குழந்தைகள், இளையோர் தங்கள் முடிவுகளை, விருப்பங்களை எடுப்பதில் AI வழிமுறைகள் அவர்களைப் பலவீனப்படுத்துவதாகத் திருத்தந்தை லியோ கவலை தெரிவித்துள்ளார். வத்திக்கானில் ‘செயற்கை நுண்ணறிவு காலத்தில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மாண்பு’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருத்தந்தை, பொழுதுபோக்கு மற்றும் சிறார்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நமது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைச் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு மாற்றுகிறது என்பது குறித்து எடுத்துரைத்தார். பெற்றோரும் கல்வியாளரும் இந்த இயக்கவியல் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம் என்றார். தொடர்ந்து உரையாற்றிய திருத்தந்தை, “வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் ஏற் படும் புதிய சவால்களை எதிர்கொள்ள ஏற்கெனவே உள்ள பாதுகாப்புச் சட்டங்களைப் புதுப்பிக்க வேண்டும். AI-இன் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டிற்கான நெறிமுறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.