news-details
ஞாயிறு மறையுரை
நவம்பர் 30, 2025, திருவருகைக் காலம் முதல் ஞாயிறு (முதல் ஆண்டு) எசா 2:1-5; உரோ 13:11-14; மத் 24:37-44 - நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்; விழிப்பாக இருப்போம்!

இன்று திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. ஒவ்வோர் ஆண்டும் திருவருகைக் காலத்துடன் ஒரு புதிய வழிபாட்டு ஆண்டைத் துவக்குகிறோம். வருகிற நான்கு வாரங்களிலும், இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுமாறு நம்மை அழைக்கின்ற திருவழிபாடு, அவர் நம் வாழ்வில் அன்றாடம் வருகிறார் என்றும், இறுதி நாள்களில் மாட்சியுடன் மீண்டும் வருவார் என்றும் நினைவூட்டுகிறது.

திருவருகைக் காலம் என்பது எதிர்பார்ப்பின் காலம். நம்பிக்கையை நம் உள்ளங்களில் விதைக்கும் காலம். இது அருளின் காலம்! கடவுள் நமக்குச் செய்துள்ள, செய்கின்ற, செய்யவுள்ள வாக்குறுதிகளை நமக்கு நினைவுபடுத்தும் காலம்! திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “நம்மிடையே குடிகொள்ளும் நோக்கத்தில் வானிலிருந்து இறங்கி வந்த இறைவனின் நெருக்கத்தை அதிகமதிகமாக உணரும் காலம் (ஞாயிறு மறையுரை, 30.11.2020).

திருவருகைக் காலம் என்பது இரண்டு முக்கிய நோக்கங்களை வலியுறுத்துகிறது: முதலாவதாக, கிறிஸ்துவின் முதல் வருகையின் நினைவாய் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு நம்மைத் தயாரிக்கும் காலமாகவும் இரண்டாவதாக, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நம்பிக்கையோடு எதிர்நோக்கி நம் வாழ்வை மாற்றி அமைத்துக்கொள்ள அருளப்படும் காலமாகவும் திருவருகைக் காலம் அமைகிறது. எனவே, இவ்விரு காரணங்களால் திருவருகைக் காலம் இறைப்பற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகின்றது. திருவருகைக் கால முதல் ஞாயிறிலிருந்து டிசம்பர் 16-ஆம் நாள் வரை உள்ள நாள்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்கான தயாரிப்பு நாளாகவும், டிசம்பர் 17 முதல் 24 உள்பட வரும் வாரநாள்கள் கிறிஸ்து பிறப்புக்கு நேரடி முன்னேற்பாடாகவும் அமைகின்றன.

கிறிஸ்துவின் முதல் வருகையை ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருந்த இஸ்ரயேல் மக்களைப்போல், அவரின் இரண்டாம் வருகையைப் புதிய இஸ்ரயேல் மக்களாகிய நாம்எச்சரிக்கையாகவும்-விழிப்பாகவும்இருந்து எதிர்நோக்கவேண்டும் என்பதே இந்தத் திருவருகைக் காலத்தின் மையக் கருத்து. இக்கருத்தை மையப்படுத்தியே இன்றைய வாசகங்களும் இறுதிக்காலத்தைப் பற்றி எடுத்துரைத்து, நாம் மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, மெசியாவின் காலத்தில் நிகழவிருப்பன பற்றி எடுத்துரைக்கின்றார். இவ்வாசகத்தில் கடவுள் தரும் முடிவில்லா அமைதியைப் பற்றி எசாயா இறைவாக்குரைக்கிறார். ‘இறுதி நாள்களில் மக்களினங்கள் யாவே இறைவனை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்என்கிறார் எசாயா. அவர்கள் இங்கு வருவதன் நோக்கம்ஆண்டவரின் வழிகளைக் கற்றுக்கொள்வதே.’ எல்லா மக்களும் யாவே இறைவனைத் தேடி வருவதால், ‘யாவே அனைவருக்கும் ஆண்டவர்என்ற கருத்து இங்கே வலியுறுத்தப்படுகிறது. எனவே, யாவே ஆண்டவரின் வழியில் அவருடைய கட்டளைகளைக் கேட்டு மக்கள் நடக்கும்போது அமைதியில் அவர்கள் வாழ்வார்கள் என எசாயா எடுத்துரைக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் நமக்கான அழைப்பு என்பது, ஆண்டவரின் மலைக்குச் செல்லவேண்டுமெனில், அழிவுக்கு இட்டுச் செல்லும் செருக்கையும் ஆணவத்தையும் விட்டுவிடவேண்டும் என்பதுதான். மனிதரில் வெளிப்படும் செருக்கும் ஆணவமும் அழிவுக்கானவை. இவை பல வழிகளில் மனிதரைச் சிறுமைப்படுத்துகின்றன (5:11); கடவுளை அறியவோ, அவருக்குப் பணிவிடை புரியவோ விடாமல் மனிதரைத் தடுத்துவிடுகின்றன. ஆகவே, இன்று இவற்றிலிருந்து விடுபட்டு, கிறிஸ்துவை நோக்கிப் பயணம் செய்யும் உளப்பாங்கை நாம் பெறவேண்டும். இயேசு நம் நடுவில் அமைதியை விதைக்க வருகிறார். அவரை நோக்கிப் பயணம் செய்யும் நாம் அமைதியை நம்மில் ஏந்தவேண்டும். வாள்கள் கலப்பைக் கொளுக்களாகவும், ஈட்டிகள் கருக்கரிவாள்களாகவும் மாறவேண்டும் (2:4).

