ஆர்.எஸ்.எஸ். என்ற இந்துத்துவத்தின் ஏகத் தலைவர் மோகன் பகவத் அவர்கள் அருளிய அருளுரையின் உள்ளடக்கம் கேட்டு இந்திய ஆயர் பேரவை அதிர்ந்து போனதும், எதிர்வினையாற்றியதும் மகிழ்ச்சி தரும் செய்தியே. ஆனால், இவ்வமைப்பு தோன்றி நூறாண்டு கண்ட நிலையில், இவ்வமைப்பின் தோற்றம், தோன்றிய சூழமைவு, இந்திய-தேசிய அளவில் உருவாக்கி வரும் அதிர்வலைகள், இவ்வமைப்பு உயிர்க் கொள்கையென ஏற்றுக்கொண்டிருக்கும் இந்துத்துவம், இந்துத்துவத்தின் பாசிசப் பண்புகள் இவையெல்லாம் இந்திய மண்ணில் தொடர்ந்து விதைக்கப்பட்டு வருவதை, இந்திய வகுப்புவாத அரசியலின் வளர்ச்சியைக் கவனத்தில் கொள்வோர் நன்கறிவர்.
“இந்திய நாட்டில் வாழ்வோர் அனைவரும் இந்துகள்; இந்துகள் அல்லாதோர் இந்தியர்கள் இல்லை” என்ற மோகன் பகவத் அவர்களின் திருவசனங்களில் புதியன எதுவும் இல்லை. எனவே, அகில இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் எதிர்வினை பாராட்டப்பெற வேண்டியதொன்றாலும், பகவத் அவர்களின் செய்தியின் உள்ளடக்கத்துள் புதைந்திருக்கும் அரசியலைக் கிறித்தவர்களுக்காகவாவது தெளிவுபடுத்துவது இன்றைய கட்டாயத் தேவையாகும்.
‘இந்தியா’ என்ற பூகோள அமைப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இந்தியா, இந்துத்துவர்களின் வரலாற்றுக் கண்ணோட்டத்தின்படி, எப்போதும் இருக்கும் அல்லது இயங்கும் ஒரு நிலப்பரப்பு (Territory) எனும்
பொய்மையை நாங்கள் ஏற்கவில்லை. ஆங்கிலேயர் வருகைக்கு முன் இன்று வழங்கப்பெறும் ‘இந்து’ என்ற கருத்தாக்கம் இல்லை; வெள்ளையன் தயவினால்தான் நாம் ‘இந்து’ என்ற பெயரினைப் பெற்றோம் என்று நன்றியோடு பகர்ந்த மேனாள் காஞ்சிப் பெரியவாளின் கூற்றினை ஏற்கின்றோம். “இந்துவாக இயலாதோர் இந்தியராக இருக்கமுடியாது” என்ற
இந்திய மதவாதிகளுக்கு இந்து மதம் இந்தியா என்ற கட்டமைப்பின் உள்ளடங்கிய பொய்மையை எடுத்துரைக்கவே இவ் விளக்கம்.
‘இந்தியா
ஒரு தேசமல்ல’ என்பதையும், ‘தேசங்களின் நாடு’ என்பதையும் ஏற்கின்றோம். பிரபல அரசியல் அறிஞர் அவர்களின் ஆழமான ஆய்வின்படி, ‘இந்தியா அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நாடு’
(Politically integrated).
ஆனால், பன்மைக் கலாச்சாரமுடையது (Culturity plural)
என்பார். இன்றைய இந்தியா ஒரு சுயம்புத்தன்மையுடைய ஒன்றல்ல; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டதும் அல்ல; சுருக்கமாக, இது ஒற்றை இந்தியாவும் அல்ல; இதன் அழகே இதில் உள்ளடங்கிய பன்மைக் குணமே! பன்மையை மறுப்பவரே இந்தியப் பண்பை மறுப்போர், ஏன்... இந்தியாவை மறுப்போர்.
