“நான் ஒரு சாதாரணமான ஆட்டோக்காரன் தான் சார். ஏதோ அன்றாடம் கிடைக்கிறத வைச்சி பிழைப்பு ஓடுது. பணம் சம்பாதிக்கணுமுனு ஆசைதான். அதுக்காக இப்படி திருடிதான் சம்பாதிக்கணுமுணு இல்ல சார். அதான் இந்தப் பணத்தை உங்க கிட்டயே கொடுத்துக்கிட்டு போலாமுணு வந்தேன்!”
தன்
ஆட்டோவில் ஒருவர் மறந்து வைத்துச் சென்ற தோள்பையையும், அதனுள்ளே இருந்த ஒரு கட்டுப் பணத்தையும் போலீசிடம் ஒப்படைக்க வந்திருந்தான் கணேசன். காவல்துறையினர் கணேசனின் நன்னடத்தையை வெகுவாகப் பாராட்டி அவரோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
ஆட்டோவில்
வீடு திரும்பும்போது கணேசனின் மனம் கம்பளத்தில் பறப்பதுபோல இலகுவாக இருந்தது. ஏதோ பெரிய மனப்பாரம் குறைந்ததாகத் தோன்றியது. ஆட்டோ நேராகச் சென்றாலும், அவனுடைய மனம் காலை நடந்த நிகழ்வையே சுற்றி வந்துகொண்டிருந்தது.
அன்றைய
நாள் காலை ‘ஊபர்’ செயலியில் கணேசனுக்கு முதல் சவாரி வந்தது. பயணியை அழைத்துச்செல்ல சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் வந்திருந்தான். ஐந்து நிமிடங்கள் ஆன பிறகும் பயணியைக்
கண்டுபிடிக்க முடியவில்லை. போன் போட்டுப் பார்க்கிறான். ‘இதோ இங்கு நிற்கிறேன், அங்கு நிற்கிறேன்’ என்று
பதில் வருகிறதே தவிர, சரியான லொக்கேசனை கணேசனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
“சார்! உங்க லொக்கேசனை ‘என்னேபிள்’
பண்ணுங்க. அப்போதான் நீங்க எங்க இருக்கீங்கனு எனக்குத் தெரியும்”
என்று போனில் ஒரு சிறு பிள்ளைக்குக் கூறுவதுபோல விளக்கமாகக் கூறிக்கொண்டிருக்கிறான்.
சில
நிமிடப் போராட்டங்களுக்குப் பிறகுதான் தெரிந்தது, அந்தப் பயணி சென்னை எக்மோருக்குப் பதிலாக, பிக்-அப் லொக்கேசனை சென்னை சென்ட்ரலுக்குப் போட்டிருப்பது. மனத்திற்குள்ளேயே அந்தப் பயணியைத் திட்டிக்கொண்டு சென்னை எக்மோர் இரயில் நிலையத்திற்கு விரைந்தான் கணேசன்.
சர்ட்
இன் செய்துகொண்டு கையில் ஒரு சூட்கேசும், தோளில் ஒரு பையும் மாட்டிக்கொண்டு நின்றுகொண்டிந்தார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர். முதல் முறையாக சென்னைக்கு வருவது போலிருந்தது அவருடைய செயல்பாடுகள். கணேசன் அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆள்வார்பேட்டை நோக்கிப் புறப்பட்டார்.
பயணத்தின்
தொடக்கநிலையில் யாரும் பேசிக்கொள்ளவில்லை. அவ்வப்போது கணேசன் அவரை முன்பாக இருந்த கண்ணாடியில் பார்த்துக்கொண்டார்.
“சார்! காலையிலேயே என்ன சுத்தவிட்டிட்டீங்களே! ஒரு ஐம்பது ரூபாய் போட்டுக்கொடுங்க” என்று
கணேசன் கேட்டவுடனேயே, புகை கக்கும் ஆட்டோ சைலன்சர் போலக் கோபத்தில் கத்தத் தொடங்கினார் அந்த மனிதர்.
“ஆட்டோவ நிறுத்து. ஸ்டாப் த ஆட்டோ! ஐ
சே. யூ டாமிட்! ரைட்
நவ்.”
கணேசனுக்குத்
தூக்கி வாரிப்போட்டது. பந்தை எறிந்தால் பந்து திரும்பி வரும் என்று எதிர்பார்த்த கணேசன் அணுகுண்டு திரும்பி வந்ததை எதிர்பார்க்கவில்லை. ஆட்டோவைச் சாலையருகிலே நிறுத்தினார். ஆட்டோவை விட்டு இறங்கியவர் ஓய்ந்தபாடில்லை. கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டினார். “ஐ வில் கால்
த போலீஸ்” என்று ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தார். சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள், சென்றுகொண்டிருந்தவர்கள் எனப் பலரும் அங்குக் கூடிவிட்டனர்.
“சார்! கொஞ்சம் பாத்து பேசுங்க. படிச்ச மனுசன் மாதிரி தெரியிறீங்க. ஒழுங்கா லொக்கேசன் கூட உங்களுக்குப் போடத் தெரியல. உங்க மேல தப்ப வைச்சிக்கிட்டு என்ன தப்பு சொல்லாதீங்க” என்று
கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட்டார் கணேசன்.
என்ன
நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென்று ஆட்டோவிலிருந்த தன் சூட்கேசை எடுத்துக்கொண்டு அந்த நெடுஞ்சாலையில் ஒன்றும் பேசாமல் வேகமாக நடந்தார் அந்த மனிதர்.
“யோவ்! காசு கொடுத்துக்கிட்டுப் போயா” என்று கூறிப்பார்த்தார் கணேசன். ஆனால், அந்த மனிதருக்கு அந்த நேரத்தில் காது கேட்கவில்லை. கோபத்தில் கொப்பளித்துக்கொண்டே தன் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு ஸ்டாண்டுக்கு திரும்பினார் கணேசன்.
