news-details
ஆன்மிகம்
சிற்பமாகச் செதுக்கப்பட்டேன்! (பேராளுமைகள் பேசும் பகுதி) - இந்த வார ஆளுமை – 4

ஒரு நபர், ஒரு நிகழ்வு, ஒரு வார்த்தை

தமிழ்க் கத்தோலிக்க உலகிற்கு ஒரு தொலைக்காட்சி வேண்டும் என்பது ஒரு நீண்ட காலக் கனவு. பல கிறித்தவ சபைகளின் போதகர்கள் தனிப்பட்ட விதத்தில் தொலைக்காட்சி நடத்தும்போது, ‘நம்முடைய கத்தோலிக்கத் திரு அவை எண்ணிலடங்கா நிறுவனங்களையும் ஆள் பலத்தையும் பணபலத்தையும் வைத்துக்கொண்டு, ஏன் இன்னும் இந்த ஊடகத் தளத்தை உருவாக்கவில்லை?’ என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட காலகட்டத்தில், பல கள ஆய்வுகளின் அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சியில் நடந்த தமிழ்நாடு ஆயர் பேரவையின் கூட்டத்தில், ‘நாம் ஒரு தொலைக்காட்சியை நடத்தலாம்என்று ஆயர்களிடத்தில் ஒரு திட்டக் கோரிக்கையை வைத்தேன்.

அப்போது ஆயர்கள் கொடுத்த அறிவுறுத்தலின்படி மீண்டும் மக்கள் மத்தியில் ஒரு கள ஆய்வு செய்யப்பட்டது. அதில் மூன்று முக்கியக் கேள்விகளின் அடிப்படையில் இந்தக் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஒரு கத்தோலிக்கத் தொலைக்காட்சி நமக்குத் தேவையா? அவ்வாறு தேவை எனில் எப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கின்றீர்கள்? கத்தோலிக்கத் தொலைக்காட்சி நமக்குத் தேவை எனில், அதை நாம் நடத்த நீங்கள் பொருளாதார ரீதியில் உதவ முன் வருவீர்களா?’ என்ற மூன்று அடிப்படை வினாக்களுக்கு மக்களின் விடைகளைப் பெற்று அதை சென்னை இலொயோலா கல்லூரியுடன் இணைந்து பகுப்பாய்வு செய்து 2012 ஜனவரி 27 அன்று திருச்சி மணிகண்டத்தில் நடைபெற்ற ஆயர் மன்றத்தில் படைத்து, அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களிலும் பங்குத்தளங்களிலும் பரப்புரை செய்து, ஏறக்குறைய முப்பதாயிரம் பங்குதாரர்களை உள்ளடக்கிய ஒரு நிறுவனத்தை உருவாக்கி, 5.5 கோடி பணத்தை மத்திய அரசிடம் பாதுகாப்புத் தொகையாக (Security deposit) உருவாக்கி, தொலைக்காட்சி தொடங்கலாம் என்று ஆயர்களின் இறுதி ஒப்புதலுக்கான 2013-ஜூலை மாதம் மதுரையில் நடந்த ஆயர்கள் மாமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது இதை மீண்டும் ஓர் ஆழமான பரிசீலனை செய்ய வேண்டும் என்று அதே மாதம் 17-ஆம் தேதி சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தில் ஆயர் மன்றத்தின் சில முக்கிய ஆயர்கள், கத்தோலிக்கத் திரு அவையில் ஊடகத்துறையிலும்  தணிக்கைத்துறையிலும் (auditing) சில முக்கிய வல்லுநர்களை அழைத்து மீண்டும் பரிசீலனை செய்தபோதுதான் அந்த மறக்க முடியாத நிகழ்வு நடந்தது.