இந்துத்துவர்களால்
விழுந்து போற்றப்பெறும் இந்து மதம் ஒற்றைப் பண்புடைய (Homogenous) மதமல்ல; ஒற்றை
என்பது கட்டமைக்கப்பட்ட ஒன்று. இந்து மதத்தின் உயர்வு அதன் பன்மையுள் உள்ளது. ஒற்றைக் குணமுடைய மதமாக இந்து மதம் எப்போதும் இருந்ததில்லை. இந்திய நிலப்பரப்பில் சைவம், வைணவம், சித்தார்த்தம் என்று நிலவிய நம்பிக்கைகள் உண்டு. இவைகளுக்கான பொதுப்பெயர்தான் இந்து. இன்று நாம் காணும் இந்து மதம் ‘Syndicated Hinduism’ என்பார் பிரபல வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் ரொமிலா தப்பார். இந்து அல்லாதோரையும் ‘இந்து’ என்ற பெயரில் ஒருங்கிணைத்து அகவயப்படுத்தி, அரசியல்ரீதியான பெரும்பான்மையை உருவாக்கிய இந்துத்துவர்கள், யாரை ‘இந்து’ என்றழைக்கின்றனர்? யாரை
‘அ. இந்து’
(A Hindu) என்று
அழைக்கின்றனர்? இந்துவாக இல்லாதவர்கள் என்று இந்து மதம் சாராதோரை அழைப்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. ஆனால், இந்து மதம் சாராதோர் இந்தியர் என்று கருதப்பெறார் என்ற கருத்தை எவரும் ஏற்கமுடியாது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவராக அல்லது குருஜியாக அழைக்கப்பட்ட குரு கோல்வால்க்கரின் ‘Punch of thoughts’ எனும்
நூல் இந்துத்துவக் கருத்தியலின் மூலமாகும். இவரின் கருத்துப்படி, “இந்தியாவில் வாழும் இந்தியர்கள் இந்து மதத்தை ஏற்கவேண்டும்; இந்துமதத் தலைவர்களைப் போற்றவேண்டும்; இந்து கலாச்சாரம் இவர்கள் வாழ்வாகவேண்டும். இவை தவிர்த்து வேறெதுவும் இவர்களின் வாழ்வுக்கு முதன்மை இல்லை. இல்லையெனில், இந்துவல்லாத இவர்களும் இந்தியாவில் வாழலாம். எப்படி? இந்நாட்டின் உரிமைகளுக்குத் தகுதியற்றவராய் (Deserving nothing),
எவ்வுரிமையும் கோர முடியாதவராய் (claiming nothing), ஏன்... குடியுரிமை கூட மறுக்கப்பட்டவராய்தான் (not event citizenship)
வாழ முடியும். இவர்கள் இந்துகளாய் வாழ்ந்தால் இந்தியர்கள்! இல்லையெனில் அந்நியர்கள் (Aliens)!
மதம்
எப்போதும் ஒரு நாட்டின் குடிமகனின் குடியுரிமையைக் காக்கும் அலகாக இருக்க முடியாது என்பதே உண்மையாயிருக்க, யாரை அல்லது எதனை நியாயப்படுத்த பகவத் இம்முழக்கத்தை இப்போது முன்வைக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது மோகன் பகவத் விடுத்த இந்து மதம் சாராதோர் குறித்த அறிக்கை இவரின் ‘அ. இந்து’ அறிக்கையை மேலும் ஆழப்படுத்தியது. “கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்நாட்டில் நுழைந்த வெளிநாட்டினர் பலர் திரும்பிச் சென்ற போது சிலரை இந்நாட்டிலேயே விட்டுச் சென்றனர். பாரதியக் கலாச்சாரத்தின் பெருங்குணத்திற்கேற்ப இந்நாட்டில் தங்கியோர் பரிவுடன் கவனிக்கப்பட்டனர். இம்மக்களை இந்நாட்டின் குடிகளாகவே ஏற்றுக்கொண்டனர். ஆனால், இவர்கள் தம் வேறுபட்ட அடையாளங்களால் நாட்டில் வேற்றுமை உணர்வை வளர்த்தனர்” (‘தி
இந்து’, அக்.6).
