புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டமானது, FIHM, FBS மற்றும் FSAG ஆகிய மூன்று முக்கியச் சபைகளின் பிறப்பிடமாக விளங்கும் மகத்தான பெருமையையும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.
இன்று
250 ஆண்டு நன்றியுணர்வு யூபிலியைக் கொண்டாடும் FSAG சகோதரிகளுடன்
இணைந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துவதில் நாம் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
கொன்சாகா
இல்லத்தின் 250 ஆண்டு யூபிலி விழாக் கொண்டாட்டம், அநேகர் மனத்தில் பல கேள்விகளை எழுப்பியிருக்கலாம்.
‘250 ஆண்டுகளா?’ என ஆச்சரியத்தையும் உருவாக்கி இருக்கலாம்.
‘250 ஆண்டுகள் என்றால் என்ன?’ என்று சிலர் நினைக்கலாம். இவற்றைக் குறித்து ஐயமோ குழப்பமோ நமக்குத் தேவையில்லை. கொன்சாகா இல்லம் நிறுவப்பட்ட 250-வது ஆண்டு நிறைவைத்தான் கொண்டாடுகிறோம்.
இருப்பினும்,
நான் என்னை வரலாற்றுடன் மட்டும் நிறுத்திக்கொள்ள விரும்பில்லை. வரலாறு அனைவருக்கும்
தெரியும். இந்தப் புனிதமான தருணத்தில், நான்
இத்தாலியைச் சேர்ந்த இயேசு சபைக் குருவாகிய இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ அவர்களைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஆசிக்கிறேன்.
1773-ஆம்
ஆண்டு, இயேசு சபையினரின் பணிகள் திரு அவையால் நிறுத்தப்பட்டன. ஆனால், தந்தை மைக்கேல் அன்சால்தோவின் உள்ளுயிர் (spirit) ஒருபோதும் ஒடுக்கப்படவில்லை, அழிக்கப்படவில்லை. பெரும்பாலான இயேசு சபை உறுப்பினர்கள் வெளியேற வேண்டியநிலை ஏற்பட்டது. அதனால் 1776-ஆம் ஆண்டில் இயேசு சபையினரால் தொடங்கிய கர்நாடக மறைப்பணியை MEP குருக்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். ஆனாலும், அன்சால்தோவின் உள்ளுயிர் உயிரோடு இருந்தது. அவரின் இறையன்பு, பிறரன்பு, சேவை மனப்பான்மை, பிறருக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்ற உணர்வு, எல்லாவற்றிற்கும் மேலாக அவருள் வாழ்ந்த ஆண்டவர் இயேசுவின் உள்ளுயிர்! அதாவது ஏழைகள், புறக்கணிக்கப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மீதான அவரது முன்னுரிமை. அவருக்கு இருந்த அந்த உள்ளுயிரை எவராலும் தடுத்து நிறுத்த இயலவில்லை.
அவர்
தனது பணியைச் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஓர் இல்லத்தை அமைத்ததன் வழியாகத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இது மிகவும் சிறப்பானதும், நாம் ஆழமாகப் போற்றவேண்டிய, நினைவுகூரத்தக்கதுமான செயலாகும். அதற்கு அவர், ‘கொன்சாகா இல்லம்’ என்று பெயரிட்டார். இதிலிருந்துதான் பிற்கால உத்வேகம் பிறந்தது.
கொன்சாகா
சபை அதிகாரப்பூர்வமாகத் தாமதமாக நிறுவப்பட்டாலும், தொடக்கத்திலிருந்த உத்வேகமும் உள்ளுயிரும் தொடர்ந்து செயல்படுவதைக் கண்கூடாகக் காண்கிறோம். இவ்வாறுதான் கொன்சாகா சகோதரிகள் சபை தோன்றியது. தொடக்க காலத்தில் தந்தை அன்சால்தோவிடம் இருந்த அந்த உத்வேகமும் உள்ளுயிரும் கொன்சாகா சகோதரிகள் வாழ்வில், பணியில் சற்றும் குறையாமல் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு வருகிறது. இவர்களின் வாழ்விலும் பணியிலும் ஒரு மாபெரும் தொடர்பும் தொடர்ச்சியும் உள்ளன. இதனைத்தான் நான் இன்று வலியுறுத்த விரும்புகிறேன்.
நான்
புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பே கொன்சாகா சகோதரிகளை அறிந்திருந்தேன். முதன்முதலில் அவர்களை நவசாதனா பாஸ்டரல் மையத்தில் சந்தித்தேன். மூன்று சகோதரிகள் திருத்தூதுப்பணி ஆற்றுவதற்காக (pastoral centre) வந்திருந்தனர். அவர்கள்
அங்கே மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர்.
