“மறைப்பணி என்பது திரு அவையின் இதயம்” என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். நற்செய்தியை, கிறிஸ்துவின் மேன்மைமிகு இறையாட்சியின் விழுமியக் கோட்பாடுகளை எங்கும் விதைத்து, சமத்துவச் சமூகம் படைப்பதே மறைப்பணி. இயேசு என்னும் நற்செய்தியையும், இயேசுவின் நற்செய்தியையும் அறியாத ஒருவருக்கு வழங்கி அவரை மெய்மறையில் சேர்த்து, தொடர்ந்து இறை உறவில் வளரச் செய்வது உலகோர் கண்களுக்கு மதமாற்றமாக அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால், இறை நம்பிக்கையை மட்டும் பகிர்ந்துகொள்ளாது மற்ற நம்பிக்கையாளர்களையும் மாண்புடன் மதித்து, அறச்சிந்தனைகளை விதைத்து, தனிமனிதனிலும் சமூகத்திலும் மாற்றத்தை முன்வைத்து, சமூக மேம்பாடு என்னும் உன்னத இலக்குடன் மதமாற்றம் அல்ல. மாறாக, மனமாற்றமும் மானுட ஏற்றமும் காண மேற்கொள்ளப்பட்டதே கிறித்தவ மறைப்பணி.
கிறிஸ்துவை
ஏற்றுக்கொண்டவர்களுக்கு
நற்செய்தியைப் பகிர்ந்து, அருளடையாளங்களை வழங்கி, நம்பிக்கையை வளர்க்கும் அன்றாட ஆன்மிகப் பணிகளோடு மறைப்பணி முற்றுப் பெறுவதில்லை; மாறாக, அது... “ஏழையருக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, பார்வையற்றோருக்குப் பார்வை, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு, அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிப்பது” (லூக்
4:18-19) எனும் ஆன்மிக அடித்தளம் கொண்ட சமூகப் பணிகளைக் கண்முன் நிறுத்துவதே! குறிப்பாக, கல்வி, மருத்துவம், சுகாதாரம், பொருளாதார ஏற்றம், சமூக மாற்றம், மனிதமாண்பு, சமத்துவ உரிமை போன்ற தனிமனித மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுப்பதே கிறித்தவ மறைப்பணி.
திசையறியா,
தேக நிலையறியா, தேச முறையறியா எண்ணம் கொண்டு, தன்னை முழுமையாக அறிந்து, அழைத்த தேவனை மட்டுமே வாழ்வில் கண்டு, தன் நாடு, இனம், தந்தை வீடு (தொநூ 12:1) என்னும் முகவரி துறந்து, முகமற்றவர்களின் முகமாய், குரலற்றவர்களின் குரலாய், முகவரியற்றவர்களின் முகவரியாய் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களே மறைப்பணியாளர்கள்.
கருணையும்
அன்பும் கறையில்லா வாழ்வும் கொண்டு, கரைசேரா ஓடங்களுக்குக் கலங்கரை விளக்கானவர்கள் மறைப்பணியாளர்கள். இருள்சூழ் உலகில் தனிமனிதரிலும் சமூகத்திலும் அகமும் புறமும் ஒளியேற்றியவர்கள்; அவர்கள் மனிதர் முன் ஞான ஒளி வீசியவர்கள் (மத் 5:16).
பிறர்
துயர் தீர்க்கும் பெருங்கருணை ஒன்றுதான் மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கும். “வாழ்க்கை என்பது தன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுப்பது; அடுத்தவரிடமிருந்து எதையும் எடுப்பது அன்று” என்றார் பிரெஞ்சுப் படைப்பாளி விக்டர் ஹயூகோ. “அன்பில்லாத இடத்தில் மனித முகங்கள் வெறும் படங்கள்; அவர்கள் பேசும் பேச்சு உயிரில்லா ஓசை கொண்டவை” என்றார் ஆங்கில அறிஞர் பேகன். அவ்வகையில், அன்பும் கருணையும் மறைப்பணியாளர்களை உன்னத மகான்கள் ஆக்கியது; தன்னலம் துறந்து, பிறர்நலம் தேடும் பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் ஆக்கியது; உறவில்லாத உயிர்களுக்கெல்லாம் ஓடிச்சென்று உதவத்துடிக்கும் உன்னதர்களாக்கியது; வாழ்வின் வலிகளால் சிதையுண்டு, வழி தொலைத்த மக்களுக்கு வாஞ்சையோடு வழிகாட்டும் சமூகப் போராளிகளாக்கியது. அத்தகைய வரிசையில் கிறித்தவர்களின் மறைப்பணியும், மறைப்பணியாளர்களின் இறைப்பணியும் கரையில்லாக் கடலாக வியப்பளிக்கிறது.
