news-details
தலையங்கம்
கண்ணாடி முன்னிற்கும் பிரிவினைவாதிகள்!

வேற்றுமையில் ஒற்றுமைகாணும் மக்களாட்சித் தத்துவம் கொண்டது நம் இந்தியத் திருநாடு. அதன் அரசியலமைப்பின் முகப்புரை: “இந்தியாவை ஓர் இறையாண்மை, சமூகத்துவ, சமயச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு என்றும், அரசியல் நீதி (JUSTICE), தன் செயலுரிமை (LIBERTY), சமத்துவம் (EQUALITY), அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை (FRATERNITY) ஊக்குவிக்கிறதுஎன்றும் குறிப்பிடுகிறது.

ஆயினும், நாட்டின் ஒற்றுமையைப் பற்றிப் பேச வேண்டிய அரசியல் தலைவர்கள், அவ்வப்போது சுயநலக்கோட்டைக்குள் சிக்கிக்கொண்டு வெறுப்பைக் கக்கி வெற்றிபெறலாம் என்ற எண்ணத்தோடு இன்று அரசியல் மேடைகளில் அநாகரிகமாக வலம்வந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய அரசியல் தலைவர்களின் பட்டியலில் இன்று நமது பிரதமர் மோடியும் சேர்ந்திருப்பது பெரும் வேதனைக்குரியது.

அண்மையில் பீகார் சட்டப்பேரவைக்கு நடந்தேறிய இரண்டு கட்டப் பரப்புரைகளிலும் பிரதமர் மோடியின் பேச்சு விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. தங்களது வாக்குறுதிகளை அடுக்கி, சாதனைகளைப் பட்டியலிட்டு, எதிர்க்கட்சிகள் மீதான ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்து வாக்குச் சேகரிக்க வேண்டிய பரப்புரைக்களம், கரைபுரண்டு வந்த காட்டாற்று வெள்ளம் பாய்ந்த காணி நிலம்போல, வரையறையற்ற வார்த்தை முழக்கங்களால் கொலையுண்டு கிடக்கிறது.

பீகார் தேர்தல் களத்தில் முதல் கட்டப் பரப்புரையின்போது பிரதமர் மோடி, “தெலுங்கானாவிலும் கர்நாடகாவிலும் காங்கிரஸ் தலைவர்கள் பீகாரிகளை இழிவுபடுத்துகின்றனர். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களைத் தி.மு..வினர் துன்புறுத்துகின்றனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அவர்களோடு கூட்டணியில் இருக்கும் இராஷ்டிரிய ஜனதாதளம் அமைதியாக இருக்கிறதுஎன்று பேசியிருக்கிறார்.

பிரதமரின் பேச்சு, பிரிவினைவாதச் சிந்தனையின் உச்சக் கட்டம் என நாடெங்கிலுமிருந்தும் கண்டனக் கணைகள் தொடுக்கப்படுகின்றன. பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின், “நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்துவிடுகிறார். இது போன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை அவர் இழந்துவிடக்கூடாது. ஒடிசா, பீகார் என்று எங்கு சென்றாலும் பா...-வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்கு தமிழ்நாடு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்று குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறே, எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி, “இந்தியாவின் மக்களாட்சித் தத்துவத்தை மோடி இழிவுபடுத்தியுள்ளார்என்று கூறியிருக்கிறார்.

