உலகளாவிய வரலாற்றில் மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்திய போர்களில் ஒன்று முதல் உலகப்போர் (1914-1918). இப்போரில் 90 இலட்சம் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 50 இலட்சம் குடிமக்கள் போர். பட்டினி, மற்றும் நோய் ஆகியவற்றின் விளைவாக இறந்ததாகவும் கூறப்படுகிறது. இப்போர் நிகழ்ந்த வேளையில், திரு அவையின் தலைவராகப் பணியாற்றியவர் திருத்தந்தை 15-ஆம் பெனடிக்ட். அவர் இந்தப் போரை, “பயனற்றப் படுகொலை” என்றும், “கலாச்சாரம் மிக்க ஐரோப்பாவின் தற்கொலை” என்றும் குறிப்பிட்டார். முதல் உலகப்போர் முடிவுற்று, நான்கு ஆண்டுகள் சென்று, 1922-ஆம் ஆண்டு, திரு அவையின் தலைமைப் பணியை ஏற்ற திருத்தந்தை 11-ஆம் பயஸ் அரசர்கள், மற்றும் அரசுத் தலைவர்களின் அகந்தையும் பேராசையும் முதல் உலகப்போருக்கு முக்கியக் காரணங்களாய் இருந்தன என்பதை உணர்ந்து, இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 - ஆம் நாள், ‘Quas Primas’ என்ற சுற்று மடல் வழியாகக் கிறிஸ்து அரசர் திருநாளை நிறுவினார்.
1969-ஆம்
ஆண்டு திருத்தந்தை 6-ஆம் பால் வெளியிட்ட ‘திருத்தந்தையின் தம் விருப்ப அறிக்கை’ (Motu
Proprio) என்ற மடலின்
வழியாக இந்த விழாவின் பெயரை ‘கிறிஸ்து அனைத்துலகின் அரசர்’ என
மாற்றினார். மேலும், இவ்விழாவை வழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிறு அன்று கொண்டாட பணித்தார்.
‘கிறிஸ்து அனைத்துலகின் அரசர்’ என விழா கொண்டாடுவதற்கான காரணம், கிறிஸ்துவின்
அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும் கண்டு, மக்கள் குறிப்பாக, அரசுத் தலைவர்கள்,
பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே. இவ்விழா அறிவிக்கப்பட்டு, நூற்றாண்டைக் கண்டபோதிலும், உண்மையில் உலகத் தலைவர்கள்
கிறிஸ்து அரசருக்குரிய பண்புநலன்களைக் கொண்டு முன்மாதிரியான வாழ்வு வாழ்ந்துள்ளார்களா?
என்பது கேள்விக்குறியே.
இப்போது
உலகில் எங்கு நோக்கினும் தீவிரவாதமும் பயங்கரவாதமும், போர்களும், பிரிவினைகளும் தாம்.
பதவிக்காகவும், பணத்திற்காகவுமே இங்கே தினம் தினம் போட்டியும் பொறாமையும் ஆட்சிப் பொறுப்பாளரிடம்
நிலவுவதைக் கண்கூடாகக் காண்கின்றோம். உலகத் தலைவர்களிடையே நிலவும் “யார் பெரியவர்” என்ற போட்டியால், உலகெங்கும் அரசியல் நிலையற்ற தன்மையும்,
போர்களும், வன்முறைகளுமே பெருகியுள்ளன. எப்படிப் பதவிக்கு வரலாம், யாரை ஏமாற்றலாம்
பதவிக்கு வரலாம் என்று அரசியல் தலைவர்கள் போடும் தவறான கணக்குகளால் அன்பும் அமைதியும்
உண்மையும் உலகில் காணாமல் போய்விட்டன.
