news-details
சிறப்புக்கட்டுரை
மக்களைத் தேடிய நற்செய்தியாய்...

1775-இல் புனித லூயிஸ் தே கொன்சாகா மடம் என்று இத்தாலி தேசத்தின் செசிலி தீவிலுள்ள மெசினாவின் அன்பு மகன் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ அவர்களால் உருவாக்கப்பட்ட எம் சபை,… இன்றுபிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சகோதரிகள் சபைஎன்ற பெயரைத் தாங்கி, ‘கொன்சாகாஎன்ற பெருங்குடும்பமாய், இதில் உள்ள எல்லாரும் கொன்சாகாவின் புதல்வியராய் ஒருங்கிணைந்து பணிசெய்து வருகின்றோம்.

250-ஆம் ஆண்டினைத் தொட்டிருக்கும் எம் சபை, நன்றிப்பெருக்குடன் கிறிஸ்துவுக்குச் சாட்சி பகன்று வருகின்றது. இந்த 250-ஆண்டுகளில் எம் சகோதரிகளின் அர்ப்பணிப்பு, தன்னல மறுப்பு, கடின உழைப்பு, இறை-மறை பக்தி, கறைபடியா எளிய உள்ளம், எளிய வாழ்வு, வளர்ச்சி இவற்றை எண்ணும்போது என் உள்ளம் பேருவகை கொள்கின்றது. இறைவனின் அபரிமிதமான பராமரிப்பை நினைக்கையில்நன்றி... நன்றிஎன்று மட்டும் என் நெஞ்சம் இறைவனை நோக்கிப் புகழ்ச்சிக் கீதம் இசைக்கின்றது.

எம் நிறுவுநர் தந்தை இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ எம் சபையை இப்புதுச்சேரி மண்ணில் தோற்றுவிப்பதற்கான அடிப்படைக் காரணமாய் அமைந்தது சமூகத்தின் பல்வேறு விதமான அடக்கு முறைகள், சாதிய வேறுபாடு, உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்ற பிரிவினைகள், ‘தாழ்த்தப்பட்டோர்தலித் மக்களைதீண்டத்தகாதோர்என முத்திரையிட்டு ஒதுக்கி வைத்தது. இளம் விதவைகள், பெண் குழந்தைகள் மிகக் கேவலமாக நடத்தப்பட்ட நிலை. பெண்களுக்குக் கல்வி மறுப்பு, பெண்கள் பாலியல்  வன்கொடுமைக்கு ஆளான நிலை, பெற்றோரை இழந்த குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டு, தெருவோரங்களில் அபலைகளாய் திரிந்த நிலைஇந்த இழிநிலைகளைக் கண்ணுற்ற இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ, இந்தப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணி செய்ய தன் தாயகம் மறந்தார், தன் தாய் மொழி மறந்தார், தன் பண்பாடு மறந்தார்ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

தன் மனநிலையைக் கொண்டவர்களாய் தனது உள்ளுயிரை புனித அலோசியஸ் கொன்சாகாவைப் பாதுகாவலராக வைத்து புனித லூயிஸ் தே கொன்சாகா மடம் (இல்லம்) என்ற பெயரில் எம் சபையை உருவாக்கினார். அப்போது அவரோடு இணைந்து பணிசெய்ய விரும்பிய இளம்பெண்களைக் கொண்டு முகவரியற்றோரின் முகங்களாய் சுயநலம் விடுத்து வாழ, அதுவும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காய் விடுதலைக் குரலாய் குரலெழுப்ப வீரப்பெண்களாக உருவாக்கினார். ஆரம்பம் முதலே இளம்பெண்களை, குழந்தைகளை  உருவாக்கும் உருவாக்குநராகச்  செயல்பட்டார். பாதிக்கப்பட்ட மகளிர், பெற்றோரை இழந்த குழந்தையர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மகளிர் என எல்லாருக்கும் வாழ்வு வழங்கும் கற்பக விருட்சமாய் தந்தை திகழ்ந்தார்.

எம் நிறுவுநர் தந்தை இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோவால் உருவாக்கப்பட்ட எம் சபை அவர் எமக்கு வகுத்தளித்த தனிவரத்தையோ, உள்ளுயிரையோ நீர்த்துப்போகச் செய்யவில்லை. மாறாக, கொன்சாகா சகோதரிகள் தங்கள் வாழ்வால், பேச்சால், மூச்சால், இருப்பால், பணியால் அதற்கு ஒவ்வொரு நாளும் உயிர் கொடுத்து வருகின்றனர். இது மிகைப்படுத்தப்பட்ட கருத்தல்ல; மாறாக, எம் சகோதரிகள் கல்லும் முள்ளும் நிறைந்திருந்த, வசதியற்ற, வாழ்வாதாரம் சொற்பமாகக் கிடைத்த இடங்களிலேயே பணிசெய்ய முன்வந்தனர். எங்கெல்லாம் போக்குவரத்து வசதியில்லையோ, மின்வசதி இல்லையோ, தண்ணீர் வசதி இல்லையோ, அடிப்படை வசதிகள் இல்லையோ... குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒதுக்குபுறமாய் வாழ்ந்த பகுதிகளில் அவர்களோடு அவர்களுக்காக அவர்களாகவே மாறிப்போய் வாழ்ந்தார்கள். அவர்களுக்காக தம்மைத் துறந்தார்கள், தம் சுகம் மறந்தார்கள், தம்முயிர் இழக்கவும் துணிந்தார்கள். அப்போதே எங்கள் பணி கண்டு, எங்கள் வாழ்வு கண்டு அரசு, கொன்சாகா அருள்சகோதரிகள் எங்கு வேண்டுமானாலும் சென்று பணி செய்யலாம் என்று அழைப்பு விடுத்தது. இதுவே எங்கள் பணிக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம்.

