வாக்குரிமை என்பது ஒரு சனநாயக நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனு(ளு)க்கும் தேர்தலில், வாக்கெடுப்புகளில் பங்கேற்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் 326-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். உரிமையும் கடமையும் கைகோர்த்திருக்கும் ஒரு சட்ட வரையறை இது. அதாவது, ‘இந்தியக் குடிமகனா(ளா)க இருக்கும் ஒவ்வொரு நபரும் பொருத்தமான சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு சட்டத்தின் கீழும் அல்லது அதன் கீழும் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் 18 வயதிற்குக் குறையாதவராகவும் இந்த அரசியலமைப்பின் கீழே அல்லது பொருத்தமான சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தின் கீழ் வசிக்காமை, மனநிலை சரியில்லாத தன்மை, குற்றம் - ஊழல் அல்லது சட்டவிரோத நடைமுறை காரணமாக, தகுதி நீக்கம் செய்யப்படாமலும் இருந்தால், எந்த ஒரு தேர்தலிலும் வாக்காளராகப் பதிவு செய்ய உரிமையுண்டு’ எனத் தெரிவிக்கிறது.
இது
குடிமக்களுக்குத் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சக்தியையும், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வாய்ப்பையும் அளிக்கிறது. அவ்வாறு வாக்களிப்பதன் மூலமே சனநாயகத்தை வலுப்படுத்தி நல்லாட்சியை உறுதி செய்ய முடியும். ஆகவே, இது வெறும் உரிமை மட்டுமல்ல; மாறாக, நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்யும் ஒரு பொறுப்பும் கூட. மேலும், குடிமக்கள் தங்கள் அரசை அதிக ஈடுபாடு கொண்டு அதைப் பொறுப்புணர்வுடன் வைத்திருக்க இந்த வாக்குரிமை பெரும் பங்காற்றுகிறது.
அவ்வாறே,
வாக்காளர் பட்டியல் முறையாக ஆண்டுதோறும் அல்லது தேர்தல் காலங்களிலும் புதுப்பிக்கப்படுவதும், குடிமக்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்படுவதும் தேர்தல் ஆணையத்தின் அடிப்படைக் கடமையாகிறது. இந்தியத் திருநாட்டில் தனித்து இயங்கும் அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையம் அண்மைக் காலங்களில் ஒன்றிய பா.ச.க.
அரசின் கைப்பாவையாகச் செயல்படுவது மக்களாட்சி தத்துவத்தையும், அதன் மாண்பினையும் சீர்குலைப்பதாகவும், குடிமக்களின் மனசாட்சியைக் கேள்விக்குறியாக்குவதாகவும்,
வாக்குரிமையை நயவஞ்சகமாகப் பறிப்பதாகவும் இருப்பது பெரும் கவலையளிக்கிறது.
‘ஆட்டி வைப்பவர் ஆட்டி வைத்தால், ஆடாதார் யார் இருப்பார்?’ என்பதுபோல, அண்மைக் காலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் (Special Intensie Revision-SIR) என்னும் போர்வையில்,
பல்வேறு திரைமறைவுச் செயல்களைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்வது மக்களின் சனநாயக உரிமையைக் கேள்விக்குள்ளாக்குவதாகவே அமைகிறது.
முதல்
கட்டமாக, பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், 7.24 கோடி வாக்காளர்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியலைக் கடந்த ஆகஸ்டு 1-ஆம் தேதி வெளியிட்டது. ஒரு மாத காலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகளுக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியலை செப்டம்பர் 30-ஆம் நாள் வெளியிட்டது. அந்த வரைவு வாக்காளர் பட்டியலில், 21.53 இலட்சம் பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்; 3.66
இலட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
பீகாரைத்
தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இம்மாநிலங்களில் வாழும் 51 கோடி வாக்காளர்களின் பெயர்கள் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு உட்படுத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது
இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் ஒன்பதாவது வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியாகும். கடந்த 2002-2004 - ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பணி தற்போது மேற்கொள்ளப்படுகிறது.
இந்த
இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி நவம்பர் 4-ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கும் தலைமைத்
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், “இரண்டாம் கட்டத் திருத்தப் பணியில் தகுதியுள்ள எந்த ஒரு வாக்காளர் விடுபடாததும், எந்த ஒரு தகுதியற்ற வாக்காளர் சேர்க்கப்படாததும் உறுதிப்படுத்தப்படும்” என்று
தெரிவித்திருக்கிறார்.
மத்தியில்
ஆளும் ஒன்றிய பா.ச.க.
அரசு இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை மேற்கொள்வது பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டிருப்பதாக ஊடகங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சிக்கும் சூழலில், நாமும் சற்று விழிகளை விசாலப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கிறது.
மக்களின்
வாக்குரிமையைப் பறிக்கும் இந்தச் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தச் செயல்பாட்டில் விழிப்புடனிருந்து
கடமையாற்ற வேண்டியுள்ளது என்றும், சனநாயகம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய பெரும் கடமையும் பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் இருப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
அவ்வாறே, “உழைக்கும் மக்கள், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை இதன் மூலமாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பா.ச.க.-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி
பெற்றுவிடலாம் எனக் கணக்குப் போடுகிறார்கள்” என்று
குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும்,
சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்காக தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த சனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 6,36,12,950 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3,11,74,027 ஆகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3,24,29,083 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 9,120 ஆகவும் இருந்தது.
ஆனால்,
ஒவ்வொரு காலாண்டுப் பருவத்திலும் பெயர்சேர்ப்பு, நீக்கப் பணிகள் இணையதளம் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதன்படி, இதுவரை ஐந்து இலட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் வாக்காளர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6.41 கோடியாக உயர்ந்துள்ளது.
நவம்பர்
4-ஆம் தேதி தொடங்கும் இந்தக் களப்பணியில் 77,000 பேர் ஈடுபட்டுள்ளனர் என்றும், இது ஒருமாத காலம் தொடரப்பட்டு, டிசம்பர் 9-ஆம் நாள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதன் அடிப்படையில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கான படிவங்கள் பெறப்படும்; அதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி ஏழாம் நாள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
வாக்காளர்
பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதில் நமக்கு இருவேறு கருத்துகள் இல்லை. ஆயினும், அதை அவசர அவசரமாகச் செய்யாமல், நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, தெளிவாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம். 2026, ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் தேர்தல் வரவிருக்கும் சூழலில், அவசரக்கோணத்தில் கடமைக்காக இதைச் செய்வதும், தங்கள் வசதிக்காக இதை மாற்றுவதும் மக்களின் உரிமையைப் பறிப்பதாகவே பார்க்கப்படுகிறது.
பீகாரில்
நடத்தேறிய சதித்திட்டங்கள் தமிழ்நாட்டிலும் நடக்கக்கூடாது; அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்பதே நமது எண்ணம். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.
பசுத்தோல்
போர்த்தி வரும் புலிபோல நயவஞ்சகத் திரைமறைவுத் திட்டங்களைச் சுமந்து வரும் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணியில் குடிமக்களாகிய நாம் நமது உரிமையையும், நம் உடன் வாழும் சகோதர-சகோதரிகளின் உரிமைகளைப் பேணுவதிலும், அதை நிலைநாட்டுவதிலும் விழிப்புடன் செயல்படுவோம்!
வாக்கு
எங்கள் பிறப்புரிமை - நாட்டின் வளர்ப்
போக்கு
எங்கள் பெருங்கனவு!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்