(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அருள்பணி: “கடந்த நமது உரையாடல்களில் திருமுழுக்கு
அருளடையாளம் குறித்து பல்வேறு கருத்துகளை நாம் பகிர்ந்து கொண்டோம். இன்றைய நமது உரையாடலில்
ஒப்புரவு அருளடையாளம் குறித்துப் பேசலாம்.”
அகஸ்டின்: “தந்தையே, ஒப்புரவு அருளடையாளத்தைப்
பற்றி எனக்கு ஒரு கேள்வி உண்டு. ‘ஒப்புரவு என்கின்ற அருளடையாளம் தேவைதானா?’ என்பதே
அக்கேள்வி.”
அருள்பணி: “ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவத்தை
நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், பாவம் என்பது என்ன? பாவம் நம் வாழ்வை எவ்வாறு
பாதிக்கிறது? பாவத்திலிருந்து வெளியேறுவதற்கான வழி என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதில்
தேடுவது இன்றியமையாதது. பாவம் என்பது என்ன?”
அகஸ்டின்: “கடவுளின் கட்டளைகளை மீறுவதே பாவம்’ என்று மறைக்கல்வி வகுப்பில் படித்ததாக நினைவு.”
அருள்பணி: “உண்மைதான்! எனினும், ‘கடவுளின் கட்டளைகள்’ எவையெவை என்பது குறித்த தெளிவு நம்மிடம் இருந்தாலும், கடவுள்
மனிதர்களாகிய நமக்குக் கட்டளைகளைக் கொடுத்ததன் நோக்கம் என்ன என்கின்ற தெளிவு நம்மிடம்
பெரும்பாலும் இருப்பதில்லை. எனவே, கடவுள் தந்த கட்டளைகளின் நோக்கம் என்பது குறித்து
இன்றைய நாளில் நாம் உரையாடலாம்.”
கிறிஸ்டினா: “கடவுளின் கட்டளைகளுக்கென்று நோக்கம்
இருக்கிறதா? என்ன நோக்கம் தந்தையே?”
அருள்பணி: “ஒரு சிறிய உதாரணம்! ஒருவர் கடைக்குச்
சென்று ஒரு குளிர்சாதனப்பெட்டி வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அப்பெட்டியோடு ஒரு கையேட்டையும்
(User Manual)
வழங்குவார்கள். அதில் குறிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி அப்பெட்டியை இயக்கும்போது
மட்டுமே அது அவருக்குப் பயன்தரக் கூடியதாக இருக்கிறது. அதற்கு மாறாக இயக்கினார் என்றால்
(உதாரணமாக, மின் இணைப்பை மாற்றிக் கொடுப்பது, சுகாதாரமற்ற முறையில் கையாள்வது) அது
குளிர்சாதனப் பெட்டியைப் பாழடையச் செய்வதோடு, அவருக்கும் பாதகமாக மாற வாய்ப்புண்டு.
அதுபோல, இந்த உலகில் இருக்கும் ஒவ்வொன்றையும் எவ்வாறு கையாள்வது என்பதற்கான வரையறைகளும்
வழிமுறைகளும் உள்ளன.”
அன்புச்செல்வன்: “எனக்கு ஒரு கதை நினைவிற்கு வருகிறது.
தொழிற்சாலை ஒன்றில் ஒரு பெரிய இயந்திரம் பழுதாகி விட்டது. அதை இயக்குபவர் அதற்குரிய மின்சாரப் பொத்தானை அழுத்தியும்
அது இயங்கவில்லை. தொழிற்சாலையின் உற்பத்திக்கு இந்த இயந்திரத்தின் செயல்பாடு மிகவும்
முக்கியமானதாக இருந்தது. இவ்வியந்திரத்தின் பகுதியாக ஒரு பெரிய சக்கரம் இருந்தது. அச்சக்கரம்
இயங்க மறுத்தது. இதன் காரணமாகவே ஒட்டுமொத்த இயந்திரமும் இயங்கவில்லை. பல தொழிலாளர்கள்
இணைந்து அச்சக்கரத்தை நகர்த்த முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை. வேறு வழியில்லாமல்
மேலதிகாரி அந்த இயந்திரத்தை உருவாக்கிய நிறுவனத்தோடு தொடர்புகொண்டு, பிரச்சினையை எடுத்துக்கூறி
அதனைச் சரிசெய்ய ஒரு நபரை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அந்நிறுவனமும் ஒரு நபரை அனுப்பியது.
