கத்தோலிக்க உலகில் ஒரு புயல் அடிப்பது போல, சமூக ஊடகங்களில் ஒரு குழப்பச் செய்தி வலம் வந்து திரு அவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுதான் அன்னை மரியா பற்றிய செய்தி. இவ்வருடம் 2025, நவம்பர் 4-ஆம் தேதி புனித சார்லஸ் பொரேமியோ திருநாளன்று வத்திக்கானின் நம்பிக்கைக் கோட்பாட்டுத் திருப்பேராயம் (Dicastery for the Doctrine of the Faith) மேற்கூறிய ஓர் அறிக்கையை (Doctrinal Note), “Mater Populi Fidelis” (Mother of the Faithful People) - இறை நம்பிக்கையாளர்களின் அன்னை என்னும் பெயரில் வெளியிட்டது. ஆனால், இந்நம்பிக்கைக் கோட்பாட்டு அறிக்கை பல்லாண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு, திருத்தந்தையின் ஒப்புதலுக்காகக் காத்திருந்து, பின்னர் 2025 அக்டோபர் 7-ஆம் தேதி செபமாலை மாதா திருவிழா அன்று திருத்தந்தை லியோ அதற்கு ஒப்புதல் கொடுத்துக் கையெழுத்திட்டார். நம்பிக்கைக் கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவர் கர்தினால் விக்டர் மனுவேல் பெர்னாண்டஸ் அவர்களைப் பிரகடனப்படுத்தக் கூறினார். இவ்வாறு இவ்வேடு பிரகடனப்படுத்தப்பட்டு, திரு அவை பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இவ்வேடு குழப்பவுமில்லை; மாதா பக்தியைக் குறைப்பதுமில்லை. இதை விளக்க கீழ்க்காணும் மூன்று ஆய்வுகள் செய்வோம்:
1. 80 எண்கள் கொண்ட
இவ்வேடு அன்னை மரியா பற்றிய திரு அவையின் போதனையாகக் கூறுவதென்ன?
2. திரு
அவை சட்ட முறைப்படி இதன் கனம் என்ன? நம்பிக்கையாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்?
3. எதுவும்
தடை செய்யப்பட்டதா?
1. திருப்பேராயத்தின்
இவ்வறிக்கை உண்மையிலே அன்னை மரியா பற்றிய இறையியலின் ஓர் அருமையான தொகுப்பு. ஒரு மரியியல் (Mariology) கருவூலம்.
இதன் பின்புலம் என்ன? கடந்த அரை நூற்றாண்டாகக் கத்தோலிக்கத் திரு அவையின் பல்வேறு இடங்களிலிருந்து அன்னை மரியாவை ‘இணை மீட்பாளர்’ (Co-Redemptrix) என
அறிவிக்க வேண்டும் என்று நம்பிக்கையாளர்களிடமிருந்து
கோரிக்கைகள் வந்த வண்ணமாய் உள்ளன. அன்னை மரியா பற்றிய இந்த 5-வது கோட்பாட்டைத் திரு அவை அறிவிக்கவேண்டும் என்று தொடர் வேண்டுதல்கள் எழும்பிக் கொண்டிருந்தன. இவற்றிற்கு உறுதிபட பதிலளிக்கவே இவ்வேடு திரு அவையின் ஆசிரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வேட்டின் சாராம்சம் இதுவே:
இவ்வேடு
அன்னை மரியா பற்றிய கீழ்க்காணும் இரண்டு சொற்றொடர்களைக் (Titles of Mary) கவனமாக
ஆய்வு செய்து, அவற்றைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறுகின்றது. அவை முறையே: i) அன்னை மரியா, இணை மீட்பர் (Co-Redemptrix); ii) அன்னை
மரியா அனைத்து வரங்களையும் பெற்றுத்தரும் இடைநிலையாளர் (Media trix of All Graces). திரு
அவையின் இந்த இரு போதனைகளும், “கடவுள் ஒருவரே; கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்”
(1திமோ 2:5) என்ற திருவிவிலியத்தின் அடிப்படையிலும், “இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின் கீழ் மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” (திப
4:12) என்ற இறைவார்த்தையின் அடிப்படையிலும், அன்னை மரியா அல்லர் (எண்கள் 28-33); மாறாக, கிறிஸ்துவே மீட்பர்; மீட்பருக்கு இணையாக எவரையும் கருதக்கூடாது என அறிவுறுத்துகின்றது இவ்வேடு. அதேபோல
இறைவனிடமிருந்து மீட்பையும் வரங்களையும் பெற்றுத் தருபவர் கிறிஸ்துவே (எண் 50-61) என்றும் உறுதிபட விளக்குகின்றது இவ்வேடு.
மனிதர்
என்ற முறையில் அன்னை மரியாவே கிறிஸ்துவால்தான் மீட்கப்பட்டிருக்கிறார் என்பது தான் இறையியல் உண்மை. இதுதான் இவ்வேட்டின் சாராம்சம். இதை முழுமையாகப் படிக்காமல் ஊடகங்கள் குழப்புவது போன்றும், அன்னை மரியா வணக்கத்தைக் குறைப்பது போன்றும், பிரிவினை சபை போலக் கத்தோலிக்கத் திரு அவை மாறுகின்றதா? என்றும் கருத்துத் தெரிவித்துள்ளன. இது அறியாமையின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை.
