வாக்கிற்கு இலஞ்சம் என்பதைப் போல, பீகாரில் உள்ள 1.27 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 வழங்கப்பட்டன. விளைவு - பா.ச.க. மற்றும் ஐக்கிய ஜனதாதளக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றிருக்கிறது. இது வெறும் தேர்தல் வெற்றி அல்ல; மக்களின் அடிப்படை வறுமையையும் உடனடித் தேவைகளையும் மூலதனமாக்கி, மதவாதிகள் பெற்ற ‘வியூக’ வெற்றியாகும். சமூக நீதி, உழைக்கும் மக்களின் நலன், மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால்தான் இந்தத் தேர்தல் முடிவுகள்.
ஆளும்
வர்க்கத்தின் மிக நுட்பமான, அதிகாரத்தை அபகரித்துக்கொள்வதற்கான சூழ்ச்சியை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் மக்கள்நலத் திட்டங்களை (இலவசங்களை) ‘சோம்பேறிகளை உருவாக்கும் திட்டம்’ என்று ஏளனம் செய்தனர் பா.ச.க.வினர். ஆனால், அதே மக்கள்நலத் திட்டங்களைத் தனது பிரதான தேர்தல் ஆயுதமாகக் கையாண்டு, பீகாரில் வெற்றியை வசப்படுத்தி இருக்கிறது பா.ச.க.
ஆம்!
பீகாரில் அதிகாரம் வென்றிருக்கிறது. மக்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் ஆர்.ஜே.டி. தலைமையிலான
‘இந்தியா’ கூட்டணி
ஏற்கெனவே வைத்திருந்த 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளை இழந்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சென்ற இடமெல்லாம் இலட்சோப இலட்சம் மக்கள் கூடினார்கள். வாக்குத் திருட்டுப் பிரச்சாரம் நாடு முழுக்கப் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. 65 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் சகல தில்லு முல்லுகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களிடையே பல கேள்விகளை எழுப்பின.
மாநிலத்தில்
இளையோருக்கு வேலைவாய்ப்பு இல்லை; தொழில் வளர்ச்சி இல்லை; கல்வியில் முன்னேற்றம் இல்லை; பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை... இப்படி பீகாரைக் கடந்த இருபது ஆண்டுகளாக ‘பித்துக்குளித்தனமாக’ வழிநடத்திய
நிதிஷ் குமாரை மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்திருக்கிறார்கள் அம்மாநில மக்கள்.
‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மாநிலத்தின் அவலநிலை குறித்து பீகாரின் ஒவ்வொரு தெருவெங்கும் பிரச்சாரம் செய்தார்கள். மக்களும் ஆரவாரம் செய்து அதை ஒப்புக்கொண்டார்கள். ஆனால், அது வாக்குப்பதிவின்போது பிரதிபலிக்கவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது இருந்த மக்களின் அமோக வரவேற்பு வாக்குகளாக மாறாமல் போனது.
இந்த ஆரவாரமும் ஆதரவும் ஏன் வாக்குகளாக மாறாமல் போனது? கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லையா? அல்லது ஒருங்கிணைப்பு இல்லையா? அரசுத் துறைகளின் மீது அகலக் கால் விரித்து அமர்ந்து கொண்டு, அசுர பலம் காட்டிவரும் பா.ச.க.வை வீழ்த்த மதச்சார்பற்ற,
சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் இயக்கங்கள், கட்சிகள் தங்களது அடித்தளத்தை மேலும் உறுதியாக்கவேண்டுமா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு
விடை காண வேண்டிய கட்டாயத்திற்கு எதிர்க்கட்சிகளைத் தள்ளி இருக்கிறது பீகார் தேர்தல் முடிவு.
‘பீகாரில் நேர்ந்ததுதான் இங்கும் நிகழும். அரியானாவில் நிகழ்ந்ததுதான் இங்கும் அரங்கேறும். மராட்டியத்தில் ஏற்பட்ட அரசியல் முடிவுதான் தமிழ் நாட்டிலும் நிகழும்’ என்று அ.இ.அ.தி. மு.க.வினரும்
பா.ச.க.வினரும்
ஆருடம் கூறி வருகிறார்கள். ஜனநாயகப் படுகொலைக்கு எஸ்.ஐ.ஆர். போன்ற
கூர்தீட்டிய கத்திகளைக் கைகளில் ஏந்தியவாறு அ.தி.மு.க.வும் பா.ச.க.வும்
களத்தில் இருக்கின்றன. சிறுபான்மையின மக்களோ, தங்களுக்கு எதிரானவர்கள்…யாராக
இருந்தாலும் அவர்களைக் கூறுபோட்டு, அவர்கள் வாழ்ந்ததற்கான சுவடே இல்லாமல் செய்துவிட துணிந்துவிட்டன அதிகாரப் போதை ஏறிய அதிகார சக்திகளும், சதிகார அடிமைக் கும்பலும்.
நண்பர்களே,
நாம் ஏமாந்துவிடக்கூடாது. பீகார்
தேர்தல் முடிவு, நமக்கான எச்சரிக்கை மணி! விழித்துக்கொள்வோம்!