வந்த நபர் இயந்திரத்தைக் கூர்ந்து நோக்கினார்.
தன்னிடமிருந்த ஒரு சிறிய சுத்தியலால் சக்கரத்தின் ஓர் இடத்தில் இலேசாகத் தட்டினார்.
பின்பு மின்சாரப் பொத்தானை அழுத்தியவுடன் அது இயங்க ஆரம்பித்தது. வந்த நபர் மேலதிகாரியிடம்,
‘இயந்திரத்தைச் சரிசெய்ததற்கான செலவு ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்’ என்று கூறினார். அதிர்ச்சியடைந்த மேலதிகாரி, ‘ஒரு சிறிய
சுத்தியலை வைத்து இலேசாகத் தட்டியதற்காகவா ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்?’ என்று கேட்டார்.
அந்த நபர், ‘இந்தப் பணம் சுத்தியலை வைத்துத் தட்டியதற்காக அல்ல; எங்குத் தட்ட வேண்டும்
என்று தெரிந்து வைத்திருப்பதற்காக!’ என்றாராம்.”
அருள்பணி: “ஓர் இயந்திரம் நமக்குப் பலன்தரக்
கூடியதாக இருக்க வேண்டுமெனில், அது எப்படி இயங்குகிறது என்கின்ற தெளிவு நம்மிடம் இருப்பது
அவசியம். ஓர் இயந்திரத்தை எப்படியும் இயக்கலாம் என்ற ரீதியில் அணுகினோம் என்றால், அது
சிக்கலைத்தான் கொண்டு வரும். நீங்கள் கூறிய கதையில், தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு அந்தப்
பெரிய இயந்திரத்தைப் பற்றிய தெளிவு இல்லை. எனவே, அதில் பிரச்சினை வந்தபோது கையாளத்
தெரியவில்லை. அதைச் சரிசெய்ய வந்த நபருக்கு அந்த இயந்திரம் செயல்படும் விதம் தெரிந்திருந்தது.
எனவே, அவரால் பிரச்சினையை எளிதில் சரிசெய்ய முடிந்தது. இது இயந்திரத்திற்கு மட்டுமல்ல,
மனித வாழ்விற்கும் பொருந்தும்! வாழ்வு என்கின்ற மாபெரும் இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது
என்கிற தெளிவை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, கடவுள் ஒரு கையேட்டை நமக்குக்
கொடுத்துள்ளார். அவற்றையே நாம் ‘கட்டளைகள்’ என்று
அழைக்கின்றேம். ஓர் இயந்திரத்தைச் சரியாக இயக்குவதற்கென்று கையேடு இருப்பதுபோல, வாழ்வைச்
சரியாக வாழ கடவுளால் கொடுக்கப்பட்ட கையேடுதான் கட்டளைகள் என்பவை!”
மார்த்தா: “எனவே கட்டளைகளை ‘வாழ்க்கைக் கையேடு’ என்று அழைக்கலாம்.”
கிறிஸ்டினா: “தந்தையே! கட்டளைகளைப் பற்றிய புதிய
பார்வையாக இது தெரிகிறது. கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களேன்!”
அருள்பணி: “வாழ்க்கை இரண்டு நிலைகளில் இயங்குகிறது.
ஒன்று, மேலோட்டமான நிலை; மற்றொன்று, ஆழமான நிலை. மேலோட்டமான நிலையில் பார்க்கும்போது,
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தனித்தனியானவையாக, ஒன்றிலிருந்து மற்றவை மாறுபட்டவையாகத்
தெரிகின்றன. ஆனால், ஆழமான நிலையில் அவற்றின் தன்மை வேறு! அவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவையாக
இருக்கின்றன.”