மாதா தொலைக்காட்சியை உங்களால் அரசின் அங்கீகாரத்தோடு அதன் உரிமம் பெற்றுத் (License) தொடங்க முடியும்; அது பெரிய காரியம் இல்லை; ஆனால், இந்தத் தொலைக்காட்சியை எவ்வாறு மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள்? அதை கேபிள் மற்றும் டிஷ் தளங்கள் வழியாகக் கொண்டு செல்ல என்ன திட்டம் வைத்திருக்கின்றீர்கள்? அதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? மாதந்தோறும் ரூ.35 இலட்சம் செலவு பணத்திற்கு என்ன செய்யப் போகின்றீர்கள்? மேலும், முப்பதாயிரம் பேரிடம் பங்குகளைப் பெற்றுள்ளீர்கள்; இதை எப்படிப் பங்கு ஒதுக்கீடு (share allotment) செய்யப் போகின்றீர்கள்?” என்று கேட்டனர்.

அந்தப் பெரியவர்களின் நம்பிக்கையைப் பெறும் அளவிற்கு என்னால் உடனே பதில்கூற இயலவில்லை. எனவே, “மாதா தொலைக்காட்சி ஆரம்பித்துப் பணத்தை இழப்பதற்குப் பதிலாக, மக்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். நம்மால் மாதா தொலைக்காட்சியைத் தொடங்க முடியும்; ஆனால், தொடர்ந்து மாதம் ரூ.35 இலட்சம் செலவு செய்து அதை நடத்த வழியில்லை. எனவே, இதை இப்போதே நிறுத்தி விடுவோம்என்று ஒரு முடிவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது. அன்று கூடி வந்த பெரியவர்களின் கேள்விகளுக்கு என்னால் அவர்களின் நம்பிக்கையைப் பெறும் அளவிற்குப் பதில் கூற முடியவில்லை. ஆனால், இது கடவுளின் திருவுளம் என்றால் அது நடக்கும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது.

அன்று முதல் பல இரவுகள் நான் உறங்கவில்லை. கடவுளிடம் கண்ணீரோடுஏன் இப்படிச் செய்தீர்கள்? ஏன் இந்த மக்கள் இந்தத் திட்டத்தை நம்பிப் பணம் கொடுத்தார்கள்?’ என்று ஒவ்வொரு நாளும் கண்ணீரோடு முறையிட்ட நாள்களுக்குக் கணக்கில்லை. என் மனவேதனையின் உச்சமாக எனக்கு Facial Paralysis ஏற்பட்டு பல வாரங்கள் சரிவரப் பேச முடியவில்லை. பேசினால் என் வாய் ஒரு பக்கமாகக் கோணிவிடும். வேதனையின் உச்சத்தில் இருந்தேன்.

ஏறக்குறைய ஓரிரு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் ஆயர் அந்தோணி டிவோட்டா என்னை அலைப்பேசியில் தொடர்பு கொண்டார். ‘Tomorrow will you be in chennai?’ என்று கேட்டார். “நான் எங்கே போவேன் ஆண்டவரே? இங்கேதான் இருக்கிறேன்என்றேன்.

மறுநாள் அதிகாலையிலேயே மலைக்கோட்டை இரயிலில் வந்தார். காலை ஒன்பது மணி இருக்கும். என் அலுவலகத்தில் அமர்ந்து, “David, I will take the responsibility to talk to our bishops and I will give you one more month time. Can you complete the entire process of the company matters and apply to the Central Ministry Information and broadcasting affairs for the Television License?என்று படபடவென்று அவருக்கே உரிய பாணியில் பேசினார்.

நான் அவரிடம், “இது போதும் ஆண்டவரே, உடனே அனைத்துப் பணிகளையும் தொடங்குகிறேன். 20 நாள்களுக்குள் அனைத்தையும் முடித்துக்காட்டுகிறேன். காரணம், ஏற்கெனவே அனைத்துக் கோப்புகளையும் தயார் நிலையில்தான் வைத்திருக்கிறேன். அதனை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டியதுதான் பாக்கிஎன்றேன்.

அன்று ஆயர் அந்தோணி டிவோட்டா என்ற ஒரு நபர் இப்படிப்பட்ட ஆதரவும் ஊக்கமும் கொடுத்து, ‘இதை நாங்கள் கட்டாயம் செய்வோம்என்று எங்களை நம்பவில்லை என்றால், இன்று மாதா தொலைக்காட்சி இல்லை. ஆயர் அந்தோணி டிவோட்டா வழியாகக் கடவுளின் செயல், தமிழ்நாடு கத்தோலிக்க மக்களின் நீண்ட காலக் கனவு நிறைவேறியது என்றால் அது மிகையல்ல.