இன்றைய நற்செய்தியில் இயேசு இறுதித் தீர்ப்புப் பற்றிப் போதிக்கையில் (மத் 24:37-44) மூன்று கருத்துகளை நமக்கு முன்வைக்கின்றார். அவை: ) எச்சரிக்கையாக இருத்தல், ) தயார்நிலையில் இருத்தல், ) விழிப்பாய் இருத்தல்.

முதலாவதாக, ‘எச்சரிக்கையாக இருத்தல்குறித்து இயேசு பழைய ஏற்பாட்டில் நிகழ்ந்த நோவா காலத்து வெள்ளப்பெருக்கு நிகழ்வை மேற்கோள்காட்டுகிறார். எல்லாரும் மனம்போன போக்கில் வாழ்ந்தாலும், நோவா மட்டும் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். நேர்மையாளராக வாழ்ந்த நோவாவும் அவரது குடும்பத்தாரும் கடவுளின் அருளால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பெட்டகம் செய்வதைக் கண்டும்கூட, மக்கள் விழிப்பாக இல்லை. மனமாற்றம் பெறாததால் அவர்கள் சந்தித்தது அழிவையே. இந்நிகழ்வைக் குறிப்பிடும் இயேசுவும், ‘மானிட மகனின் வருகையின்போதும் இவ்வாறே இருக்கும்என எச்சரித்து, அவரின் குரலுக்குச் செவிமடுக்க அழைப்பு விடுக்கிறார்.

இரண்டாவதாக, எதிர்பாராத நேரத்தில் ஆண்டவரின் திடீர் வருகைக் குறித்து எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்த, “இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்...” (மத் 24:40,41) என்னும் உருவகம் வழியாகத் தீயவர்கள் கைவிடப்பட்டு நல்லவர்கள் கடவுளால் என்றுமுள்ள வாழ்விற்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என்று பொருள்பொதிந்த விதத்தில் எடுத்துரைக்கின்றார். ஆண்டருடைய வருகை வந்தே தீரும் என வலியுறுத்தும் இயேசு, தம் வாழ்வால் அவருக்கு உகந்தவராய் இருந்து அவரை வரவேற்க எப்போதுமே தயாராக இருக்கவேண்டும் என அறிவுரை தருகிறார். ஆகவே, கடவுளுக்காக நமது கடமைகளைப் பொறுப்புடன் ஆற்றுவதில் பிரமாணிக்கமாக இருப்பதுகூட நமது மீட்புக்குப் பெரிய அளவில் உதவும்.

மூன்றாவதாக, இயேசு திருடர் குறித்த ஒரு கருத்தைக் கூறி, ‘விழிப்பாய் இருங்கள்என்று நம்மை எச்சரிக்கின்றார். நமது வீட்டிற்குள் திருடர் எப்போது வருவார் என்பதை நாம் அறிந்திருந்தால், நமது உடைமைகளைக் காப்பாற்றிக்கொள்ளலாம். ஆனால், திருடர்கள் எப்போது வருவார்கள் என்பது எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதுபோலவே, மானிடமகனின் இரண்டாவது வருகை எப்போது நிகழும் என்பது எவருக்கும் தெரியாது (மத் 24:36). எனவே, எந்நேரத்திலும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பது ஓர் அழுத்தமான அழைப்பாகும்.

திருவள்ளுவர் தனது குறளில்,

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும் (435)

என்கிறார். அதாவது, முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கையானது, நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல்போர் போலக் கருகிவிடும் என்று எச்சரிக்கின்றார்.

ஆகவே, ‘விழிப்பாக இருத்தல்என்பது இன்று மிக முக்கியக் கிறித்தவக் கடமையாகப் பார்க்கப்படுகிறது. ‘நகைச்சுவைப் புனிதர்என்று அழைக்கப்படும் புனித பிலிப்நேரி நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவர் அவரிடம், “பிலிப், இதோ அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?” என்று கேட்டார். அதற்கு அவர் புன்னகையுடன், “தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பேன்என்றாராம். அதுபோலவே, 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞரான ஜான் வெஸ்லியிடம், “இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்க, வெஸ்லியோமாலை நான்கு மணிக்கு நான் வழக்கம்போல் தேநீர் அருந்துவேன்; ஆறு மணிக்கு நோயுற்றிருக்கும் திருமதி. பிரவுனை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன்; எட்டு மணிக்கு மாலை செபங்களைக் கூறிவிட்டு, உணவிற்குப் பின் வழக்கம்போல் தூங்கச் செல்வேன்; விழித்தெழும்போது இறைவன் முகத்தில் விழிப்பேன்என்று கூறினாராம்.

நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்துவேன் (யோவா 17:4) எனும் இயேசுவின் கூற்றுக்குப் புனித பிலிப் நேரி மற்றும் ஜான் வெஸ்லி ஆகியோர் நல்லதோர் எடுத்துக்காட்டு.

நிறைவாக, திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில், ‘இறுதிக் காலம் இதுவேஎன்று கூறி, உறக்கத்திலிருந்து விழித்தெழ நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார். இங்கேஉறக்கம்என்பது ஊனியல்பின் நாட்டத்தைக் குறிப்பதாக அமைகிறது. பவுல்இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக!’ என்கிறார். அதாவது, தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்புக்குரிய செயல்களை விட்டுவிட்டு, ஆவிக்குரிய செயல்களை அணிந்துகொள்வோம்.

நாம் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி செயல்பட்டு, தம் கடமைகளை முழுமையாக நிறைவேற்றி, அவர் மீண்டும் வரும்போது அவரை மகிழ்ச்சியோடு சந்திக்கத் தயாராவோம். ஆக, மகிழ்வோடு ஆண்டவரின் இல்லத்திற்குப் போக (திபா 122:1) இன்றே அன்பையும் அமைதியையும் நம் வாழ்வில் வெளிப்படுத்துவோம். நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்; எனவே, விழிப்பாக இருப்போம்!