என்று கேட்டாள் தாய் சுந்தரி.
“அவங்க வேலைபார்த்து ரிட்டயர்டு ஆனவங்கன்னு நினைக்கிறேன். சொந்த ஊர் எதுன்னு தெரியாது. வீடு டிரஸ்ட்புரத்தில் இருக்கு. இதுதான் அட்ரஸ்” என்று யாழினியின் விசிட்டிங் கார்டை நீட்டினான் சகாதேவன்.
“அப்புறம் என்ன, நாங்க நாளைக்கே பூ, பழத்தோடு வீட்டுக்குப் போறோம், பெண் கேட்கிறோம். என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்” என்றாள்
தாய் சுந்தரி.
“அவங்க சம்மதிச்சாலும், யாழினி சம்மதிக்கனுமே அம்மா! அதுதான் இங்க இருக்கிற பிரச்சினை. எதுக்கும் போய் பேசிட்டு வாங்க. பிறகு அது பத்தி பேசலாம்” என்றான் சகாதேவன்.
“அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்னு சொல்வாங்க. அதுக்கேத்த மாதிரி திட்டம் போட்டு யாழினியைச் சம்மதிக்க வைக்கலாம். நீ கவலைப்படாதே. அரசியல்லே
இருக்கிற எனக்கு இதெல்லாம் தூசி மாதிரி. ஊதித் தள்ளிட்டு போய்க்கிட்டே இருப்பேன்”
என்று சிரித்தார் கலையரசன்.
“எங்கே பார்ப்போமே உங்களோட ப்ளானை! யாழினி இந்த வீட்டு மருமகளாய் வர்றதுக்கு எப்படியாவது நீங்க ஏற்பாடு பண்ணுங்க. சகாதேவன் பாவம், அந்த யாழினி மேலே ரொம்பப் பிரியமாய் இருக்கான்”
என்று சிரித்தாள் சுந்தரி.
(தொடரும்)