திருப்பலி முன்னுரை
ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவில் அன்பானவர்களே, அன்னையாம் திரு அவையோடு இணைந்து உங்கள் அனைவரையும் ‘இயேசு கிறிஸ்து உலகிற்கெல்லாம் அரசர்’ என்ற மாபெரும் விழாவிற்கு அன்போடு வரவேற்கிறோம்.
நம்
அரசரான இயேசு கிறிஸ்துவின் ஆட்சியானது இடத்தைச் சார்ந்த ஆட்சியோ, அதிகாரத்தைக் கொண்ட ஆட்சியோ, பதவிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சியோ அல்ல; மாறாக, அது இதயங்களைச் சார்ந்த, அன்பையும் பரிவிரக்கத்தையும் அடித்தளமாகக் கொண்ட ஆட்சி. கிறிஸ்துவின் ஆட்சி சமத்துவத்தையும் அமைதியையும் நீதியையும் விரும்பும் ஆட்சி. அவரது ஆட்சி தம் ஆடுகளுக்காய் உயிரையும் கொடுக்கும் ஆட்சி.
இத்தகைய
மாபெரும் அரசரின் விழாவில் பங்குபெற இறைவன் கொடுத்த அழைப்பிற்காய் நன்றிகூறுவோம். அகில
உலகின் அரசராகிய இயேசுவின் பிள்ளைகளாகிய நாம் உலகப் போக்கின்படி வாழாமல், நம் தலைவராம் இயேசுவைப் போன்று கனிவும் மனத்தாழ்மையும் உடையவர்களாய், பணிவிடை புரிபவர்களாய், மன்னிப்பைக் கொடுப்பவர்களாய், நீதியை விதைப்பவர்களாய், குறிப்பறிந்து கொடுக்கும் நல்ல ஆயனாய் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
இஸ்ரயேல்
மக்களை வழிநடத்த ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்ட தாவீது ஆண்டவருக்குப் பணிந்து பணிபுரிகின்றார். நாமும் அருளடையாளங்கள் வழியாக ஆண்டவருக்குப் பணிந்து, இச்சமூகத்திற்கு மகிழ்ச்சியையும் அன்பையும் கொடுக்கும் பிள்ளைகளாய் வாழ்ந்திட அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
இயேசு
மீட்பராகவும் மெசியாவாகவும் கடவுளின் மகனாகவும் நல்ல ஆயனாகவும் சிறந்த அரசராகவும் பாவங்களைப் போக்கும் செம்மறியாகவும் இருந்து,
தலைமைத்துவத்தின் மகத்துவத்தை விதைத்துள்ளார். அவரது பாதுகாப்பில் வாழும் நாம், அவரது தலைமைத்துவத்தை நமதாக்கிட அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. நல்ல
ஆயனே எம் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உமது அடிச்சுவடுகளைத் தன்வயமாக்கிடவும், மக்களின் தேவை அறிந்து செயல்படவும் தேவையான அருள் வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அமைதியின்
அரசரான ஆண்டவரே! எம் நாட்டு தலைவர்கள் அனைவரும் போட்டி, பொறாமை, சுயநலம் அகற்றி மக்கள் நலனில் அக்கறை கொண்டு நல்ல தலைவர்களாய் வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்பின்
அரசராகிய இயேசுவே! எம் குடும்பங்கள் அனைத்தும் உலகின் அரசராகிய உம்மீது நம்பிக்கை கொண்டு வாழவும், உன்னதராகிய உம் பாதையில் சோர்வின்றிப் பயணிக்கவும், தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. நீதியின்
அரசராகிய ஆண்டவரே! இவ்வுலகில் வாழும் இளையோர் தொலைத்தொடர்புக் கருவிகளிலும் நுகர்வுக் கலாச்சாரத்திலும் தொலைந்து போகாமல், உம் மதிப்பீடுகளின் வழியில் வாழ தேவையான வரங்களைத் தந்து காத்திட
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.