news-details
சிறப்புக்கட்டுரை
மாய மான் ஒன்று! மண் குதிரைகள் பல்லாயிரம்!

தமிழ்ச் சமூக மரபுப்படி தனிநபர் வழிபாடு இல்லை.  இனக் குழுக்களின் மரபார்ந்த வழிபாடு இயற்கை வழிபாடாகும். மனிதன் எதையெதைத் தன் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையோ  அதை வழிபட்டான். சூரியன், சந்திரன், காற்று, நீர், நிலம் என்பதைப்பஞ்சபூதம்என்றான். நதிக்கரை நாகரிகத்தின் படிநிலையாக விவசாயம், இரும்பை உருக்குதல், வளைத்தல், இரும்புப் பொருள்கள் செய்தல் எனத் தொழில் சார்ந்த சமூகக் குழுக்கள் உருவாகின.

மனிதன், தான் கண்ட புதியவைகளில் வியந்தான். அதில் ஒரு பகுதியாக, தன்னிடம் இல்லாத  சிறந்த திறன் கொண்ட மனிதர்களைப் போற்றினான். குழு தலைவன், அரசன் என ஆராதித்தான். இதனால் தனிநபர் வழிபாடு உருவானது.

தமிழ்நாடு அரசியலையும், திரைத் துறையையும் பிரித்துப் பார்க்க இயலாது. 1953-இல் தி.மு..-வின் அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர். 1969 வரை தி.மு..வில்  நின்றார். தன் திரைப்பாடல்களில், வசனங்களில், காட்சிகளில் தி.மு.. கொடியைக் காட்டுவது, உதயசூரியன் சின்னம் வைப்பதுமாக இரசிகர்களின் திரை மோகத்தை, தி.மு..வுக்கு மடை மாற்றினார். தன் இரசிகர்களை அரசியல்மயமாக்கினர் அண்ணா, கருணாநிதி, முரசொலி மாறன் உட்பட்ட திரைக் கதாசிரியர்கள். எம்.ஜி.ஆரின் திரைக் கவர்ச்சியைத் தி.மு..வுக்காக மிகச் சரியாகப் பயன்படுத்தினர். எம்.ஜி.ஆர். சட்டமன்ற உறுப்பினராகவும், தி.மு.. கட்சிப் பொருளாளராகவும் உயர்ந்தார். தன் சினிமா பிம்பத்தை இரசிகர் மன்றங்கள் வழி ஒருங்கிணைத்தார். வள்ளல் தன்மை என்ற புகழிற்காகத் தன் பெரும் வருவாயைக் கரைத்தார்.

அன்றைய முதல்வர் கருணாநிதிக்கும், எம்.ஜி. ஆர். அவர்களுக்கும் ஏற்பட்ட தன் முனைப்பால் (ஈகோ) எம்.ஜி.ஆர். அவர்களைத் தி.மு..வில் இருந்து நீக்கும் முடிவு வந்தது. எம்.ஜி.ஆர். - கலைஞர் எதிர்ப்பு, தி.மு.. எதிர்ப்பு என்ற அடிப்படையில் .தி.மு.. என்ற கட்சியை ஆரம்பித்தார். இன்றுவரை .தி.மு.. அதே நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறது.

எம்.ஜி.ஆர். அவர்கள் இரண்டு ஆண்டுகளில் ஆயிரம் பொதுக் கூட்டங்களில் பேசி பொதுமக்களைச் சந்திக்கிறார். ஊடக வெளிச்சம் இல்லாத அக்காலத்தில்பெரிய பொட்டல் காடுகளைத்  தூய்மை செய்து பொதுக்கூட்டங்கள் நடந்தன. திருப்பூரில் அப்படிப் பொதுக் கூட்டம் நடந்த இடத்திற்குஎம்.ஜி.ஆர். காடு என இன்றுவரை அழைக்கப்படுகிறது. இதன் நீட்சியாக வி.ஆர். ஜானகி, ஜெ. ஜெயலலிதா எனத் தொடர்ந்தது. தி.மு..வும் தன் பங்கிற்கு மு.. முத்து, மு.. ஸ்டாலின், உதயநிதி எனத் தன் குடும்ப நபர்களைத் திரைத் துறையில் இறக்கியது; அது தோல்வியில் முடிந்தது என்பதே சரியானதாகும்.