அன்புச்செல்வன்: “நீங்கள் இதைக் கூறும்போது எனக்கு ஓர்
உதாரணம் மனத்தில் தோன்றுகிறது. ஒரு மரத்தை எடுத்துக்கொண்டோமென்றால் மேலோட்டமாகப் பார்க்கும்போது
அது தனியே இருக்கின்ற ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், கொஞ்சம் கூர்ந்து நோக்கினோம் என்றால்,
அது சுற்றியுள்ள எல்லாவற்றோடும் இணைந்து இருக்கிறது. மரத்தின் இலைகள் காற்றிலிருந்து
கார்பன்-டை-ஆக்ஸைடைப் பெற்றும், காற்றிற்கு ஆக்ஸிஜனைக் கொடுத்தும் காற்றோடு இணைந்திருக்கின்றன;
கிளைகள் சூரியனின் கதிர்களை உள்வாங்கி ஒளியோடு இணைந்துள்ளன; மரத்தின் வேர்கள் மண்ணோடும்
நீரோடும் இணைந்திருந்து, அவற்றிலிருந்து சத்துகளைப் பெறுவது மட்டுமல்லாமல், மண்ணுக்கு
உறுதித்தன்மையைத் தருகின்றன. மேற்கண்ட தொடர்பும் இணைப்பும் இல்லையேல் அந்த மரம் உயிரோடு
நீடிக்க முடியாது. இவ்வாறு மேலோட்டமாகப் பார்க்கும்போது, தனியே இருப்பதாகத் தெரிகின்ற
ஒன்று சுற்றியுள்ளவற்றோடு இணைந்தும் பிணைந்தும் இருக்கின்றது.”
அருள்பணி: “நல்ல உதாரணம்! இது மரத்திற்கு மட்டுமல்ல,
மனிதர்கள் உள்பட இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் பொருந்தும். இவ்வாறு இணைந்தும்
பிணைந்தும் இருப்பதையே நாம் ‘உறவு’ என்று அழைக்கின்றோம். எனவே, பிரபஞ்சத்தின்
அடிப்படைத்தன்மையே உறவு அல்லது அன்பு என்று கூறலாம். உறவி(வா)ல் மட்டுமே உயிர்கள் வாழமுடியும்
என்பது பிரபஞ்ச நியதி. எனினும், ஏராளமான மனிதர்கள் ஆழமான பார்வையோடு வாழ்வை அணுகுவது
கிடையாது. மேலோட்டமான பார்வை கொண்டு ‘நீ வேறு, நான் வேறு’ என்ற
மனநிலையோடு வாழ்கின்றனர். இத்தகைய மனநிலை மனித வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு
வருகிறது.”
அகஸ்டின்: “என்னென்ன பிரச்சினைகள் தந்தையே?”
அருள்பணி: “மேலோட்டமாக வாழும் நிலையே நம்மைப்
பாதிக்கும் பாவங்களுக்கான முக்கியமான காரணம் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
இத்தகைய மேலோட்டமான நிலை கொண்டுவரும் பிரச்சினைகள் குறித்து நாம் அடுத்தமுறை பேசலாம்.
இப்பொழுது நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், மேலோட்டமாக வாழும் மனிதர்களை ஆழமான
நிலை நோக்கி (அதாவது உறவை நோக்கி) நகர்த்துவதற்காகக் கொடுக்கப்பட்டவையே கட்டளைகள் என்பவை.
கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்துள்ள ‘பத்து கட்டளைகள்’ மனிதர்களை
உறவை நோக்கி நகர்த்துவதற்காகக் கொடுக்கப்பட்டவை. முதல் மூன்று கட்டளைகள் கடவுளோடுடனான
உறவை ஆழப்படுத்துவது குறித்தும், அடுத்த ஏழு கட்டளைகள் பிறரோடுடனான உறவை ஆழப்படுத்துவது
குறித்தும் பேசுகின்றன.”
மார்த்தா: “தந்தையே, இப்போது நீங்கள் கூறிய விளக்கத்திலிருந்து
பாவம் என்றால் என்ன என்பதற்கான ஒரு தெளிவு கிடைக்கின்றது. பாவம் என்பது மேலோட்டமான
மனநிலையோடு நமது தனிமனிதத்தன்மைகளுக்கு அதீத அழுத்தம் கொடுப்பதன் காரணமாக உறவிலிருந்து
அந்நியப்பட்டு வாழ்வதாகும்; கடவுளோடு உள்ள உறவில் இருந்தும், சகமனிதர்களோடு உள்ள உறவில்
இருந்தும் அந்நியப்பட்டு, நம் வாழ்வும் பிறர் வாழ்வும் சீர்கெட்ட நிலையாகும். இந்நிலை
மாறி மகிழ்வான வாழ்வு வாழ வேண்டுமென்றால், ஒரு மனிதர் கட்டளைகளின் பின்னணியில் தன்னையே
உறவிலிருந்து துண்டித்துக் கொண்ட நிலையிலிருந்து வெளியேறி மீண்டு வரவேண்டும். இதுவே
ஒப்புரவு என்பது. அப்படித்தானே?”
அருள்பணி: “ஆம்!”
(தொடரும்)