news-details
ஆன்மிகம்
காலங்கள் கடந்த முடிசூட்டு விழா! (கிறிஸ்து அரசர் பெருவிழா - 23.11.2025)

வழிபாட்டு ஆண்டின் சிகரமாகவும், அதன் மகுடமாகவும் விளங்குவது மாட்சிமிகு கிறிஸ்து அரசர் பெருவிழா. இத்திருநாள் ஒரு சாதாரண கொண்டாட்டம் அல்ல; இது காலத்தைக் கடந்து நிற்கும் ஓர் அரசரின் நிலையான ஆட்சிப் பிரகடனமாகும்.

இந்த விழா 1925-ஆம் ஆண்டு திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்களால்Quas Primasஎன்ற சுற்றுமடலின் மூலம் நிறுவப்பட்டது. உலகப் போர்கள் மற்றும் மதச்சார்பின்மையின் எழுச்சியால் உலகெங்கும் குழப்பமும் அநீதியும் கோலோச்சிய காலத்தில், உலகிற்கு உண்மையான அமைதியையும் நீதியையும் வழங்கக்கூடிய ஒரே அரசர் இயேசு கிறிஸ்து மட்டுமே என்ற அடிப்படை உண்மையை உலகிற்கு உரக்கக்கூறும் கட்டாயம் திரு அவைக்கு ஏற்பட்டது. கிறிஸ்துவை நம் வாழ்வின் மையத்தில், சமூகத்தின் மையத்தில் மீண்டும் நிலைநாட்டவே இத்திருநாள் நிலைபெற்றது.

திருவிழாவின் முக்கியத்துவம்

இந்த விழாவானது ஆண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படுவதற்குக் காரணம், நமது நம்பிக்கைப் பயணத்தின் இறுதி இலக்கையும், நம் வரலாற்றின் முடிவில் கிறிஸ்து இயேசு எப்படி எல்லாவற்றிற்கும் முடிசூட்டப்பட்ட அரசராக வருவார் என்பதையும் நமக்கு நினைவூட்டி, நாம் அனைவரும் நமது நம்பிக்கை வாழ்க்கையின் விளைவுகளைச் சிந்தித்து, மீண்டும் ஒரு புதிய நம்பிக்கைப் பயணத்தைத் தொடங்க ஆயத்தமாவதற்கு இத்திருநாள் ஆண்டின் முடிவில் கொண்டாடப்படுகிறது. நாம் இன்று கேட்கவேண்டிய கேள்வி: ‘நம் உள்ளங்களில், நம் குடும்பங்களில், நம் சமூகத்தில் கிறிஸ்து உண்மையிலேயே அரசராக ஆட்சி செய்கிறாரா? இல்லையேல், நாம் அவருக்குச் சிம்மாசனத்தை அமைத்துக் கொடுக்க மறுக்கிறோமா?’

கிறிஸ்துவின் அரச மேன்மை என்பது ஒரு புதிய கருத்து அல்ல; இது யூதர்களின் நம்பிக்கையின் ஆணிவேராக இருந்தது. மேலும், இறைவாக்கினர்கள் மூலமாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முன்னறிவிக்கப்பட்டது. கடவுள் தாவீது அரசருக்கு, “உன் அரியணை என்றும் நிலைத்திருக்கும் (2சாமு 7:16) என்று வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி தாவீதின் வழித்தோன்றலாக வரவிருந்த நிலையான அரசராகிய கிறிஸ்துவில்தான் முழுமை பெறுகிறது. “இதோ! ஓர் அரசர் நேர்மையுடன் அரசாள்வார்; தலைவர்களும் நீதியுடன் ஆட்சி செய்வார்கள் (எசா 32:1). இயேசு நீதியின் அரசராகவும் அமைதியின் அரசராகவும் வருவதை எசாயா தீர்க்கத்தரிசியும் தெளிவாக முன்னறிவித்தார் (எசா 9:6).

