news-details
தலையங்கம்
பீகாரில் ஆட்சியமைத்த ‘S.I.R.’ தமிழ்நாட்டை நெருங்கும் ஆபத்து!

வாக்குரிமை - அந்த நாட்டுக் குடிமகனின் பிறப்புரிமை. ஒரு நாட்டின் அரசமைப்பில் தேர்தல் முறைகள் மாறலாம்; வாக்குரிமை நிலைகள் மாறுபடலாம்; ஆனால், வாக்குரிமை என்பது எல்லாச் சூழல்களிலும் பிறப்புரிமையோடு தொடர்பு கொண்டது.

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள், தங்களை ஆள்வதற்கும் வழிநடத்துவதற்கும் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசமைப்பு மக்களாட்சித் தத்துவம் கொண்டது. நாட்டை ஆள்வதற்குரிய எல்லா அரசியல் அதிகாரங்களும் நாட்டின் குடிமக்களுக்கு உண்டு என்பதே மக்களாட்சியின் தத்துவம். குடிமக்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை வெளிப்படுத்தும் கருவியே வாக்குரிமை. அதன் அடிப்படையிலேயே தங்கள் உரிமையைப் பயன்படுத்தி, தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, தங்கள் சார்பில் அரசை வழிநடத்திவர அவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றனர்.

ஆகவே, மக்களாட்சி நடைபெறும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு குடிமகனி(ளி)ன் வாக்குரிமை என்பது  இன்றியமையாத ஒன்றாகும். இந்திய அரசமைப்புச் சட்டம், அரசமைப்பின் படிநிலைகளில் ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் என எல்லாத் தளங்களுக்கும் பிரதிநிதிகளை அனுப்பிவைக்க வாக்குரிமையை அதிகாரமாகத் தன் குடிமக்களுக்கு அளித்திருக்கிறது. தமிழ் மரபு வாக்களிக்கும் முறையைப் பண்டைக்காலம் தொட்டே பயன்பாட்டில் கொண்டிருந்தது என்பது தமிழனின் அறநெறி வாழ்வின் மதிப்பீட்டை உலகிற்கு எடுத்துக்கூறும் வரலாறு.  ‘குடவோலைமுறை என்னும் இரகசிய வாக்கெடுப்பு முறையால் தங்கள் பிரதிநிதிகளை நிர்வாக அமைப்புகளின் உறுப்பினர்களாக நம் முன்னோர் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

அவ்வாறு, வாக்கு உரிமையும் வாக்களிக்கும் வழிமுறையும் தமிழர்தம் உணர்வில் இரண்டறக் கலந்தவை. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இந்த வாக்குரிமையின் மாண்பினை உணர்ந்து இதனைக் குடிமக்களின் சட்டப்பூர்வமான அரசியல் உரிமையாக வடிவமைத்திருக்கிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இந்தியக் குடிமக்களும் இந்திய அரசமைப்பின்கீழ் வாக்களிக்க உரிமை உண்டு எனக் குறிப்பிடுகிறது இந்திய அரசமைப்பின் பிரிவு 326. இத்தகைய உரிமை திட்டமிட்டுப் பறிக்கப்படுவதையும் முறையான காரணமின்றிப் பறிபோவதையும் என்னவென்பது?

நமக்கு வாய்த்த ஒன்றிய அரசின் பிரதமர் மோடி தலைமையிலான பா... அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே  நடுவண் புலனாய்வுச் செயலகம் (சி.பி..), வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் ஆளுங்கட்சி ஆதிக்கம் செலுத்தி எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்து, சனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதை ஊரும் உலகும் நன்கறியும். தேர்தல் வெற்றிகளைப் பறிப்பதற்காகப் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தும் ஒன்றிய பா... அரசு, அண்மைக்காலங்களில் S.I.R. (Special Intensive Revision Electoral Rolls) என்னும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்னும் புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

இதன் அடிப்படையில் அரியானாவில் வெற்றி கண்டவர்கள், பீகாரிலும் அதைத் தொடர்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவசர அவசரமாக அங்கும் அது அரங்கேற்றப்பட்டது. ஏறக்குறைய 66 இலட்சம் மக்களுடைய பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விசித்திரமான தேர்தல் அரங்கேறியுள்ளது. நாடே உற்றுநோக்கிய பீகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார் - பா... தேசிய சனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது என்கிறார்கள். ஆனால், உண்மையில் ஆட்சியைப் பிடித்தது S.I.R. மட்டுமே!

இங்குக் கூட்டணிக் கட்சிகள் மாறுபடுகின்றன; பா...வும், தேர்தல் ஆணையமும் இணைந்து கைகோர்த்துச் சனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதன் பலனால் கிடைத்த வெற்றி இது. அண்மைக்காலங்களில் தேர்தல் ஆணையம் பா...வின் கைப்பாவையாகவே மாறிப்போனது. இந்திய அரசமைப்பின் செயலாக்கத்தில் தலைகுனிவு ஏற்பட்ட தருணங்கள் இவை. “I am NOT the Chief election commissioner of the Govt. of India; but I’m Chief Election Commissioner of Indiaஎன்று கூறினார் டி.என். சேஷன். ஆனால், இன்று தனித்தியங்க வேண்டிய அவ்வமைப்பு  ஆள்வோரின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றுபோல மாறிப்போனது.  

