news-details
சிறப்புக்கட்டுரை
உயர்ந்த மதிப்பெண் எது?

யார் நல்ல மாணவர்?

நண்பன் ஒருவனிடமிருந்து அலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அவனின் குரலில் சோர்வு தென்பட்டது. ‘என்ன?’ எனக் கேட்டேன். எனது  அந்த வார்த்தைக்காகக் காத்திருந்ததுபோல், ‘மிகவும் குழப்பமாக இருக்கு; நான் உணவு உண்ணும் நேரத்தைத் தவிர, வேறு எந்த நேரத்தையும் வீணாக்குவதில்லை; முழுமையாகக் கல்விக்கு மட்டுமே செலவழிக்கிறேன்; இருந்தாலும், நினைத்த மதிப்பெண் கிடைப்பதில்லை; இந்தக் கணிதப் பாடம் எனக்குக் குதிரைக் கொம்பாகவே இருக்குஎன அங்கலாய்த்துக்கொண்டான். அந்த நண்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். சற்றுச் சிந்தித்த நான் அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்: “அதிக மதிப்பெண் வாங்க விரும்புவதன் நோக்கம் என்ன?”

அவன் கணிதத்தைத் தவிர மற்ற பாடங்களிலெல்லாம் 80% மதிப்பெண்கள் பெற்றிருந்தான். சற்று அமைதியாய்ச் சிந்தித்த நண்பன்,  “ஒரு மாணவனாய் நான் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் அல்லவா!” என்றான்.

நீ கூறுவது சரிதான். ஒருவேளை நீ குறைந்த மதிப்பெண் எடுத்தால் என்னவாகும்?” என்றேன்.

யோசித்துப் பதில் சொன்னான், “நான் ஒரு நல்ல மாணவன் அல்லன்என்று. நான் இந்த ஒற்றை வாக்கியத்திற்காகவே காத்திருந்தேன். எங்கள் உரையாடல் இன்னும் தொடர்ந்தது...

நீ நல்ல மாணவன் என்பதைத் தீர்மானிப்பது உன் மதிப்பெண் மட்டுமா?” என்றேன்.

இல்லைஎனத் திடமாகக் கூறினான்.

பின்னர் எது நீ ஒரு நல்ல மாணவன் என்பதைத் தீர்மானிக்கின்றது?” எனக் கேட்டேன்.

எங்கள் உரையாடல் தொடர்ந்தது. இறுதியாக நாங்கள் பேசி முடிக்கும்போது, அவன் தன்னுள் இந்தக் கேள்விகளோடு விடைபெற்றான்: “எனது தனி மனித அடையாளம் (identity) எது? என் அடையாளத்தைத் தீர்மானிப்பது எது?”

80 சதவிகிதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை அவன் எடுத்திருந்தாலும், இன்னும் அதிக மதிப்பெண் பெறுவதே அவனது நோக்கமாக இருந்தது. உயர்ந்த மதிப்பெண் பெறும்போதுதான் தான் நல்ல மாணவன் எனக் கருதினான். அவனது புரிதலில், உயர்ந்த மதிப்பெண் பெறுவது மட்டுமே ஒரு நல்ல மாணவனுக்கான அடையாளம், அது கிடைக்காதபோது அவனது அடையாளம் சிதைக்கப்படுகிறது. தன் அடையாளத்தை மீண்டும் பெற ஓய்வில்லாமல் உழைக்கத் தொடங்குகின்றான். அவன் உணவிற்கான நேரத்தைக் கூட வீணடிக்கும் நேரமாகவே பார்த்தான்.

ஒருவேளை, அவன் இழந்த மதிப்பெண்களை மீண்டும் பெற்றால், ‘நான் நல்ல மாணவன்என்ற அடையாளத்தை மீண்டும் பெறுகின்றான். அவ்வாறு அந்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால், அந்த மதிப்பெண்ணைப் பெறும் நோக்கோடு ஓடிக்கொண்டே இருப்பான்.

என் நண்பனது தன் அடையாளத்தை நோக்கிய பயணத்தை நமது பயணத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பலர், ‘வாழ்க்கை முழுசும் ஓடிகிட்டே இருக்கிற மாதிரியே இருக்கு!’ எனச் சலித்துக்கொள்வதைக் கேள்விப்பட்டிருப்போம். அப்படி அங்கலாய்த்துக் கொண்டிருப்போர் பெரும்பாலும் என் நண்பனைப் போலக் குறிப்பிட்ட ஒன்றைத் தங்கள் அடையாளமாக எண்ணி, அதை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஓட்டம் எதை நோக்கியது? அவர்களுக்கும் இதற்கான பதில் பல நேரங்களில் தெரிவதில்லை. பின் ஒரு மனிதனின் அடையாளம் எது? அதை எவ்வாறு கண்டு கொள்வது?