புதிய ஏற்பாட்டின் பிரகடனம்

கபிரியேல் வானதூதர் அன்னை மரியாவிடம், “அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்; அவர் தம் தந்தையாகிய தாவீதின் அரியணையை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் வீட்டின்மீது என்றென்றும் ஆட்சி செய்வார் (லூக் 1:32-33) என்று அறிவித்தார். இது இயேசுவின் அரச மேன்மையை அவர் கருவிலிருக்கும்போதே உறுதிசெய்கிறது. இயேசு தமது போதனைகள் அனைத்திலும்விண்ணரசுஅல்லதுகடவுளின் அரசுபற்றியே அதிகம் பேசினார். மலைப்பொழிவு, உவமைகள் அனைத்தும் அந்த அரசின் மதிப்புகளையும் சட்டங்களையும் வெளிப்படுத்தின. அவர் எருசலேமுக்குள் ஒரு கழுதையின்மீது பவனி வந்தபோது, மக்கள்தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் ஆசிர்வதிக்கப்பட்டவர்! இஸ்ரயேலின் அரசர்!” என்று ஆர்ப்பரித்தனர் (மத் 21:9; யோவா 12:13). கிறிஸ்துவின் அரச மேன்மை என்பது தற்காலிகமானதல்ல; அது காலம் கடந்த ஒரு நிலையான உண்மை!

உலக அரசர்களின் ஆட்சிக் கோட்டைகள், படை பலங்கள், ஆடம்பரமான உடைகள் ஆகியவற்றால் பிரகாசிக்கிறது. ஆனால், கிறிஸ்து அரசர் தமது அரியணையைச் சிலுவையிலும், தமது கிரீடத்தை முள் முடியிலும், தமது அரச உடைமையைப் பிறரின் ஏளனமான பேச்சிலும் கண்டார். இதுவே கிறிஸ்துவின் ஆட்சியின் மிகப்பெரிய முரண்பாடாகும்.

கிறிஸ்து அரசின் பண்புகள்

கிறிஸ்துவின் அரசு ஒருபோதும் நிலையற்றதல்ல; காலத்திற்குத் தகுந்தபடி மாறும் கோட்பாடுகளைக் கொண்டதும் அல்ல; அதன் அடிப்படைகள் நிலையானவை. இயேசுவின் மலைப்பொழிவே இந்த அரசின் அரசியலமைப்புச் சட்டமாகும். இயேசுவேவழியும் உண்மையும் வாழ்வும்...” (யோவா 14:6) என்று அறிவிக்கிறார். அவருடைய அரசு பொய், கபடம், தந்திரம் ஆகியவற்றின்மீது கட்டப்படவில்லை. அது உண்மைமீது நிறுவப்பட்டிருக்கிறது.

முதலில் அவரது அரசையும் அவரது நீதியையும் தேடுங்கள் (மத் 6:33). கிறிஸ்துவின் அரசு என்பது சமத்துவத்தின் அரசாகும். இங்குப் பணக்காரன்-ஏழை, ஆள்பவர்-ஆளப்படுபவர் என்ற வேறுபாடுகள் இல்லை. ஒவ்வொரு மனிதனும் கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்டு, சம மதிப்புடையவனாக மதிக்கப்படுகிறான். சமூக அநீதிகளைக் களைவதும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதும் இந்த அரசின் அடிப்படை விதியாகும். கிறிஸ்துவின் அரசின் மிக உயர்ந்த மற்றும் மிக முக்கியமான குணம் அன்பு. “நீங்கள் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள்; நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வேண்டும் (யோவா 13:34) என்பதே அரசின் முதன்மைக் கட்டளை. இந்த அன்பு நிபந்தனைகளற்றது. எதிரிகளை மன்னிப்பதும்பகைவருக்கு நன்மை செய்வதும், அநீதி இழைத்தவர்களுக்காகச் செபிப்பதும் இந்த அன்பின் வெளிப்பாடுகளே.