சகோதரிகளின்
பணி சிறப்பாக இருந்ததால், வட இந்திய ஆயர்கள்
(என்னையும் சேர்த்து), “உங்கள் சபையின் பணிகளை எங்கள் மறைமாவட்டங்களிலும் தொடங்க முடியுமா?” எனக் கேட்டுக்கொண்டோம். அதற்கு அவர்கள் மிகவும் பணிவுடன், “எங்களுக்குப் போதுமான கைகள், கால்கள் இல்லை” என்றனர். அதாவது ‘போதுமான சகோதரிகள் இல்லை’ என்று கூறினர்.
அவர்களின்
தாழ்மையும் திறமையும்
எனது மனத்தில் ஆழமாகப் பதிந்தன. இப்போது புதுச்சேரியில் பணியாற்றும்போது, அவர்களை இன்னும் நன்கு அறிந்துகொண்டேன்.
இன்று
இறை ஊழியர் தந்தை மைக்கேல் அன்சால்தோவிடம் இருந்த அதே உள்ளுயிரைக் கொன்சாகா இல்லத்தின் வழியாக, கொன்சாகா சகோதரிகள் உறுதியாகப் பின்பற்றி வருகிறார்கள் என்பதை நான் பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.
அவர்கள்
தங்கள் பணியை ஒரே துறையிலேயே இல்லாமல் மருத்துவம், கல்வி, நற்செய்தி அறிவித்தல் (இயேசுவை அறிவித்தல்), சமூகப் பணி போன்ற பல துறைகளில் விரிவுபடுத்தியுள்ளனர்.
பாரம்பரியப் பணிகளிலும், அதற்கும் அப்பாற்பட்ட மாற்றுப் பணிகளிலும் முழுமனத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபட்டு வருகின்றனர். இது அவர்களிடம் நான் கண்ட எனது சொந்த அனுபவம்.
ஆகவே,
இன்று தந்தை மைக்கேல் அன்சால்தோ அவர்களுக்கு இறைவன் அளித்த அந்த அருள்கொடைகளுக்காகவும், கொன்சாகா இல்லம் தொடங்க அவரைத் தூண்டிய உள்ளுயிருக்காகவும் நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். அதே உள்ளுயிர் இன்று புனித அலோசியஸ் கொன்சாகாவின் பாதுகாப்பின்கீழ் இயங்கும் FSAG சகோதரிகளின்
வாழ்வில் தொடர விரும்புகிறேன்.
இந்நன்னாளில்,
சபைத்தலைவி அருள்சகோதரி ஞானமணி அவர்களையும், அவர்தம் ஆலோசனைக் குழுவினரையும், அனைத்து மாநிலத் தலைவிகளையும், ஒவ்வொரு கொன்சாகா அருள்சகோதரிகளை யும், பயிற்சி பெறுவோர் உள்பட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளையும் ஆசிர்வாதங்களையும் உரித்தாக்குகிறேன்.
250 ஆண்டுகள் நிறைவு
விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், நான் உங்களுக்கு ஓர் அறைகூவலை விடுக்க விரும்புகிறேன். தந்தை மைக்கேல் அன்சால்தோவிடம் இருந்த அந்த உள்ளுயிரையும், சபை தொடங்கிய போது இருந்த அந்தத் தொடக்ககால உள்ளுயிரையும் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பாருங்கள். அதை உங்கள் வாழ்விலும் பணியிலும் முன்னெடுத்துச் சென்று அதனை இரு மடங்காகப் பெருக்குங்கள்.
இறைவாக்கினர்
எலிசா எவ்வாறு எலியாவின் உள்ளுயிரை இரு மடங்காகக் கேட்டாரோ அதே போல, கொன்சாகா சகோதரிகள் ஒவ்வொருவரும் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோவிடம்
இருந்த உள்ளுயிரை இரு மடங்காகக் கேட்க வேண்டும். அதே உள்ளுயிருடன் சமுதாயத்தால் மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும்,
சாதி மற்றும் பல தடைகளால் பிளவுண்டு
கிடக்கும் மக்களுக்கும் நீங்கள் தொடந்து பணி செய்ய வேண்டும். அதுவே என் உளங்கனிந்த வேண்டுகோளும், என் இறைவேண்டலும் ஆகும். நீங்கள் நம் ஆண்டவரும் தலைவருமான இயேசு கிறிஸ்துவின் ஆவியிலும் வலிமையிலும் வளர்வீர்களாக! கடவுள்
உங்களை ஆசிர்வதிப்பாராக! இதயங்கனிந்த வாழ்த்துகள்!