மேலும், சீதாமர்ஹி, பெத்தியா ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்டப் பரப்புரை மேற்கொண்டபோது பிரதமர், “கடந்த 2005-வரை சுமார் 15 ஆண்டு காலமாக இங்கு காட்டாட்சி நடந்தது; கொள்ளையர்கள், ரவுடிகளின் சொர்க்கப் பூமியாக பீகார் மாற்றப்பட்டது. நாட்டுத் துப்பாக்கி, தவறான நிர்வாகம், கொடுமைகள், ஊழல் இவையே காட்டாட்சியின் அடையாளங் கள். காட்டாட்சி நடத்தியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உங்கள் தலையில் நாட்டு துப்பாக்கியை வைத்து மிரட்டுவர்என்று பேசியிருக்கிறார்இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “பிரதமர் மோடியின் தலையில் டிரம்ப் நாட்டுத் துப்பாக்கி வைத்து மிரட்டினாரா? அதனால்தான்ஆபரேஷன் சிந்தூர்குறித்த டிரம்பின் கருத்துகளை மறுக்க பிரதமர் அஞ்சுகிறாரோ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரிவினைவாதச் சிந்தனைகளைப் பேசுவது ஒன்றும் பா...-விற்குப் புதிதல்ல. 2024-இல் ஒடிசாவில் நடந்த தேர்தலில் நவீன் பட்நாயக் கட்சியில் இணைந்த தமிழ்நாடு அதிகாரி பி.கே. பாண்டியனை விமர்சித்துப் பேசுவதாக நினைத்து, “பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் பெட்டகச் சாவி தற்போது தமிழ்நாட்டில் இருக்கிறது. ஒடிசா மண்ணை ஒரு தமிழன் ஆளலாமா?” என்றெல்லாம் மாநில பிரிவினைப் பேசி வாக்குச் சேகரித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

2023-இல் மணிஷ் காஷ்யப் என்ற யூடியூபர், வட மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில் எடுக்கப்பட்ட வீடியோவைக் கொண்டு தமிழ்நாட்டில் புலம்பெயர் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர் என்று வதந்தி பரப்பினார். இந்த வீடியோ போலியானது என நிரூபித்து, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் மணிஷை கைது செய்தது தமிழ்நாடு காவல்துறை. ஆனால், பின்னாளில் பா... அவரைத் தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டது.

தொண்டன் முதல் தலைவர் வரை பா...வில் யாவருடைய சிந்தனையிலும் பிரிவினைவாத மனப்பான்மை அரியணை போட்டு அமர்ந்திருக்கிறது என்பது வெள்ளிடை மலையாகிறது. அமைதியைச் சீர்குலைக்கும் எண்ணத்தில் வதந்தியைப் பரப்பிய மணிஷ் போல, இன்று பிரதமரே அப்படியான வதந்திகளைப் பரப்ப நினைப்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது. மதப் பிரிவினையை உண்டாக்கி வாக்குச் சேகரிப்பு நோக்கத்தில் இத்தனை காலம் பேசிக்கொண்டிருந்த பிரதமர் மோடி, தற்போது மொழி-மாநில ரீதியான பிரிவினைகளை விதைத்து வாக்குச் சேகரித்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வாழும் மற்ற மாநில மக்களுக்குப் பாதுகாப்பு இல்லைஎன்கிற பொய்யான பரப்புரை உலகெங்கும் வாழும் பல கோடி தமிழர்களின் மனத்தைப் புண்படுத்தியிருக்கிறது. இந்திய மாநிலங்களை ஒரு குடையின்கீழ் ஒன்றிணைத்த சர்தார் வல்லபாய் படேலுக்கு 3000 கோடி செலவில் சிலை வைத்துவிட்டு, அவருடைய சிந்தனை அடிப்படையில்தேசிய ஒற்றுமை தினத்தையும்கொண்டாட அழைப்பு விடுத்துவிட்டு, மாநிலங்களுக்கிடையே பகைமையை உண்டாக்கும் விதமாக எவ்வித ஆதாரமுமின்றி ஒரு வதந்தியை முன் வைத்து வாக்குச் சேகரிப்பது சங்கப் பரிவாரங்களின் வன்மம் நிறைந்த நீண்ட நெடுங்காலத் தேர்தல் சூட்சுமத்தை உணரச் செய்கிறது