காலச்சக்கரம் சுழல்கிறது. தனது நான்கு திரைப்படங்கள் நன்கு ஓடிய பின், அடுத்ததமிழ்நாட்டு முதல்வர் நான்எனத் தமிழ்த் திரைக் கதாநாயகன் கற்பனைக் கோட்டை கட்டுகிறார். தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத தேசியக் கட்சிகள் பின்புலமாக நிற்கிறார்கள். ஊடகம் மற்றும் மின்னணு காலத்தில் மக்களைக் கவர அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயம் வந்தது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு வியூக வகுப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஆலோசனை கூறுகிறார்கள்.

அவ்வாறே, ஒரு நடிகரும் கட்சி ஆரம்பித்தார். அவர் தன் கட்சியின் அன்றாட நடவடிக்கைகளுக்கு ஒரு வியூக வகுப்பாளரை வைத்தார். உடை முதல் எல்லா முடிவுகளையும் அவரே எடுத்தார். அவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் வியூக வகுப்பாளரிடம் பல விசயங்களைப் படி எடுத்தார். முழு காபி அடித்தார்.

திராவிடம், தமிழ் தேசியம் இரண்டிலும் கட்- பேஸ்ட் செய்து கட்சிக்கொள்கை, கொள்கைத் தலைவர், அரசியல் எதிரி, கொள்கை எதிரி என முழங்கத் தொடங்கினார்.

அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளை நிகழ்வு மேலாண்மை முறையில் சடங்காக நடத்தினர். தலைவர் வெளியே வராமல், தலைவரின் அலுவலகத்தில் அனைத்தும் நடந்தன. பாதிக்கப்பட்ட மக்களும் அங்கே அழைத்துச் செல்லப்பட்டு, தலைவரின் தரிசனம் தரப்பட்டது.

தலைவரின் உரைகள் வெளி ஆதார முறையில் (அவுட் சோர்சிங்) பெறப்பட்டது. தலைவர் உரையை ஏற்ற-இறக்கங்களுடன் பேசப் பயிற்சி, மனப்பாடப் பயிற்சி நடந்தது. அவரது பேச்சு தின மலரின் திண்ணைப் பிரச்சாரமாக, பொத்தாம் பொதுவில் இருந்தது; வாரிசு அரசியல், ஊழல், சட்டம்-ஒழுங்கு சரி இல்லை, போதைப்பழக்கம், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற எல்லைக்குள் அடங்கியது. கடைசியில், மூன்று நிமிடப் பேச்சிற்கே தள்ளாட வேண்டிய நிலை நடிகருக்கு வந்தது. அவரது உள்ளடக்கம் இல்லாத, சமூக, தமிழ்நாட்டுப் பிரச்சினை அறியாத அவரது மொழியில் செயல்திட்டம் (புராஜெக்ட்) தோல்வியில் முடிந்தது. அவர் தமிழ்நாடு, தமிழ் சமூகப் பிரச்சினைகளை அறிய வேண்டும். அவருக்கு அரசியல் வியூக வகுப்பாளர் புகட்டிய, “மக்களைக் கவர்வதில் நீங்கள் எம்.ஜி.ஆர்.; கட்சி நடத்துவதில் நீங்கள் ஜெயலலிதாஎன்ற பால பாடமே மனத்தில் பதிந்துகிடக்கிறது.

