‘ஏழையரில் ஏழையர், எளியவரில் எளியவர், இழப்பவரில் இழந்தவர் இருந்திடும் அந்த இடமே இறைவா உமக்குச் சொந்த இடம்!’
என்று
ஏழைகளில் இறைவனைக் கண்டு, வலுவற்றவர் வாழ்வுபெற, சமயங்களைக் கடந்து, சமூகத்தின் உயிர் வளர்க்கும் கருவியாய், 250 ஆண்டுகாலப் பயணத்தில் ‘எளியோர்க்கு நற்செய்தியாய்’ விளங்கும்
எம் தாயாம் கொன்சாகா சபையை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். ‘கொன்சாகா சகோதரிகள் என்றாலே ஏழைகளின் சகோதரிகள்’ என்ற
வழக்கு உண்டு. ஆம், சகோதரிகளின் வாழ்வு எளிமைக்கும் தன்னலமற்ற சேவைக்கும் சான்றாகத் திகழ்கிறது. ‘ஏழைகளுக்கு நற்செய்தி’
என்ற சபையின் நோக்கத்தை உள்வாங்கி ஒடுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட மக்களின் வாழ்வு புத்துணர்ச்சி பெற கொன்சாகா சகோதரிகள் ஆற்றி வரும் பணிகள் அளப்பரியது.
ஆடம்பரமும்
ஆரவாரமும் இன்றி எளிய பின்புலத்தில் யாம் செய்து வரும் பணிகள் ஏராளம். இவை அனைத்துத் தரப்பு மக்களோடும் கொன்சாகா சகோதரிகளை எளிதில் ஒன்றிணையச் செய்கின்றன. புனித பிரான்சிஸ் அசிசியாரின் சட்டம்-ஒழுங்கும், புனித அலோசியஸ் கொன்சாகாவின் ஆன்மிக வழிகாட்டுதலும் கொன்சாகா சபையின் பெரும் சொத்து!
சின்னஞ்சிறியோரில்
இறைவனைக் கண்டு, விளிம்பில் விழிபிதுங்கி நின்ற மனிதர்களை அள்ளி அரவணைத்துக் கொண்டதுதான் எம் சபையின் ஊற்று.
பாமரருக்காகத்
துடித்தது இதயம் எம் முன்னவரின் இதயம். எளிய வாழ்வும் கனிவான முகமும் பரிவுள்ளமும் இரக்கச் செயல்களுமே கொன்சாகா சகோதரிகளின் அடையாளம். குடும்ப உணர்வும், சகோதரப் பாசமும் அம்மா,
அக்கா, தங்கை என உடன் வாழும்
சகோதரிகளை உறவு முறை சொல்லி அழைத்து அன்பு காட்டுவதே எங்களின் பெரும்பலம்.
வறியோர்
வளர்ச்சி பெறவும், நலிந்தோர் நல்வாழ்வு பெறவும் உழைத்த சகோதரிகளின் தன்னலமற்ற சேவை, எம் கொன்சாகா சபையின் 250 ஆண்டு வரலாற்றை அழகுற நிறைத்திருக்கின்றது.
250 ஆண்டுகாலமாய் யாம்
கடந்து வந்த பயணத்தில் கரம்பிடித்து வழிநடத்திய இறைவனுக்கு நன்றிப்பண் இசைக்கிறோம். தன்னலம் துறந்து, பிறர்நலம் போற்றும் எம் கொன்சாகா சகோதரிகளின் பிறரன்புப் பணி மென்மேலும் சிறக்கட்டும்! எங்கும் புதுவாழ்வு மலரட்டும்!