எது அடையாளமல்ல?

என் நண்பனின் எடுத்துக்காட்டிலிருந்து, தனது உயர்ந்த மதிப்பெண் அவனுக்கு அடையாளமாக இருந்தது. உண்மையில் மதிப்பெண் என்பது, ஒருவருடைய கல்வித்திறனை அளவிடும் அளவுதான் அல்லவா! பின்னர், ஓர் அளவீட்டை அடையாளமாகக் கொண்டால், அதன் அளவு மாறும்போது, என் அடையாளமும் நிலையாய் இருக்க வாய்ப்பு குறைவுதான். என் நண்பன் கல்வியின் அளவை அடையாளமாகக் கொண்டிருந்ததுபோல், நம்மில் பலரும் நிலையற்றவற்றை அடையாளமாகக் கொண்டிருக்கின்றோம். சிலருக்கு அது அவர் வகிக்கும் பதவியாக இருக்கலாம்; தனது கல்வித் தகுதியாக இருக்கலாம்; ஒருவருடைய பொருளாதார நிலையாக இருக்கலாம்; சமூக அங்கீகாரம், செய்யும் தொழில் மற்றும் பலவாக இருக்கலாம். நிச்சயம் இவையும் அடையாளங்கள்தாம். ஆனால், மாறக்கூடியவை.

மேற்கூறிய அடையாளங்கள் யாவும் மாறக்கூடியவை. சில காலங்கள் மட்டுமே நமக்கான அடையாளங்கள். இவை மாறக்கூடிய ஒன்று. நமது நிலையான அடையாளமாகத் திகழும்போது, நாமும் நம் வாழ்நாள் எல்லாம் அதை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கின்றோம். நம் வாழ்வில் நிச்சயம் ஏதேனும் ஒரு சூழலிலாவது, யாரேனும் ஒருவரைப் பார்த்து வியந்திருப்போம்: ‘எப்படி இவர்களால் மட்டும் இவ்வாறு எல்லாச் சூழலிலும் அமைதியாக இருக்க முடிகிறது? இவர்களின் வாழ்வில் எல்லாமே நேர்மறையாக நடக்கின்றனவா? அல்லது இவர்களின் வாழ்வில் நடப்பதைக் குறித்து இவர்கள் எந்தக் கவலையுமே கொள்வதில்லையா?’ இப்படிச் சிலர் இருப்பதற்கு மிக முக்கியக் காரணமாக நான் கருதுவது, அவர்களின் அடையாளமாக அவர்கள் கருதுபவை.

எது நிலையான அடையாளம்?

உளவியல் ரீதியாக, தனிமனித அடையாளத்தைப் புரிந்துகொள்ள முயலும்போது, வெவ்வேறு உளவியலாளர்கள், வெவ்வேறு சூழலுக்கேற்ப பல்வேறு புரிதல்களை முன்வைக்கிறார்கள். அவற்றிலிருந்து இரண்டு நமது சிந்தனைக்கு உதவும் என எண்ணுகின்றேன். ஆன்ரி டஃச்ஃபெல் எனும் உளவியலாளர், “மனிதனுடைய அடையாளம் பல நேரங்களில் ஒருவர் சார்ந்திருக்கும் சமூகத்தைச் சார்ந்ததுஎன்கிறார். சமூகம் என்பதை இனக்குழு, நாடு, மதம், பாலினம் எனப் பரந்த பார்வையோடு அவர் எடுத்துக்கொள்கிறார். ஒருவர் இதுபோன்ற எத்தகைய சமூகக் குழுவைச் சார்ந்திருக்கின்றாரோ, அந்தக் குழுவின் தத்துவயியலை (Philosophy) அல்லது புரிதலை உள்வாங்கி தன்னுடைய சுய அடையாளத்தைத் தீர்மானிக்கின்றார்.

