news-details
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் முதல் ஞாயிறு (முதல் ஆண்டு) (30-11-2025) எசா 2:1-5; உரோ 13:11-14; மத் 24:37-44

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்பிற்கினியவர்களே, திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நம் ஒவ்வொருவரையும் இன்றைய வழிபாடும் வாசகங்களும்எதிர்நோக்கின் இறைமக்களாகவாழ அழைக்கின்றன. எதிர்நோக்கு என்பது நம்பிக்கையோடு ஒரு காரியத்தை எதிர்பார்ப்பதாகும். இதை முதல் வாசகத்தில் ஆமோஸ், இறைவனின் ஆட்சி எவ்வாறு இருக்கும் என்பதனையும், எவ்வாறு அதை நாம் எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார், நாம் எதிர்நோக்கிக் காத்திருந்த இறையாட்சி கிறிஸ்து இயேசுவின் வருகையால் நிறைவாழ்வையும், இறையாட்சியின் மக்களாக நம் விசுவாச வாழ்வு வாழ வேண்டும் என்பதையும் விவரிக்கிறது. நற்செய்தியில் புனித மத்தேயு இறை நம்பிக்கையோடு எதிர்பார்ப்பவர்களுக்குக் கிடைக்கும் அருளின் அளவை எடுத்துரைக்கிறார். நாம் நம் வாழ்வில் பல்வேறு தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டுள்ளோம். அனைவரும் சுயநலத் தேவைகளாய் அல்லாது, சுயநல எதிர்பார்ப்புகளாய் மட்டுமல்லாமல், பொது நலத்துடன் பிறர்நலம் பேணும் தேவையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்க இறைவனை வேண்டி எதிர்நோக்கின் திருப்பயணிகளாக இப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா இறைவனின் அமைதி நிறைந்த இறையாட்சியைப் பற்றி எடுத்துரைக்கின்றார். அனைத்து மக்களும் இறைவனின் ஆலயத்திற்குச் சென்று அவர் வழிகளை அறிந்து நடக்க வேண்டுமென அழைக்கப்படுகிறார்கள். இதுவே நம் மனத்திலும், நம் மத்தியிலும் ஒற்றுமை, சமாதானம், அன்பு நிறைந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று எடுத்துக்கூறும் இம்முதல் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமடுபோம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடியார் நாம் எப்போதும் விழிப்பாயிருக்க அழைப்பு விடுகிறார். ஆண்டவரின் வருகை நம் அண்மையில் இருப்பதால் நம்முடைய வாழ்க்கை ஒளியிலும் உண்மையிலும் நிறைந்திருக்க வேண்டும்; தீய பழக்கங்களை விட்டுவிட்டு இயேசுவை அணிந்து அன்பில் நிலைத்திருக்க நாம் தயாராக வேண்டும் என நினைவூட்டும் இந்த இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் அன்புத் தந்தையே இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், துறவறத்தார் ஆகிய நாங்கள் அனைவரும் நல்லாயனாம் இயேசுவைப் பின்பற்றிச் சமாதானத்தின் தூதர்களாகவும் அன்பின் வழிகாட்டுதலாகவும் நீதியின் கருவிகளாகவும் வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைத்தையும் படைத்தாளும் இறைவா! எங்கள் பங்குத்தந்தை, பங்கில் பணிபுரியும் அனைத்து அருள்சகோதர-சகோதரிகளையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். தாங்கள் கற்றுக்கொண்ட பணியைத் திறம்பட நிறைவேற்றி, உமக்கு உண்மையுள்ள ஊழியராய் இறுதிவரை நிலைத்திருக்கும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வளமான வாழ்வைத் தருகின்ற இறைவா! இந்நாள் வரையில் நீர் எங்களுக்குச் செய்து வருகின்ற சகல நன்மைகளையும் நன்றியோடு நினைவு கூர்கின்றோம். எங்களையும், எங்கள் பெற்றோர், உற்றார்-உறவினர், நண்பர்கள் அனைவரையும் மென்மேலும் ஆசிர்வதித்து வழிநடத்த வேண்டுமென்றும், படிக்கின்ற பிள்ளைகளுக்கு அறிவையும் சிறந்த ஞானத்தையும் தந்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உண்மையின் இறைவா! எங்கள் தொழில் முயற்சிகளை ஆசிர்வதித்து, எங்கள் உழைப்பிற்கு ஏற்ற நற்பலன்களைத் தந்து, எங்களுக்குப் போதுமான செல்வங்களைத் தந்து எங்கள் வாழ்வு வளம் பெறச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. இரக்கத்தின் வாழ்வே இறைவா! குடும்பங்களில் நோயினால் துன்பப்படும் மனிதர்களையும் ஆறுதல் தேடும் உள்ளங்களையும், வன்முறைகளால், பசியால் வாடும் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசிர்வதித்துக் குணமளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.