எது துக்கச் சேதி?
பிறப்பு
மகிழ்வான செய்தி! இறப்போ துக்கச் செய்தி! நமக்குத் தெரியும், பிறப்பவர் கண்டிப்பாக இறந்தாக வேண்டும் என்று. பிறப்பின் முடிவு இறப்பிலுள்ளது. அப்படியென்றால், இறப்பு பிறப்பின் மகுடம்தானே! மகுடம் சூட்டும் நாளை மகிழ்வான நாளாகக் கொண்டாடுவதுதானே இயல்பு! அப்படியெனில், இறப்பில் நம்மில் பலர் அழுகிறோம், புலம்புகிறோம், ஏன் ஒப்பாரி வைக்கின்றோம்? இறப்பு அன்பை முறித்துவிடுவதாலா? ஏன், இறப்பிற்குப் பின்பும் நீ
அன்பு செய்யலாமே! ஒருவேளை இறந்தவரைக் காண முடியாது, அவரோடு பேச முடியாது, அவரின்றிக் குடும்பம் பொருளாதாரத்தில் சிதைந்துவிடும், அவரின்றி மறுபடியும் தலை தூக்குவது கடினம் என்ற நினைவுகள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துவதாலா?
இறப்பும் சோகமும்
மனித
இயல்பில் இறந்தவர் மாயமானவர் போலாகிறார். அவரில்லாது தலை தூக்குவது கடினம். அதிலும் கணவன் இளம் வயதில் இறந்துவிடின், மனைவி ‘விதவை’ எனக் கணிக்கப்படுவதும், அது அவளுக்கு வந்த சாபம் எனக் கூறுவதும், பூவும் பொட்டும் வைக்க அனுமதி மறுப்பதும் நம் சமூகம் செய்யும் அபத்தம். பல நல்ல நிகழ்வுகளில்
அவர்கள் அழைக்கப்படுவதில்லை. அவர்கள் பிரசன்னமே அபசகுனமாகக் கருதப்படுகிறது. இறப்பு தரும் வேதனைகள் சொல்லிலடங்கா!
இன்னும்
ஒருசிலரது இறப்பு நல்லதாகப் பார்க்கப்படுகிறது. பல குடும்பங்களில் அப்பா
- குடிகார மனிதன், அடித்துத் தொல்லை தருகின்ற மனிதன் இறந்துவிட்டான் என்று ஆறுதல் அடைகிறது. சமுதாயமும் இம்மனிதன் தொல்லை எனக்கூறி தம்மைச் சமாதானப்படுத்திக்கொள்கிறது.
இறப்பு விடுதலையா?
ஆனால்,
இறப்பு சாபமா? அல்லது இழப்பா? அல்லது சோகமா? வாழ்வின் இரு பாகங்கள்தான் பிறப்பும் இறப்பும். ஒளியில் மட்டுமல்ல, இருளிலும் நன்மையுண்டு. மகிழ்வில் மட்டுமல்ல, துன்பத்திலும் நன்மையுண்டு. உடல் நலனில் மட்டுமல்ல, நோயிலும் நன்மை உண்டு. உண்மையில் துன்பத்திலிருந்துதான் பல பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்.
நோயுறும்போதுதான் அயலாரின் நோயின் கனாகனம் தெரியும். நாம் அவரைப் புரிந்துகொள்ள நல்ல தருணம் அதுதான். ஒளி நல்லது; ஆனால், இருள் நல்லதல்ல என்று யார் கூறினது? ‘இருளிலிருந்து ஒளிக்கும்’
எனும்போது இருளைத் துயரத்திற்கும், ஒளியைத் துயரத்திலிருந்து பெறுகின்ற
விடுதலைக்கும் ஒப்பிடுகிறோம்.
இருளின் பொருள்
பகலில்
பார்க்க முடியாத நிலவை இருளில் பார்க்கிறோம். அவ்வாறே விண்மீன்களைப் பார்க்கிறோம். இரவில் நிசப்தமான அந்தப் பொழுதில் எழுதுகிறோம், சிந்திக்கிறோம், நிம்மதியாகத் தூங்குகிறோம். இருளில் பயணம் செய்து காலையில் வேலைக்குப் போகிறோம். இரவில்தான் பலவற்றைக் கண்டுபிடிக்கிறோம்.