போரினால்
ஆயிரமாயிரம் மக்கள் அமைதியை இழந்து உள்நாட்டிலும் பல்வேறு அந்நிய நாடுகளிலும் புலம்பெயர்ந்தோராகி
வருகின்றனர். இரு உலகப்போர்களைச் சந்தித்த இவ்வுலகம் தற்போது, மூன்றாவது உலகப்போரை
உலகின் பல பகுதிகளில், சிறு, சிறு துண்டுகளாகச் சந்தித்து வருகிறது. இதனையே திருத்தந்தை
பிரான்சிஸ், “அமைதிக்குப் பஞ்சம்” ஏற்பட்டுள்ள காலத்தில் வாழ்ந்துவருகிறோம்
என்று குறிப்பிட்டார். இத்தகைய சூழலில், கிறிஸ்துவை ஓர் அரசராகக் கொண்டாட, இந்த ஞாயிறன்று,
தாய் திரு அவை நம்மை அழைக்கின்றது. இயேசு கிறிஸ்து உண்மையில் அரசர்தானா? அரசர் என்றால் அவர் எப்படிப்பட்ட அரசர்? அனைத்துலகின்
அரசராம் கிறிஸ்துவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பண்புகள் என்ன? என்பது குறித்துச்
சிந்திப்போம்.
புதிய
ஏற்பாட்டில் ‘இயேசுவே அரசர்’ என்ற உணர்வு ஞானிகளிடமும் அரசர்களிடமும்
மக்களிடமும் வெளிப்பட்டன. இயேசுவை, அரசர் என்று முதலில் கூறியவர்கள், கீழ்த்திசை ஞானிகளே.
“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?
‘அவரது விண்மீன் எழக் கண்டோம்’. “அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்று சொல்லி இயேசுவை அரண்மனையில் தேடினர் (மத் 2:2).
இரண்டாவது,
இயேசு அப்பத்தைப் பகிர்ந் தளித்த நிகழ்வில் மக்கள் தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள்
என்பதை உணர்ந்த இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். (யோவா 6:14-15). மூன்றாவது
ஒரு நிகழ்வில், எருசலேமுக்கு பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் “இஸ்ரயேலின் அரசர் போற்றப்
பெறுக!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர் (யோவா 12:12-13).
நான்காவது
ஒரு நிகழ்வில், பிலாத்துவே இயேசுவிடம், “நீர் அரசரா?” என்று கேட்டு அச்சமுற்றான் (யோவா
18:37). மேற்குறிப்பிட்ட நான்கு நிகழ்வுகளிலுமே இயேசு தவறான முறையில் “அரசன்” என்று கருதப்பட்டார். அவர்களில் யாருக்கும் இயேசு சரியான
பதில் கூட சொல்லவில்லை. அவ்வாறெனில் இயேசுவே அரசர் என்று நாம் எவ்வாறு புரிந்துகொள்ள
முடியும்? இயேசுவை மூன்று நிலைகளில் அரசர் என்று புரிந்துகொள்ளலாம்.
1.
படைப்பின் அடிப்படையில், 2. பிறப்பின் அடிப்படையில்,
3. பாடுகளின் அடிப்படையில்.
தொடக்கத்தில்
கடவுள் படைத்த பொழுது (தொநூ 1:1) வாக்கு இருந்தது (யோவா 1:1). “அவ்வாக்கு கடவுளாயும்
இருந்தது” (1:1). இயேசுவே அந்த வாக்கு. அவரே
இறைவனை முழுமையாக வெளிப்படுத்தக்கூடியவர் (1:18). இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும்
எல்லாம் வல்லவரான ஆண்டவரே இயேசு கிறிஸ்து (விப 3:14; திவெ 1:8). கடவுள் கடவுளது அரியணையில்
வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார் (எபி 12:2).
இரண்டாவதாக,
இஸ்ரயேலரின் பன்னிரு குலத்தில் ஒன்றான யூதா குலம்தான் அரச குலம். இந்தக் குலத்தில்
பிறந்தவர்தான் தாவீது. இந்த தாவீதின் குலத்தில் பிறந்தவர் இயேசு கிறிஸ்து (எரே
33:15, திவெ 22:16). இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பில், “அவருடைய ஆட்சிக்கு முடிவே
இராது” (லூக் 1:32-33) என்றே வானதூதர் மரியாவிடம்
கூறினர். எனவே, இயேசு பிறப்பின் அடிப்படையில் அரசர்தான்.