உளவியலாளர் கார்ல் ரோசர், மனிதத்தன்மையின் (Self) இரு வேறு கூறுகளைப் பற்றிப் பேசுகிறார். இலட்சியத்தன்மை (Ideal Self) மற்றும் உண்மைத்தன்மை (Real Self). இலட்சியத்தன்மை என்பது, ஒருவன் எவ்வாறு வாழ விரும்புகிறான் என்பதையும், உண்மைத்தன்மை என்பது, ஒருவன் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பதையும் குறிக்கும். இந்த இரு தன்மைகளும் ஒன்றித்துப் போகும்போது, ஒரு மனிதன் புத்தன்போல் அமைதியாகிறான். இரு தன்மைகளுக்கும் இடையே இடைவெளி ஏற்படும்போது சலனமடைகிறான்.

ஆன்ரி டஃச்ஃபெலின் புரிதலின்படி இந்தச் சமூகத்தால் உருவாக்கப்பட்ட, ‘அதிக மதிப்பெண் எடுப்பவர்தான் நல்ல மாணவன்(I’m good, when I score high)  எனும் புரிதலை உள்வாங்கிய என் நண்பன், அச்சமூகத்தின் புரிதலைத் தனது அடையாளமாக மாற்றிக்கொள்கிறான். கார்ல் ரோசரின் புரிதலின்படி, ‘உயரிய மதிப்பெண் எடுத்தால் நான் நல்ல மாணவன்என்பது அவனது இலட்சியத்தன்மை; ஆனால், உண்மை வாழ்வில் அது சாத்தியப்படவில்லை. இங்கு இலட்சியத்தன்மைக்கும் உண்மைத்தன்மைக்கும் இடைவெளி ஏற்படுகின்றது. இந்த இடைவெளி அவனுள் ஒரு மோசமான சலனத்தை ஏற்படுத்துகின்றது.

என் நண்பனின் வாழ்வை இந்த இரு உளவியல் புரிதலோடு பார்க்கும்போது, அவனுக்குள் ஏற்பட்ட உள்ளச் சலனத்தின் காரணம் நமக்குப் புரியும் என நம்புகின்றேன். நாம் எப்படி? நம்முள்ளும் இது போன்ற உள்ளச் சலனங்கள் எழத்தானே செய்கின்றன! பல நேரங்களில் இந்தச் சலனங்கள் உறவுச் சிக்கல்களுக்கும் மனக்குழப்பங்களுக்கும் நிம்மதியற்ற சூழலுக்கும் நம்மை இட்டுச் செல்லத்தான் செய்கின்றன. இந்தச் சிரமமான சூழலுக்குத் தீர்வு என்ன?

மெய்யியலாளர் சாக்ரடீசு மனிதனின் கோபத்தைப் பற்றிப் பேசும்போது கூறுவார், ‘எது உண் மையோ அதைக் குறித்துக் கோபம் கொள்ளமாட்டோம்!’ ஒருவர் நம்மைப் பார்த்து, ‘நீ ஓர் ஆரஞ்சு பழம்எனக் கூறும்போது, நமக்குக் கோபம் வருவதில்லை. காரணம், நான் ஒரு பழம் இல்லை, மனிதன் என நமது அடையாளத்தில் நமக்கு இங்குத் தெளிவிருக்கிறது. அதேநேரத்தில் ஒருவர் நம்மிடம், ‘நீ ஒரு முட்டாள்எனக் கூறினால், அடுத்த வினாடியே கூறியவரின் மூக்கு காயமுற்றாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில், ‘முட்டாள்என்பது நம் அடையாளம் இல்லை என்பதில் நமக்குத் தெளிவில்லை.

ஒரு மனிதனின் அடையாளம், மனித வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகள் எப்படி இருக்கலாம், எவையெல்லாம் நிரந்தரமான அடையாளமாக இருக்க முடியாது, உளவியலாளர்களின் புரிதலின் அடிப்படையில் தனிமனித அடையாளத்தை எப்படிப் பார்க்கலாம்... என விவரித்த நான், இறுதிவரை எது சரியான அடையாளம் எனக் கூறவே இல்லை. ‘இதுதான் சரியான அடையாளம்என்று எந்த ஒன்றையும் கை காட்டிவிட முடியாது. ஒவ்வொருவரின் வாழ்வியலைப் பொறுத்து அவரின் அடையாளம் மாற்றம் பெறும். எந்த ஓர் அடையாளம் ஒருவரைச் சலனமின்றி வைக்கின்றதோ, அதுவே அவரது நிலையான அடையாளம் என நம்பலாம்.