இயேசுவும்
துன்பங்கள் பற்றியும், பாடுகள் பற்றியும், அவரது இறப்பு பற்றியும் முன்மொழிகின்றார். இறப்பு மீட்பின் சாரமாகவும், பாவங்களை மன்னிக்கும் ஆற்றல் உடையதாகவும் காண்கின்றார் (மாற் 8:31). பேதுரு இந்தக் கருத்தையும் சிந்தனைகளையும் ஒத்துக்கொள்வதில்லை. அவர் இயேசுவைத் தனியே அழைத்து அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார். இயேசு, “என் பின்னாலே போ, சாத்தானே! நீ கடவுளுக்கு ஏற்புடையதை
எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவற்றைப் பற்றியே சிந்திக்கிறாய்” என்று
கடிந்துகொண்டார் (மாற் 8:32-33; மத் 16:21-28; லூக்கா 9:22-23).
தவறு
செய்யும் மனிதன் முழுவதும் தீயவனல்ல; அவன் மனம் திரும்பிப் புனிதனாகலாம். தீமை என்று நாம் கருதும் பலவை நன்மைத்தனத்திற்கு வாய்க்காலாக அமைகின்றன. நீதிமானிலும்
கறையுண்டு, பாவியிலும் நன்மைத்தனம் உண்டு. இரண்டும் கலந்ததுதான் மனிதம் அல்லது மனித வாழ்வு.
உதிரும் இலை
இப்போது
இறந்தோரைப் பற்றிச் சிந்திப்போம். கவிஞர் வைரமுத்து உதிரும் இலை பற்றி மிக ஆழமாக எழுதுவது நமக்கு உதவியாக இருக்கலாம். உதிர்ந்து வாடி கீழே விழப்போகும் இலையின் உற்சாகமான வார்த்தைகளைக் கவனிப்போம்:
‘உயிரின் கடைசி இழையில்
ஊசலாடி
நிற்கிறேன்.
உரசும்
காற்று உணர்ச்சிவசப்பட்டாலோ
முத்து
மழைத்துளியென்பது
மூக்கில்
விழுந்தாலோ
என்
கிளையில் ஒரு பறவை
சில்லென்றமர்ந்து
சிறகடிக்கும் அதிர்ச்சியிலோ
நான்
விழுந்து விடுவேன்
இந்தச்
சாவை முன்னிட்டு
என்னை
மன்னித்துவிட்டன சக இலைகள்
பிறந்த
நாள் முதல்
பிரிந்திருந்த
தாய்மண்ணை
முதன்
முதலில் முத்தமிடப் போகிறேன்.
அப்படியானால்
வாழ்வு குறைகுடமா?
சாவு
நிறைகுடமா?
வாழ்வு
தராத வரம் ஒன்றைத்
தாய்மண்ணே
நீ வழங்கவந்தாய் எனக்கு!’
என்று
எழுதும் இக்கவிஞர் மற்றொரு நிலைக்கு நம்மை அழைத்துச்செல்கிறார்.
இயேசுவும் கல்லறையும்
இயேசுவின்
சாவும் இந்த நிறைவை அறிவிக்கிறது. “எல்லாம் நிறைவேறிற்று” என்ற
கூற்று அவரது பணியின் சாரத்தை அறிவுறுத்துகிறது. இறப்பில் பணியின் நோக்கம் வெற்றிகரமாக நிறைவுபெறுகிறது. இயேசுவின் இறப்பு நமது மீட்பாக அமைகிறது. கிறிஸ்துவில் அனைவரும் உயிர்த்தெழுவர் (1கொரி 15:22,23). இறப்பின் வழியாக நாமும் மாற்றுரு பெறுவோம், அழியாமையையும் சாகாமையையும் அணிவோம் (1கொரி 15: 52-56). இயேசுவின்
சாவு சாவையும் வென்றது; பாவத்தையும் வென்றது (1கொரி 15:54-55).
எனவே,
கல்லறைகள் நம்பிக்கையின் அடையாளங்கள். உயிர்த்தெழுதலை நினைவூட்டும் சின்னங்கள். நமது முன்னோர்கள் துயில்கொள்ளும் இடம். உறவு ஒன்றிப்புக்கான தோட்டம்.
“இறப்பு விண்ணக மாளிகையைத் திறக்கும் தங்கத் திறவுகோல்”
என்று ஜான் மில்டன் கூறுகிறார்.
‘சமரசம் உலாவும் இடமே!
பேதமில்லாமல்
எல்லாரும்
முடிவில்
சேர்ந்திடும் காடு;
தொல்லையின்றியே
தூங்கிடும் வீடு;
ஆவிபோனபின்
கூடிடுவார் இங்கே!’
என்ற
கல்லறை குறித்த பாடல் எப்போதும் காதுகளில் ஒலிக்கட்டும்.