இத்தகைய வெற்றிக்குப் பின் ஒளிந்திருக்கும் S.I.R.-இன் நடைமுறைச் செயல்பாடுகளைவாக்குத்திருட்டுஎன்கிறது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். திரைமறைவில் தீட்டப்படும் இந்தச் சூழ்ச்சியில், பல இலட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் முறையற்ற விதத்தில் நீக்கப்படுவதாகவும் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

இந்தியா முழுவதும் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் என, 12 பகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத்  தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்து, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தீவிரமாக இப்போது திருத்தம்நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போலி வாக்காளர்களின் பெயர்களையும், இறந்தவர்களின் பெயர்களையும் நீக்குவதற்காகவே இத்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருந்தாலும், இது மேற்கொள்ளப்படுகின்ற விதமும், நடைமுறைப்படுத்தப்படுகின்ற முறையும், வழங்கப்பட்டுள்ள குறுகிய கால அளவும், கட்டாயப்படுத்தப்படும் கூடுதல் பதிவுகளும் குறிப்பாக, 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் இணைந்தோர் தங்களின் பிறந்த தேதி, வாழ்விடத்திற்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும் எனக் கோரப்படும் பல சான்றிதழ்களும் இச்செயல்பாட்டின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம், நகரமயமாக்கல், புலம்பெயர்தல், தகுதியற்றவர்கள், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல்இறந்தவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படாதது, வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வாக்குரிமை வைத்திருப்பது போன்ற காரணங்களால் இது மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஏழரைக் கோடி மக்கள் இருக்கும் சூழலில் வழங்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட காலஅளவு, தமிழ்நாட்டை இன்னொரு பீகாராக மாற்றும் சதியோ என நம்மை ஐயப்பட வைக்கிறது.

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் அண்மையில் வரவிருக்கும் சூழலில், ஒன்றிய அரசு இவ்வளவு வேகமாக இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? புதிதாக வெளிவரும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறாவிட்டால், மீண்டும் முறையிட்டு வாக்குரிமை பெற போதிய கால அவகாசமும் இல்லை. உயிரோடு இருப்பவர்களுக்குக்கூட பல பின்னணி காரணங்களுக்காக வாக்கு மறுக்கப்படும் அபாயம் இருக்கிறது என்றும், இத்தகைய குறுகிய காலக் குளறுபடியால் ஒரு கோடி பேர் வாக்குரிமையை இழக்க நேரிடும் எனவும், அப்படி இழப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க விரும்பாதவர்களாக இருக்கக்கூடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், தமிழ்நாட்டில் S.I.R. பணிகள் உரிய திட்டமிடலின்றி, பயிற்சிகள் அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசரகதியில் - போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக, தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.பி. முருகையன் தெரிவித்திருக்கிறார் .

இந்தப் படிவம் எளிய நடையில் இல்லாதபோது, வாக்காளர்கள் அதைப் பிழையில்லாமல் பூர்த்தி செய்வதும், இப்பணியை மேற்கொள்ளக்கூடிய சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், நகராட்சி- மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு இன்னும் கேள்விக்குள்ளாகிறது.

இது முறையாகச் செய்யப்பட வேண்டிய வரலாற்றுப் பதிவு. ஆயினும்அவசர காலம், போதிய பயிற்சி இல்லாத பணியாளர்கள், முறையான - தெளிவு இல்லாத படிவங்கள், கட்டாயப்படுத்தப்படும் தேவையற்ற ஆதாரங்கள், கூடுதல் சான்றிதழ்கள் எனப் பல காரணங்களால் இது செய்யத்தக்க செயலாக எவரும் கணிக்கவில்லை. இத்தகைய சூழலில் ஐய்யன் வள்ளுவனின் அறம் கூறும் அடிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன...

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும் (குறள் 466).

அதாவது, ஒரு செயலைச் செய்வதற்கு முன் நன்கு சிந்தித்து, செய்யத்தகுந்த செயல்களைச் செய்யவேண்டும். செய்யத்தகுந்த காரியங்களைச் செய்யாமல் விடுவதும், செய்யத்தகாத காரியங்களைச் செய்வதும் அழிவுக்கு வழிவகுக்கும் எனக் கூறும் வள்ளுவர், சரியான நேரத்தில், சரியான காரியங்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

அவசியமான செயல் - ஆனால், அதிவேகமாக மேற்கொள்ளப்படுவதால், இன்று பீகாரில் S.I.R.-தான் அரியணை ஏறியது. இதன் நீட்சியாக அதே வழிமுறையில் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் ஆட்சிப்பீடம் ஏறிவிடலாம் எனப் பா... பகல் கனவு காண்கிறது. ஆனால், அரியானாவும், பீகாரும் கற்றுக்கொடுத்த பாடத்தால் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட தமிழர்கள் உறுதியாக பா... விற்குப் பாடம் கற்பிப்பார்கள்.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்