இந்த உலகம் தரும் அமைதி நிரந்தரமற்றது. ஆனால், கிறிஸ்து தரும் அமைதி நிலைத்திருப்பது. “நான் உங்களுக்கு அமைதியை கொடுத்துச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோவா 14:27). இந்த அமைதி புறச்சூழ்நிலைகளைப் பொறுத்தது அல்ல; அது கடவுளோடு மனிதன் கொண்டுள்ள உள்ளுறவின் விளைவாகும். உன் அமைதி, உன் குடும்ப அமைதி, உலக அமைதி என்பதே இந்த அரசின் செயல்பாட்டுத் தந்திரமாகும்.

சமூக நீதியும் கிறிஸ்துவின் ஆட்சியும்

கிறிஸ்துவின் ஆட்சி தனிப்பட்ட விசுவாசத்துடன் நின்றுவிடவில்லை. அது நாம் வாழும் சமுதாயம் முழுவதையும் உள்ளடக்கியது. சமூக வாழ்வில் நீதியையும் அன்பையும் நிலைநாட்டுவதே கிறிஸ்து அரசருக்கு நாம் செலுத்தும் உண்மையான அன்பின் வெளிப்பாடாகும். இதில் ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரே கிறிஸ்துவின் பிரதிநிதிகள் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. கிறிஸ்துவின் ஆட்சி வரையறை என்பது வறுமை, ஏற்றத்தாழ்வு, இன வெறி, சாதி வேறுபாடுகள், மனித உரிமை மீறல்கள் போன்ற எல்லாவகையான சமூகத் தீமைகளுக்கும் எதிரானது. கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொள்வது என்றால், உழைப்புக்குரிய கூலியை வழங்குவது, ஏழைகளுக்குச் செவிசாய்ப்பது. நேர்மையான ஆட்சிக்கு ஆதரவளிப்பது, பொது நன்மைக்காக உழைப்பது. கடவுளால் கொடுக்கப்பட்ட உலகைப் பாதுகாப்பது; அதைச் சுரண்டாமல் இருப்பது.

தனிப்பட்ட வாழ்வில் கிறிஸ்து அரசர்

கிறிஸ்துவை உலகத்தின் அரசர் என்று ஏற்றுக்கொள்வது எளிது. ஆனால், அவரை நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அதாவது நம் மனசாட்சியின், ஆசைகளின், முடிவுகளின் அரசர் என்று அறிக்கை செய்வதுதான் மிகவும் சவாலான செயல். கிறிஸ்து அரசின் குடியுரிமை பெறுவதற்குப் பிறப்புரிமை தேவையில்லை; மனமாற்றமும் சீடத்துவமும் மட்டுமே தேவை.

இறுதிக் காலத்தில் கிறிஸ்துவின் அரசு

கிறிஸ்து அரசர் பெருவிழா வெறும் வரலாற்றுக் கொண்டாட்டம் அல்ல; அது எதிர்காலப் பார்வையை நோக்கி நம்மை நகர்த்துகிறது. கடவுளைப் புறக்கணிக்கும் மதச்சார்பற்ற உலகில், நம்பிக்கையுடன் வாழ்வும் வெறுப்பும் பகைமையும் நிறைந்த உலகில், கிறிஸ்துவின் அன்பை வழங்கவும் அநீதியும் ஒடுக்குமுறையும் உள்ள சமூகத்தில், நீதிக்காக நாம் குரல் கொடுக்கவும் வலியுறுத்துவோம்.

நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்து அரசரின் தூதுவர்களாக இருப்போம். நம்முடைய வீடுகள் அந்த அரசின் சிறிய பிரதிபலிப்புகளாக இருக்கட்டும். நம்முடைய பணியிடங்கள் அந்த அரசின் நீதியையும் நேர்மையையும் பிரதிபலிக்கட்டும். கிறிஸ்துவின் அரசு என்றென்றும் நிலைத்திருப்பதுபோல, நம் வாழ்விலும் அவர் தரும் அமைதியும் நீதியும் அன்பும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.