இக்கடலில்
கலந்த நீர்த்துளிகளில் ஒன்றுதான் இறை ஊழியர் மைக்கில் அன்சால்தோ. மறைப்பணியின் மாண்பினை உணர்ந்து, பன்முகத்தளங்களில் தடம் பதித்து, கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூகப்பணி, சமத்துவம் காணும் விடுதலைப் பணி.... எனும் தனது பணிகள் தொடர்ந்திட இறைத்துணையுடன் அவர் தொடங்கிய ‘கொன்சாகா அருள்சகோதரிகள் துறவற சபை’ இன்று தனது சபை நிறுவுநரின் கனவுகளை நனவாக்க, கடந்த 250 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் பணிகள் பெரிதும் பாராட்டத்தக்கவை.
1775-ஆம் ஆண்டு
இத்தாலி நாட்டிலுள்ள செசிலி தீவில் புனித லூயிஸ் தே கொன்சாகா இல்லத்தில்
தொடங்கப்பட்ட ‘பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சகோதரிகள் சபை’ இன்று ஆல்போல் தழைத்து, விருட்சங்களாகத் தன் விழுதுகளைப் பரப்பி இப்பணிகளைத் தொடர்ந்து வருவது இறைத்திருவுளமே.
திருத்தந்தை
லியோ, யூபிலி கொண்டாட்டத்தின் நினைவாகத் துறவற சபைகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது, “தங்கள் சபை நிறுவுநர்களின் இலக்குகள் அடிப்படையில் ஒவ்வொருவரும் காலத்தின் அடையாளங்களை முறையாகத் தொடர்ந்து கணிக்கவேண்டும்; அன்றைய காலச்சூழல்களின் தேவைகளுக்கு ஏற்றார்போல் துணிவுடனும் தெளிவுடனும் தங்கள் சபை நிறுவுநர்கள் தூய ஆவியாருக்குப் பதிலளித்து, பணிகளை மேற்கொண்டதுபோல, கடந்த தலைமுறையினரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, உயர்ந்த இலட்சியங்களைப் புரிந்துகொண்டு, ஒவ்வொருவரும் அவரவர் அருள்கொடைகளை அடையாளம் கண்டு, நம்பிக்கையுடனும் தாராள மனத்துடனும் நற்பணிகளைத் தொடர வேண்டும்; அதற்கு இறைவன் வழங்கிய அருள்கொடைகளைப் பயன்படுத்த வேண்டும்”
எனக் கேட்டுக்கொண்டுள்ளார் (வத்திக்கான், செப்: 20). அத்தகைய மனநிலையில், சபை நிறுவுநரின் ஆழ்மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் எளிய வாழ்வு, ஆழமான அர்ப்பணம், தன்னலம் துறந்த பணி வாழ்வு, கடின உழைப்பு, இறையன்பில் வேரூன்றிய பக்தி முயற்சி, ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்கான அர்ப்பண வாழ்வு... என்னும் இலக்கு கொண்ட கொன்சாகா அருள்சகோதரிகளின் பணிகள் கிறிஸ்துவின் மனநிலையையும், சபை நிறுவுநரின் கனவுகளையும் அவருடைய ஆழமான ஆன்மிகத்தையும் பிரதிபலிக்கின்றன.
கத்தோலிக்கத்
திரு அவை இவ்வாண்டினை மாபெரும் யூபிலி ஆண்டாகக் கொண்டாடிச் சிறப்பிக்கும் இவ்வேளையில், கொன்சாகா துறவியர் சபை தனது 250-வது யூபிலி ஆண்டைச் சிறப்பிப்பது பெரும் மகிழ்வுக்குரியதே! இவ்வேளையில், இச்சபையின் தலைமை அன்னை அருள்சகோதரி ஞானமணி FSAG, சபை
நிர்வாக ஆலோசகர்கள் மற்றும் அருள்சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் வாசகர்கள் சார்பாக ‘நம் வாழ்வு’ தனது வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்குகிறது. இந்த 250-வது யூபிலி விழாக் கொண்டாட்டத்தின் நினைவாக இச்சிறப்பிதழை வெளிக்கொணர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்