2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி காலை 5 மணியளவில் பல்வேறு தடைகள், அவமானங்கள், சோதனைகளைக் கடந்து மாதா தொலைக்காட்சியின் ஒலி-ஒளி அதிர்வுகள்Insat 17என்ற அமெரிக்கச் செயற்கைக்கோள் வழியாக உலகமெங்கும் தமிழர்களின் இல்லங்களைச் சென்றடைந்தபோது என் உள்ளத்தில், என் ஆன்மாவில் ஓங்கி ஒலித்த இறைவார்த்தை: ‘இது கடவுளால் நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு வியப்பாயிற்று.’

இன்று மாதா தொலைக்காட்சியும், அதன் பல்வேறு சமூக வலைதளங்கள், பல்வேறு முன்னெடுப்புகள்... மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் புதிதாகக் கத்தோலிக்க இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளSynergising Youth for Change’ (SYNC) என்ற அமைப்பும், AI தொழில்நுட்பத்தில் தமிழில் புதிய மொழிபெயர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள திருவிவிலியத்தில்Madha Chatஎன்ற AI தளம்... இவையனைத்தும் கடவுளின் செயல் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

நம் வாழ்வுபத்திரிகையின் தலைமை ஆசிரியர் அருள்முனைவர் இராஜசேகரன் அவர்கள் என்னிடம் என் பணி வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த நிகழ்வு, நபர், வார்த்தை இதைப்பற்றி என் அனுபவத்தை எழுதும்படி கேட்டார். நிச்சயமாக! என் வாழ்வில் என்னால் மறக்க முடியாத, கடவுள் என் கூடவே இருந்து என்னை வழிநடத்துகிறார் என்று உறுதிப்படுத்திய, எனக்குத் திடம் கொடுத்த, என்னைச் சரியான பாதையில் பயணிக்கச் செய்த, என் குறைகளை, நிறைகளை எனக்கு மிகத் தெளிவாக உணர்த்திய நிகழ்வுகள், நபர்கள் மேலும் நல்ல வார்த்தைகள் பல பல உள்ளன; ஆனால், என் வாழ்வின் உச்சகட்டமாகத் தற்சமயம் நான் கருதும் செயல்பாடுமாதா தொலைக்காட்சிஇதற்காக நான் எடுத்த முன்னெடுப்புகள் மற்றும் செயல் திட்டங்கள் என்னை மிகவும் புடமிட்டுள்ளன. எனவே, இக்காலகட்டத்தில் என்னை மிகவும் பாதித்த கடவுளின் உடனிருப்பையும் பராமரிப்பையும் உணர்த்திய நிகழ்வையும், நபரையும் மேலும் இறை வார்த்தையையும் குறித்துச் சான்று பகர்கிறேன்.

அதேநேரத்தில் மாதா தொலைக்காட்சியின் தொடக்கம், வளர்ச்சி, முன்னேற்றம், எதிர்கால முன்னெடுப்புகளில் தங்களின் பங்களிப்பையும் தியாகச் செயல்களையும் உடனிருப்பையும் கொடுத்த அனைத்து தமிழ்நாட்டுத் திரு அவையின் பேராயர்கள், ஆயர்கள், மறைமாவட்டக் குருக்கள், துறவியர் மற்றும் மக்கள் ஒவ்வொருவரையும் நான் நன்றியோடு நினைக்கிறேன். அவர்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.

இன்றுமாதா தொலைக்காட்சிபல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. ஊடகத்துறையில் ஒவ்வொரு நிலையிலும் வரும் புதிய தளங்களின் ஊடாக அனைத்து வயதினரையும் சென்றடையும் முயற்சிகளில் சிறந்த வெற்றி கண்டுள்ளது. கடவுள் எனக்கு தமிழ்நாடு ஆயர்கள் வழியாகக் கொடுத்த இம்மாபெரும் பணிக்காக நன்றியோடு துதி பாடுகிறேன். இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி! மரியே வாழ்க!