news-details
சிறப்புக்கட்டுரை
கடவுளின் கைகளால் வரையப்பட்ட வரலாறு

நவதுறவகத்தில் நுழைந்தது எம் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. எம் பெயரைச் சொல்லி அழைத்த கடவுளின் பணிக்கு எம்மை முழுமையாக அர்ப்பணிக்க அளிக்கப்பட்ட கொடையாகும். இங்குதான் அவரின் முன்னிலையில் ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினோம். பெரும் நிகழ்வுகளில் அல்ல; தினசரி வாழ்க்கையின் அமைதியான நிகழ்வுகளில் ஒவ்வொரு விடியலும் புதிய பாடங்களைக் கற்பிக்கிறது. தினசரி செபங்கள், வகுப்புகள், பன்முகத்திறன் வளர்ச்சிகள் மற்றும் சமூக வாழ்க்கை எமக்குக் கடவுளின் இதயத் துடிப்பைக் கேட்டு எம் இதயத்தை அவரைப் போல வடிவமைக்க உறுதுணையாக இருந்துள்ளன.

இந்த யூபிலி ஆண்டில் எமது சபையின் வரலாற்றின் அழகை நாங்கள் மேலும் தெளிவாக உணர்ந்தோம். நமது மூத்த அன்னையர்களின் தியாகம், எளிமையான வாழ்வு, உறுதியான இறைநம்பிக்கை, கடின உழைப்பு போன்ற வாழ்க்கைமுறை எம்முள் வியப்பையும், உற்சாகத்தையும் எழுப்புகின்றன. அவர்கள் நடந்த தடங்கள், காலத்தால் மங்கினாலும், நாங்கள் இன்று நடக்கும் பாதையை அடையாளப்படுத்துகின்றன. எமது பாதுகாவலரான புனித அலோசியஸ் கொன்சாகா, தூய்மையான இதயத்துடன் வாழவும் தன்னலமற்ற அன்புடன் சேவையாற்றவும்  எம்மை ஊக்குவிக்கிறார்.

பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்த சகோதரிகளுடன் ஒற்றுமையாக வாழ்வது, விட்டுக்கொடுப்பது, மன்னிப்பது ஆகியவற்றை இந்தக் கொன்சாகா சபை எமக்குக் கற்பித்தது. எங்களின் உருவாக்கப் பொறுப்பாளர்கள் தங்கள் மென்மையான  குணத்தாலும் ஞானத்தாலும், வழிநடத்தலாலும் எங்களை வளர்த்தும், கடவுளின் சித்தத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் உதவினர்.

ஒவ்வோர் ஆன்மிகப் பயணமும், ஒவ்வொரு திருப்பலி அனுபவமும், ஒவ்வொரு சிந்தனையும் எம் உடலையும் ஆன்மாவையும் மெதுவாக, கடவுளின் பணிக்குத் தயாராகிய ஒரு பாத்திரமாக வடிவமைத்தன. ஏழைகள், புறக்கணிக்கப்பட்டோர், துன்புறுவோர் ஆகியோருக்குச் சேவை செய்வது எம் அழைப்பின் இதயத்துடிப்பாக மாறிவிட்டது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

எம் கொன்சாகா சபை இந்த 250-ஆம் ஆண்டு யூபிலியைக் கொண்டாடும் இந்த வேளையில், பல நூற்றாண்டுகளாக எரிந்துவரும் நம்பிக்கையின் தீப்பந்தத்தைத் தொடர்ந்து சுமக்க அழைக்கப்படுகிறோம் என்று ஆழமாக உணர்கிறோம். இந்த மகத்தான கதைப்பாகத்தின் சிறு பங்காக இருப்பதில் எமக்குப் பேரானந்தம். கடவுளின் கையால் எழுதப்பட்ட இந்த வரலாற்றில் எம் சிறு பங்களிப்பு. அவர்களின் பாரம்பரியம் எம் சுதந்திரம்; அவர்களின் தூய்மை  எம் ஊக்கம்; அவர்களின் பணியே எம் அழைப்பு!

இந்த யூபிலி ஆண்டில் நமது சபையின் சகோதரிகள் காட்டிய அதே திருப்பணித் தாகத்தை ஒவ்வோர் இதயத்திலும் மீண்டும் ஏற்றிடட்டும். நாமும், புதிய தலைமுறை சகோதரிகளும், புனித அலோசியஸ் கொன்சாகாவின் தூய்மையான வாழ்வையும் சபை நிறுவுநர் மிக்கேல் அன்சால்தோவின் கனவைத் தூய்மையுடனும் இரக்கத்துடனும் தைரியத்துடனும் வாழ்வாக்குவோம்.

ஆண்டவரே, உமது அன்பின் தாழ்மையான கருவியாக எம்மை மாற்ற அருள்தாரும்.