இன்றைக்கு எங்கள் கொன்சாகா பெருங்குடும்பம் இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம், வட மாநிலம் எனப் பல்வேறு இடங்களிலும், ஐரோப்பாவில் இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் இஸ்ரேல் எனப் பல இடங்களில் தன் கிளைகளைப் பரப்பி எம் நிறுவுநர் தந்தையின் உள்ளுயிருக்கு உயிர்ப்பு அளித்து வருகின்றது.

திருத்தூதுப்பணியை அதன் மதிப்பீடுகளான அன்பு, இரக்கம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை உணர்ந்து செயல்படுத்திய நாங்கள் சமூகப்பணி, சமூக மாற்றப்பணி, நலவாழ்வுப்பணி, கல்விப்பணி என எங்கள் பணிகளை விரிவுபடுத்தி ஒடுக்கப்பட்டோர் சார்பாக, எளியோர் சார்பாக ஓரணியில் இணைந்து பணிசெய்து வருகிறோம்.

ஏழையருக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்க அனுப்பப்பட்டுள்ளோம்என்பதை எம் சகோதரிகள் தங்களது தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றுகின்றனர் என்பது உலகறிந்த உண்மை.

இனிவரும் காலங்களிலும் முன்பிருந்ததுபோல் எம்மவரின் பணி இம்மண்ணில் தொடரும். வசதியின்மைகளையும் வலிகளையும் இழப்பையும் இகழ்ச்சிகளையும் அவமானத்தையும் அவமதிப்பையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இயேசு ஆண்டவரின் உண்மைத் தொண்டர்களாய் எம் நிறுவுநர் தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி எம் முன்னோர் வாழ்ந்து சென்ற பாதையில் ஆழமாய் எம் தடம் பதிப்போம்.

நாங்கள் செய்யும் எல்லாப் பணிகளிலும் இறை அன்பும் பிறரன்பும் இரு கண்களென ஒளிர்ந்திடச் செய்வோம். தியாகமிக்க அன்னையர் போல் தியாகம் செய்யத் துணிவோம்.

எங்கள் பணி எங்கு தேவையோ சிறப்பாக, பட்டி தொட்டிகளில், குக்கிராமங்களில் பணிசெய்ய வாய்ப்பு வரும்போது அதனைப் புறக்கணிக்காமல் அன்பாய் ஏற்றுச் செயல்படுவோம்.

250-ஆம் ஆண்டின் அற்புதமான கொண்டாட்டத்தில்புனிதத்தில் நிறைவைக் காணஎன்ற யூபிலி விழாத் தயாரிப்பு எங்களுக்குக் கொடுத்த உன்னதமான அழைப்பை ஏற்று, அதனை உணர்ந்து எங்கள் வாழ்வு, சொல், செயல், சிந்தனை எல்லாம் புனிதம் நோக்கியதாய் அமைய உறுதி ஏற்போம். அதனைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டுவோம். மக்கள் எங்களைத் தேடி வரட்டும் என்றில்லாமல், மக்களைத் தேடியதே எங்கள் வாழ்வு என்பதை எங்கள் முன்னோர் போன்று உணர்ந்து, மக்களைத் தேடி நற்செய்தியாய் நாங்கள் இருந்து, மகிழ்வின் செய்தியை வழங்கி எம் கடமைகளைக் கருத்தாய் செய்வோம்.

2025-ஆம் ஆண்டு தாய்த் திரு அவைஎதிர்நோக்கின்  திருப்பயணிகள்என்ற இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கிறது. தாய்த் திரு அவையின் யூபிலி ஆண்டின் சிறப்பில் எம் கொன்சாகா சபையும் 250-ஆம் ஆண்டு யூபிலி விழாவைச் சிறப்பிக்கின்றது என்பது இறைவன் எங்களுக்குக் கொடுத்த பெருங்கொடை. எனவே, இலக்கு மக்களோடு உள்ள எங்கள் பயணத்தில் எப்போதும் தடையிராது, தொடர்ந்து பணி செய்வோம். தடை வந்தாலும், இறைவன் துணை செய்வார். இதுவே எம்மவரின் நம்பிக்கை. நம்பிக்கை இழக்க மாட்டோம்; ஏனென்றால் கண்ணீரோடு விதை விதைப்பவர்கள் மகிழ்ச்சியோடு அறுவடை செய்வார்கள்!