‘காலையிலேயே பஞ்சாயத்து ஆகிப்போச்சே’ என்று
தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கையில், பின்னிருக்கையில் இருந்த அந்தத் தோள் பையை கணேசன் பார்த்தார். ஆத்திர அவசரத்தில் அந்த மனிதர் தோள் பையை விட்டுவிட்டுப் போயிருக்கக் கூடும். ஆட்டோவை ஓரமாக ஒதுக்கி, பைக்குள் என்னயிருக்கின்றது என்பதைப் பார்க்கின்றபோது, அங்குச் சில கோப்புகளும், ஒரு கட்டுப் பணமும் இருந்தன.
‘அந்த மனுசனைப் பழிவாங்க சரியான வாய்ப்பு. இந்தப் பணத்தை நாமே வைத்துக்கொள்ளலாம்’ என்றது
ஒரு மனம். ‘திருப்பிக் கொடுத்துவிடலாம். அந்த மனுசனுக்கு அப்படி என்ன பிரச்சினையோ?’ என்றது மற்றொரு மனம்.
பல
குழப்பங்கள், போராட்டங்களுக்குப் பிறகு போலிஸ் ஸ்டேசனில் திருப்பிக்கொடுத்து விடலாம் என முடிவுசெய்து போலிஸ்
ஸ்டேசன் நோக்கிப் புறப்பட்டார் கணேசன். அவருடைய ஆட்டோவின் பின்னால் ‘நேர்மைதான் எரிபொருள் - அதுதான் வாழ்க்கையை ஓட்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது.
பொய்யும்
புரட்டும் போலியும் ஏமாற்றும் மலிந்துகிடக்கும் இணைய உலகில், ஒன்று குறைபடுவதாகப் பார்க்கிறேன். அதுதான் நேர்மை என்ற எரிபொருள். புலனம் (Wats-App) செயலியை
இன்று உலக அளவில் 2.78 பில்லியனுக்கு அதிகமானோர் 180 நாடுகளில் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்குச் சராசரியாக 140 பில்லியன் குறுஞ்செய்திகளைப் பகிர்ந்துகொள்கின்றனர். பேசுவதற்கு, குறுஞ்செய்தி அனுப்புவதற்கு, உணர்வுகளை எமோஜி வழியாகப் பகிர்ந்துகொள்வதற்கு, குரல் செய்தி அனுப்புவதற்கென்று பல தேவைகளுக்கு நாம்
வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகிறோம். ஆனால், சமீபகாலமாக, புலனம் கூட கொந்தர்களால் (Hackers) கொந்தப்படுகிறது
(Hacking) என்பது
அதிர்ச்சி தருகின்றது (கொஞ்சம் கணினித் தொடர்பான தமிழ் வார்த்தைகளையும் அவ்வப்போது தெரிந்துகொள்ளலாமே!).
1. சைபர்
கிரிமினல்கள் லிங் ஒன்றை வாட்ஸ்-அப் குழுக்களில் அல்லது தனிநபருக்கு அனுப்பி அதனைக் ‘கிளிக்’ செய்யச் சொல்கின்றனர். அனுப்பப்படுகின்ற மீத்தொடுப்பு (Hyberlink) பயனர்களால்
சொடுக்கப்படுகிறப்போது
(Click) நமது
கணக்கு கொந்தப்படுகிறது. எனவே இத்தகைய ஏமாற்று மீத்தொடுப்புகளை (phishing) புறக்கணிப்பது நல்லது.
2. சைபர்
கிரிமினல்கள் கால் அல்லது மெசேஜ் செய்து ஒருமுறை கடவுச்சொல் (OTP) அல்லது
உறுதிப்படுத்தல் குறியீட்டை (Verification code)
சூழ்ச்சியால் கேட்டுப் பெற்றுக்கொண்டு நமது கணக்கை ‘ஹேக்’ செய்கின்றனர். எனவே, அத்தகைய ஏமாற்றுதல்களுக்கு இரையாகாமலிருப்பது நல்லது.
3. சில
வேளைகளில் பெகாசஸ் (Pegasus) போன்ற
உளவுச் செயலிகளைப் பயன்படுத்தி நமது கணக்கை ‘கொந்தர்களால்’ ‘ஹேக்’ செய்ய
முடியும்.
4. கியூ.ஆர். குறியீட்டை (QR Code) வருடி
(Scan), பிற
மின்னணு சாதனங்களில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றோம். ஆனால், அந்தக் கியூ.ஆர். குறியீடு நம்பகமானதா என்பதைச் சரிபார்க்கவேண்டும்.
5. வாட்ஸ்அப்பில்
‘இரு-படி சரிபார்ப்பை’ (Two step
verification) இயலுமைப்படுத்துவது (enabling) கொந்தர்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும்.
மக்களை
இத்தகைய புதிய அதிநவீன ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க தொழில்நுட்பத்துறையைச் சார்ந்தவர்களும் இந்திய அரசும் புதிய தொழில்நுட்பத்தையும் செயல்திட்டங்களையும் துரிதமாக முன்வைக்கவேண்டும். செயலிகளையும் இணையத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் மக்கள் மிகக் கவனத்தோடு அவற்றைக் கையாளவேண்டும்.
‘நேர்மைதான் எரிபொருள் - அதுதான் வாழ்க்கையை ஓட்டும்’ என்ற எண்ணம் இல்லாதவரை, இணையத் தாக்குதல்களும் கொந்துதல்களும் தொடர்ந்து நடைபெறும் என்றே நினைக்கிறேன்.
(தொடரும்)