மோகன்
பகவத் அவர்களின் உரையை மெச்சிய மோடி, நெகிழ்ந்து போனதாக அறிவித்தார். மோகன் பகவத் இந்துகள் அல்லாதோர் சிலர் தம் தனித்த அடையாளங்களைத் தொடர்ந்து கைக்கொள்வதால் இந்நாட்டில் வேற்றுமை வளர்வதையும், நாட்டின் ஒருமை பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார். இன்று ‘அ. இந்தியர்’ பற்றிப் பேசும் மோகன் பகவத், இந்துகள் அல்லாதோரின் தனித்த அடையாளத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.
மதம்
ஒரு தனிமனிதன் சார்ந்த நம்பிக்கை மட்டுமல்ல; ஏற்றுக்கொண்ட நம்பிக்கையால் ஓர் அடையாளத்தையும் பெறுகின்றான். கிறித்தவம் என்பது என் நம்பிக்கை மட்டுமல்ல; அது என் அடையாளமாகவும் உள்ளது. இந்த அடையாளத்தை, அடையாளம் எனும் உரிமையை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. மோகன் பேசும் கருணை இங்கு ஏற்கத்தக்கது அல்ல!
சவார்க்கரும்
மத
அடையாளமும்
மோகன்
பகவத் அறிக்கையின் உள்ளடக்கம் புதிய செய்தியில்லை; இவ்வறிக்கையின் உள்ளடக்கம் கண்டு ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் தோற்றுனராம் ஹெக்டவார், குருஜி கோல்வால்க்கர் தொட்டு இன்றைய மோகன் பகவத் வரை அனைவரும் ஒரே தொனியில்தான் பேசிவருகின்றனர். இந்துத்துவத்தை ஏற்றுக்கொண்ட சங்கப் பரிவாரங்கள் அனைத்தும் இக்கருத்தில் ஒற்றைக் கருத்துடையவையே.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு முந்தைய அமைப்பினரான (1916) வீர் சவார்க்கர் என்பவர்தாம் ‘இந்துத்துவா’ என்ற
சொல்லாடலை முதன் முதலில் கையாள்கிறார். ஆர்.எஸ்.எஸ்.-சின் உறுப்பினராக இருந்த கோட்சே, இந்து மகாசபையின் உறுப்பினராக இருந்தபோதுதான் காந்தியின் கொலைகாரனாக மாறுகிறார். காந்தியின் மீது நிகழ்த்தப்பட்ட வன்மத்திற்கான காரணம் என்ன என்பதை வரலாறு அறியும். காந்தியின் கொள்கைகள் இந்து இராஷ்டிர உருவாக்கத்திற்கு எதிரானது என்பதாலும், இசுலாமிய பகையை காந்தியின் பரிவாரங்கள் முன்னெடுக்காமையே காரணம் என்பதும் வெளிப்படை. ஆர். எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபையும் ‘இந்தியர் யார்?’ என்று நிர்ணயம் செய்வதில் ஒத்தக் கருத்துடையவையே.
“அவர்கள் (இசுலாமியர்) இந்நாட்டில் பிறந்தவர் என்பதாலேயே அவர்கள் ஒற்றை இதயம் கொண்டவர்கள் என்ற கருத்தை ஏற்கமுடியாது. இந்து, இசுலாமியர் ஒற்றுமையை ஏற்பதைவிட நான் சாவதே சிறந்தது.”
“நாமனைவரும் இந்துகளே; இந்துகளாகிய நாம் அனைவரும் பொதுவான இரத்த உறவு (common
blood) கொண்டவர்கள். நாம் தட்சணத்தியாஸ், கௌட்ஸ் சராவத்ஸ், கின்னர்ஸ், வாணர் என்ற பிரிவுகளுள் ஒன்றாக இருக்கலாம். ஆனாலும், நாம் அனைவரும் இந்துகளே. நம்முள் ஓடுவது பொதுவான இரத்தமே. நாம் ஒற்றைக் கொள்கையுடையவராய் (Monists) நம்பிக்கையற்ற
நாத்திகராய், பல்வகை இறைக்கொள்கையராய் இருக்கலாம். ஆனாலும் நாம் இந்துகளே.”