மூன்றாவதாக,
இயேசுவை அரசராகப் பார்க்க முடியாத உரோமைய வீரர்களின் ஏளனக் குரலுக்கு மத்தியில் “இயேசுவே
நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” (லூக் 23:42) என்ற கள்வனின் குரல் இயேசுவை அரசராக ஏற்றுக்கொள்கிறது.
மனிதன் என்று கணிக்க முடியாத அளவு காயப்பட்டு, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் மாட்டப்பட்டிருந்த
அந்த உருவத்தில், ஓர் அரசரைக் கண்டார், அந்தக் குற்றவாளி.
ஆகவே,
இயேசுவின் அரசத் தன்மையை மூன்று கோணங்களில் நாம் சிந்திக்கலாம்.
அவை,
அ) துயருறும் அரசர், ஆ) துயர் துடைக்கும் அரசர், இ) தரணியோர் அனைவருக்குமான அரசர்.
இயேசுவின்
தலைமை என்பது உலகத் தலைமையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. முதலில் அவர் ஒரு துயருறும்
அரசர். சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டபோது, தம் கரங்களை உயர்த்தவில்லை, யாரையும் விரலால்
சுட்டிக்காட்டவில்லை, வார்த்தைகளால் வசைமொழி கூறவில்லை. மாறாக, தமது சிலுவை மரணம் வழியாக,
எல்லா மக்களையும், அவர்களின் மரணம், துயரம், ஏழ்மை, பலவீனங்கள் என அவர்கள் பற்றிய அனைத்தையும்,
அரவணைத்துக்கொள்ள தம் கரங்களைத் திறந்தார். திறந்த கரங்களோடு அவர் தம்மை நம் அரசராகக்
காட்டுகிறார்.
இரண்டாவதாக,
இயேசு துயர்துடைக்கும் அரசர். “மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம்
துன்பங்களைச் சுமந்துகொண்டார்;” (எசா 53:4). ஏழைகளையும் வறியோரையும் வாழ்விழந்தோரையும்
புறந்தள்ளப்பட்டோரையும் இயேசு தேடிச்சென்று அவர்களை அன்பொழுக அரவணைத்துக்கொண்டார்.
“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருவேன்” (மத் 11:28) என்ற இயேசுவின் வார்த்தைகள்
அதற்குச் சான்றாக அமைகின்றன.
மூன்றாவதாக,
இயேசு தரணியோர் அனைவருக்குமான அரசர். அவரது அரசு அனைவருக்குமானது என்பதை உணர்த்தும்படி,
இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து
பந்தியில் அமர்வார்கள் (லூக் 13:29) என்று கூறினார். அதாவது, இயேசுவின் இறையாட்சியில்
எந்த வேற்றுமையும் பிளவுகளும் காணாது, அவரில் நம்பிக்கைகொள்ளும் அனைவருக்கும் அவரது
இறையாட்சியில் இடம் உண்டு.
ஆகவே,
கிறிஸ்து அரசரின் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் தனது ஆடுகளுக்காக இன்னுயிரையே தியாகம்
செய்த பேரரசராம் கிறிஸ்து அரசரைப்போல, நாமும் மனிதநேயம் கொண்டு துயருறும் மானிடர் அனைவருக்கும்
உதவிட முன் வருவோம். அதிகாரபலம், படைபலம், பணபலம் ஆகியவற்றை நம்பி வாழ்வை இழந்துவிடாமல்,
இவ்வுலகை மீட்கும் பயணத்தில் துன்புறும் ஊழியனாகத் திகழ்ந்த கிறிஸ்து அரசரின் வழியில் நாம்
பயணித்துப் பிறருடைய நல்வாழ்வுக்காய் உழைக்கும் நன்மக்களாக வாழ்வோம். நாம் படித்தறிய
வேண்டிய வாழும் புத்தகம் கிறிஸ்து அரசர்!