2. திரு
அவைச் சட்டம் 750-இன்படி திருவிவிலியத்திலும் (Scripture) மற்றும்
வாழையடி வாழையாகத் திரு அவை மரபு (Tradition) வழியாகவும்,
கத்தோலிக்கத் திரு அவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக் கோட்பாடுகளை (Doctrines), திரு
அவையின் ஆசிரியம், (Solemn Magisterium) உலகளாவிய
ஆசிரியப் போதனையாக அல்லது இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட (divinely revealed) போதனையாக ஒரு கோட்பாட்டை அறிவிக்கும்போது, நம்பிக்கையாளர் அனைவரும் அப்போதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைத் திருத்தந்தையே அறிவிக்கலாம் அல்லது திருப்பேராயங்களின் (Dicastery) வழி
அறிவிக்கலாம். இப்போதனைக்கெதிரான கோட்பாடுகளையும் கருத்துகளையும் தவிர்க்க வேண்டியது நம்பிக்கையாளர்களின் கடமை.
தி.ச. 752 கூறுகின்றது: ‘நம்பிக்கையாளர்கள் அனைவரும் அப்போதனைக்கு அறிவு மற்றும் மனம் சார்ந்த ஏற்றுக்கொள்ளலை (a religious submission
of intellect and will) வழங்க
வேண்டும்.’ நமது இறையியல் சிந்தனைகளையும் கருத்துகளையும் அதிகாரப்பூர்வமான இப்போதனையின்படி முறைப்படுத்த வேண்டும். திறந்த மனத்துடனும், திரு அவையின் ஆசிரியத்திற்குக் கீழ்ப்படிதல் மனநிலையுடனும் இப்போதனையை (Infallibility) ஏற்றுக்கொள்ள
வேண்டும்.
அதேவேளை,
இது வழுவா வரம் (Immaculate Conception) உடைய
போதனை அல்ல; தி.ச. 749-இன்படி
திருத்தந்தை, நம்பிக்கை
மற்றும் அறநெறி (Faith and Morals) சார்ந்த
போதனையைக் கோட்பாடாகத் திருத்தந்தை அறுதியிட்டு அறிவிக்கும்போது மட்டுமே அது வழுவா வரம் பெற்ற கோட்பாடாகின்றது. அதை எதிர்க்கும் அல்லது முரண்பட்டுக் கருத்துத் தெரிவிக்கும் நம்பிக்கையாளர்கள் திரு அவையின் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கப்படுகிறார்கள். (உ.ம்.) ‘அன்னை
மரியா அமல உற்பவி’
(Immaculate Conception) என்ற
கோட்பாடு.
3. அன்னை
மரியா பக்தி அல்லது மரியியல் இறையியல் கருத்துகள் ஊடகங்களில் வந்தது போல எதுவும் தடை செய்யப்படவில்லை. தற்போது இப்படி உரைப்பது சரியானதல்ல (எண் 22: ‘it is always
inappropriate to use the title “Co-redemptrix” to define Mary’s
cooperation’) என்றுதான் கூறுகின்றது. அன்னை மரியா இணை மீட்பர் (Co-Redemptrix) எனத்
திரு அவையில் நம்பிக்கைக் கோட்பாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற தொடர் கோரிக்கைகளுக்குப் பதில் வழங்கியுள்ளது இத்திருப்பேராயம். இவ்வேடு அன்னை மரியா எப்படி மீட்புத் திட்டத்தில் ‘ஆம்’ எனக் கூறி (லூக் 1:38) பங்கேற்றது முதல் கல்வாரியில் இறுதிவரை மனுக்குல மீட்பின் தாயாக (யோவா 19:25) கிறிஸ்துவாலேயே வழங்கப்பட்டு கிறிஸ்துவின் முதன்மைச் சீடராக (எண் 73) விளங்குகிறார் என்பதை எண்கள் 6,7,8-இல் கூறுகின்றது. பின்னர் எபேசு மற்றும் நிசேயா திருச்சங்கங்களில் மரியா, ‘இறைவனின் தாய்’
(Theotokos) மற்றும் ‘என்றும்
கன்னி’ (virgininty
of Mary) என்ற
போதனைகளை நினைவூட்டி ( எண். 10, 11), பின்னர் வத்திக்கான் ஏடுகள், குறிப்பாக, ‘திரு அவை’ ஏடு வழி (Lumen Gentium No. 62, 66, 69) மீட்புத் திட்டத்தில்
மரியாவின் பங்கு பற்றியும் மற்றும் திருத்தந்தையரின் ஏடுகள், குறிப்பாக, புனித இரண்டாம் ஜான்பாலின் 1987-இல் வந்த ‘மீட்பரின் அன்னை’
(Redemptoris Mater no.
4, 38) போன்ற திருத்தந்தை சுற்றுமடலையும், புனித அகுஸ்தின், பொனவெந்தூர் போன்ற மறை வல்லுநர்களின் கருத்துகளையும் தாங்கிய ஒரு பெட்டகமாக இவ்வேடு வெளிவந்துள்ளது.
தனிப்பட்ட
விதத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அன்னை மரியாமய ஆன்மிகத்தையே என் குருத்துவத் தனிப்பட்ட வரமாகவும் வாழ்வாகவும் கொண்டு, அது பற்றிய நூல் வெளியிட்டு இருக்கும் எனக்கு, தொடக்கத்தில் கேள்விப்பட்டவுடனே குழப்பமிருந்தாலும் ஏட்டின் திரு அவையின் போதனையைப் படித்து, எனது தனிப்பட்ட விருப்ப அறிவை விடுத்து, திரு அவை ஆசிரியத்தின் போதனையை ஏற்றுக்கொண்டவுடன் தெளிவு பிறந்தது. இப்படிப்பட்ட மனநிலையே ஒவ்வொரு நம்பிக்கையாளர்களுக்குள்ளும்
எழவேண்டும். அதுதான் கத்தோலிக்கக் கிறித்தவம்.