ஒருவேளை, அப்படி ஒரு சூழல் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருந்தால் தன் அதிகாரத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நிலைப்பாடு எடுக்க வேண்டிய பிரதமர், தேர்தல் நேரத்தில் இது பற்றிப் பேசுவது அவருடைய உள்மன நோக்கத்தைப் புரிந்துகொள்ளச் செய்கிறது. வடக்கே செல்கின்றபோது தெற்கைப் பற்றி விமர்சிப்பதும், தெற்கே வந்தால்வடக்கு வளமாக இருக்கிறதுஎனப் பொய்ப் பிம்பங்களைக் கட்டமைப்பதையும் மரபாகக் கொண் டிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டின் தலைவராக அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய தலைவர், பீகாருக்கும் தென் மாநிலங்களுக்குமிடையே பகைமையைத் தூண்டி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பேன்...” என்று கூறி மூன்று முறை பிரதமராகப் பதவி ஏற்றவர், அந்த உறுதிமொழியை ஒவ்வொரு தேர்தலின்போதும் மறந்துவிடுகிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்எனும் பல்லுயிர் நேயத்தையும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்என்னும் சகோதரத்துவத்தையும் உலகிற்கு உணர்த்தி, வந்தாரை வாழவைப்பது தமிழகம். யாவரையும் வாஞ்சையோடு அணைத்துக்கொள்ளும் அதன் தாயுள்ளத்தையும் தனிச்சிறப்பையும் சிதைத்ததோடு, ‘வேற்றுமையில் ஒற்றுமைஎன்ற இந்தியாவின் அடையாளத்தையும் அவர் சீர்குலைத்து விட்டார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலுக்காக ஆண்டாண்டு காலமாக நம் முன்னோரால் நிலைத்து நிற்கும் நம் மரபை, இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவை நிலைகுலையச் செய்து விட்டார். தேச ஒற்றுமையைப் பலிகொடுத்துப் பெறும் வெற்றி நீண்ட காலம் நிலைக்காது; அதுபங்காளிகளுக்குள் பகை உண்டாக்கி பலனடையும் பாம்பு போன்றது; பேராபத்து என்றால் பால்வார்த்தவனே பல்லாக்கு ஏற்றி விடுவான்என்னும் கிராமத்துச் சொலவடைதான் நம் எண்ணத்தில் எழுகிறது.

நம் நாட்டின் தேசியப் பாடலானவந்தே மாதரம்இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டுக் கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசுகையில், “கடந்த 1937-இல்வந்தே மாதரம்பாடலின் முக்கியப் பத்திகள் நீக்கப்பட்டபோதே பிரிவினை விதைகள் விதைக்கப்பட்டன; இத்தகைய பிரிவினைவாத மனப்பான்மை இப்போதும் நாட்டுக்குச் சவாலாகவே உள்ளதுஎன்றுவருத்தப்பட்டிருக்கிறார்பிரதமர் மோடி.

1870-இல் பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப்பட்டு, 1896-இல் இரவீந்திரநாத் தாகூரால் இசையமைக்கப்பட்டு, 1950, ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபையால் நாட்டின் தேசியப் பாடலாக முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது இப்பாடல். முன்னதாக 1937-இல் மௌலானா அபுல்கலாம் ஆசாத், ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், ஆச்சரிய நரேந்திர தேவா, இரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் கொண்ட குழுவின் பரிந்துரையால், ஆறு பத்திகள் கொண்ட இப்பாடலில் இரண்டு பத்திகள் மட்டுமே தேசியப் பாடலாகத் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் பாடல் குறித்து, இப்போது இன்றைய பிரதமரின்பிரிவினைவிமர்சனம் ஏன்? என்பது இப்போது நமக்கு நன்கு புரிகிறது.

இத்தகைய பிரிவினை விமர்சனத்தைப் பதிவு செய்யும் இந்திய பிரதமர் மோடியும் பா...வினரும்  கண்ணாடியின் முன்னிற்கும்போது பிரிவினைவாத மனப்பான்மை கொண்டவர்கள் யார்? என்பதை அவர்கள் முன்னிற்கும் கண்ணாடியே அவர்களுக்குக் காட்டும். ஏனெனில், கண்ணாடிகள் ஒருபோதும் பொய் சொல்வதில்லை.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்