“இந்நாட்டைத் தாய்நாடாக ஏற்கும் அனைவரும் இந்நாட்டைத் தம் முன்னோர் வாழ்ந்த நாடாக (பித்ரு பூமி) புண்ணிய பூமியாகக் கருதுவார்களானால், அவர்களே இந்த நாட்டின் இயல்பான குடிமக்கள் (in
habitants) ஆவர். இப்புண்ணிய பூமி (கிறித்தவர்களின் பாலஸ்தீனம் போலவோ முசுலிம்களின் அரேபியா போன்றதோ அல்ல). கிறித்தவர்களும் யூதர்களும் இசுலாமியரும் இயல்பான (Original) தேசிய (Original) குடிகளல்லர்.
இந்தியா அடிப்படையில் ஓர் இந்து நாடு என்பதுதான் உண்மை.”
“இந்தியா எனும் தேசம் இந்துகளை மட்டுமே உள்ளடக்கியது” (Hindu Constitute this nation) – Janki Bakkhle ‘Savakkar
aud the making of Hinduva’ (மேற்கண்ட நூலில் தெரிவு செய்யப்பட்ட சவார்க்கரின் கருத்துகள்).
இன்றைய
மோகன் பகவத்தின் பிரிவினைவாதக் கருத்து புதியது அல்ல. சங்கப் பரிவாரங்களின் தொடக்கக் காலந்தொட்டு தொடர்ந்து கூறிவரும் வெறும் முழக்கமல்ல. இவ்வமைப்பின் அடிநாதமே இந்நாட்டை மதரீதியான, மதம் சார்ந்த நாடாக மாற்றுவது எனும் உண்மையை அறிய வேண்டுவதே இப்போதைய தேவை.
இந்தியா
விடுதலை பெறும் முன்பே இந்தியாவுக்கான அடையாளம் (idea
of India) எதுவாக
இருக்க வேண்டும் என்பதில் அன்றைய இந்தியத் தலைவர்கள் தெளிவாகவே இருந்தனர். உண்மை தேசியம் அல்லது உள்ளடங்கிய தேசியம் பேசியவர்கள், அப்போதே ஒற்றைத் தேசியம் அல்லது ஒதுக்கும் தேசியர்களின் தீவிர மதவாதம் பேசியோரின் எதிர்ப்பினைத் தீரத்தோடு எதிர்கொண்டு, பெரும்பான்மை மதவாதிகளின் எதிர்ப்பைச் சமாளித்து, இந்தியாவிற்கான புதிய அடையாளமாக, சனநாயகச் சமய சார்பற்ற அரசை நிறுவினர்.
இந்தியா
எனும் மண்ணிற்குப் பொருத்தமற்ற ஓர் அரசமைப்பை நிலைநிறுத்துவதில் வெற்றிபெற்ற தேசியத் தலைவர்களைப் போற்றும் நாம், இந்தியாவிற்கென சனநாயகத்தை, சனநாயகம் எனும் விழுமியத்தை மெல்ல மெல்லக் கைநழுவி வருகிறோமோ என்ற அச்சம் குடிமக்களை வாட்டி வருவதையும், இன்று இந்து அல்லாதோருக்கு இந்தியாவில் இடம் இல்லை என்பதும், இந்தியர் என்ற உரிமை வேண்டுவோர் இந்துகளாகவே இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் போக்கும் ஒரு பாசிசப் பண்பே.
ஹிட்லரின்
நாசிகள் இனப்பகை வளர்த்து, யூதர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலை நிகழ்வை நியாயப்படுத்திய கோல்வால்க்கரின் கருத்தியல் இன்றும் இந்தியாவில் சிறுபான்மையினரை ஒதுக்கி ஒடுக்கும் அரசியலில் நாளும் சாத்தியமாகி வருதலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்திய
சனநாயகம், சனநாயகப் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்டுள்ள சனநாயக நிறுவனங்கள் அனைத்தையும் ‘un
Hindu’ (இந்து
பண்பு இல்லாதது) என்று வர்ணிக்கப்பட்ட இந்துத்துவவாதிகள்தாம் இன்று நம்மை ஆட்சி செய்கின்றனர்.
இந்துத்துவ
உள்ளடக்கம் இந்தியர்களுக்கு எதிரானது; ஏன்... இந்துகளுக்கே எதிரானது என்பதையும் புரிந்துகொண்டால் நம் இந்துத்துவ எதிர்ப்பின் அகலம் விரியும்.