news-details
சிறப்புக்கட்டுரை
நேர்மையும் விசுவாசமும் நிறைந்த வாழ்க்கை

அன்பான செயின்ட் அலோசியஸ் கொன்சாகா சகோதரிகளே, நீங்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கையின் ஒளியாகவும், எளிமையின் உருவமாகவும், அன்பின் செயல்பாடாகவும் உலகிற்கு வெளிச்சமாய் நிற்கிறீர்கள். பெருமைக்கும் புகழுக்கும் ஆளாய்ப் பறக்கும் இக்காலத்தில், உங்கள் வாழ்க்கை எளிமையும், தாழ்ச்சியும் சாந்தமும் தன்னடக்கமும் நிறைந்த நற்சாட்சி ஆகும் - உங்கள் புரவலர் / பாதுகாவலர், செயின்ட் அலோசியஸ் கொன்சாகாவின் சிறப்பியல்புகளைப் பிரதிபலிக்கிறது.

உங்கள் எண்ணங்கள் தூய்மையால் அலங்கரிக்கப்பட்டவை, உங்கள் சொற்களும் செயல்களும் தெளிவும் உண்மையும் நிறைந்தவை. ஆழ்ந்த செபத்தில் வேரூன்றிய நீங்கள், ஒவ்வொரு முடிவிலும் இறைவனுடைய சித்தத்தைத் தேடி, ஞானத்துடன் தீர்மானிக்கிறவர்கள். உங்கள் சமூக வாழ்க்கை நம்பிக்கையும், இரக்கமும் நிறைந்த ஒரே அன்பு மொழியைப் பேசுகிறது. அதில் ஒற்றுமையும், ஆன்மிக சமநிலையும் தெளிவாகத் தெரிகிறது.

நேர்மை மற்றும் விசுவாசம் நிறைந்த உங்கள் வாழ்க்கை, தன்னலமற்ற சேவையாலும், உண்மையான அன்பாலும் சிறப்பிக்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், சமூகப் பணிகள் போன்ற எல்லாத் துறைகளிலும் உங்கள் உறுதி மற்றும் அர்ப்பணிப்பு பிரகாசிக்கிறது. மனமார்ந்த தாராளம், உங்கள் இதயங்களில் பெருகி துயரமுள்ளவர்களுக்கு நம்பிக்கையையும் துன்புறுவோருக்கு மகிழ்ச்சியையும் வழங்குகிறது.

மென்மையான சொற்களிலும், உறுதியான நம்பிக்கையிலும், நீங்கள் எப்போதும் அன்பின் நிறைவு காட்டுகிறீர்கள். துயரமடைந்தவர்களுடன் துயரமடைந்து, அமைதியான ஆற்றலுடனும், இரக்கமிக்க செபத்துடனும் அவர்களுடன் நிற்கிறீர்கள்.

செயின்ட் அலோசியஸ் கொன்சாகா சகோதரிகளே, நீங்கள் உண்மையிலேயே கிறிஸ்துவின் தூய்மையைப் பிரதிபலிக்கிறவர்கள். தாழ்ச்சியுடனும், எளிமையுடனும் அன்புடனும் வாழ்வதுதான் உண்மையான துறவு என்பதை உங்கள் சான்று வாழ்வு நினைவூட்டுகிறது. இந்த அனைத்தையும் நான் அறிந்ததும், புரிந்ததும், உணர்ந்ததும் என் அன்பு அக்காள், அருள்சகோதரி  சபைத்தலைவி  மோ. திரேசா ஞானமணி அம்மையார் - உங்கள் சபையின் நிரந்தர உறுப்பினர் - அவர் மூலமே. அக்காவிடம் நான் பார்த்த அனைத்து நற்குணங்களும், திறமைகளும் சாதனைகளும் உங்கள் அனைவரிலும் இருப்பதைப் பார்த்து உளம் மகிழ்கின்றேன், இறைவனுக்கு நன்றி சொல்கின்றேன்.

இயேசு கிறிஸ்துவினால், இயேசு கிறிஸ்துவுக்காகவும், இயேசு கிறிஸ்துவின் மூலமாக நீங்கள் இன்னும் பெரும் செயல்களை தூய ஆவியாரின் ஆற்றலோடும் அன்னை மரியின் பரிந்துரையுடனும் அப்பா தந்தையின் அருளோடும் நிறைவேற்றிட என் இதயங்கனிந்த வாழ்த்துகளும் செபங்களும். உங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தலைமைத்துவத்தால் எப்போதும் உந்தப்படும் நான்

தங்கை

ஆக்னெஸ் செல்வி ஹென்றி தாஸ்

CEE DEE YES PUBLIC SCHOOL CBSE

திருப்போரூர்