நடிகருக்குக் கட்டுக்கடங்காத கூட்டம் வருகிறது. அது கட்டுப்படாத கூட்டம். தங்கள் தலைவர் திரைப் படத்தில் காட்டிய சாகசங்களைத் தலைவர் முன் செய்து காட்டுகிற விடலைக் கூட்டம். தலைவர் முகம் காண வேண்டும், தலைவரோடு, தலைவர் பிரச்சார வண்டியோடுசெல்பிஎடுக்க வேண்டும் என்ற திரை மோகம் தவிர வேறு எதுவுமில்லை.

இவர்களை அரசியல்மயப்படுத்த வேண்டும் என்கிற குரல்கள் உள்ளன. இவர்கள் தங்கள் கையில் உள்ள கைப்பேசியில் சமூகநீதி, மொழிப் பிரச்சினை, மாநில சுயாட்சி, காவேரி, முல்லை பெரியாறு, கச்சத்தீவு என அடித்தால் பதில் வரும். அவர்கள் தலைவருக்கே, இது குறித்த தெளிவு இல்லாத போது, இதை இரசிகர்களிடம் எதிர்பார்ப்பது தவறானது. தலைவருக்கும் தொண்டர்களுக்கும் ஒரே திரைப்பாடலில்  முதலமைச்சராக மாறும் கனவு மட்டுமே உள்ளது. அதற்கான செயல்திட்டம் இல்லை.

பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிற நடிகர் எங்கேயாவது தீர்வைக் கூறினாரா? ‘இல்லைஎன்பதே நடப்பு. கூட்டத்திற்கு வரும் இரசிகர்களைக் கேட்டால், ஒரே பதில்தமிழ்நாட்டில் அரசியல், ஆட்சி மாற்றம் வரட்டுமே; மாற்றத்தை மட்டுமே வேண்டுகிறோம்என்பதே. அந்த மாற்றம் குறித்த விவரங்கள் தலைவரிடமோ, இரண்டாம் கட்டத் தலைவர்களிடமோ, தொண்டர்களிடமோ  இல்லை. ஏனெனில், அவர்களிடம் அது குறித்த அடிப்படைத் தெளிவு இல்லை.

தலைவரோ தான் வெளியே வந்து, எம்.ஜி.ஆர். போல தன் முகத்தைக் காட்டினால் ஓட்டு விழும்; ஜெயலலிதா போல தான் ஒன்று, தன் கட்சியில் எல்லாரும் பூஜ்யம் என்ற மனநிலையில் உள்ளார். எல்லாக் கதாநாயக நடிகர்களைப் போல, மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் தானே உயர்ந்தவன் எனக் கருதுதல், விமர்சனங்களை ஏற்காமல், சுற்றியுள்ள எல்லாரும், தன்னை உச்சி முகர்ந்து பாராட்டுகளைத் தரவேண்டும் என்ற மனநிலையில் வாழ்கிறார். இதன் விளைவு கரூர் துயரச் சம்பவங்களின்போது இக்கட்சித் தலைவருக்கு, தலைமைப் பண்பு இல்லை. ‘என்னய்யா கட்சி இது?’ என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வெளுத்து வாங்கிவிட்டனர்.

எங்கள் கிராமங்களில் சொலவடை ஒன்று உண்டு: ‘சிறுவர் விட்ட வெள்ளாமை விளையுமாம், வீடு வந்து சேராதாம்.’ இது அந்த நடிகரின் கட்சிக்கும் பொருந்திப் போகிறது.

இவர்கள் மண் குதிரைகள். அவர் மாய மான். மாய மானை ஆர்.எஸ்.எஸ்.-இன் வலையில் அமுக்கி விட்டது என்பதே பரிதாபத் தகவல்.

இந்தக் கட்சிக்கு தமிழ்நாட்டின் பெரும் ஆர். எஸ்.எஸ். கார்ப்பரேட் கம்பெனி பணத்தை வாரி இறைக்கிறது என்பது கூடுதல் செய்தி. தமிழ்நாடு வாக்காளர்கள் 2026 தேர்தலில் விழித்தெழ வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.