“யாரை நான் அனுப்புவேன், என் மக்களின் விடுதலைக்காய்?” என்ற இறைவனின் குமுறலைக் கேட்டு, “இதோ நான் இருக்கிறேன்” என்ற வேட்கையோடு 250 ஆண்டுகளுக்கு முன்பு விடிவெள்ளியாய், அக்கினிச் சுடராய், விதையின் விருட்சமாய்ப் பல இயற்கைப் பேரிடர்களின் இதயமாய் 1775-இல் பாண்டி மண்ணில் தடம்பதித்தவர்தான் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ.
கிழிந்த
ஆடையும், சீக்கும் சிரங்கும் மனித முகவரியற்ற முகமும் அடிமைத்தனமும் ஆதரவற்ற நிலையும் சாதியத்தாண்டவமும், பெண்களின் அவல நிலையும் ஏழை-பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வும், கைவிடப்பட்ட குழந்தைகளின் கதறலும் எம் கொன்சாகா சபை நிறுவுநரைத் தூக்கமில்லாமல் செய்ததன் இறைவெளிப்பாட்டின் உதயமே கொன்சாகா ஆதரவற்றோர் இல்லம் (மடம்).
ஆதரவற்றோர்
இல்லமாக புதுவை மண்ணில் ஊன்றப்பட்ட விதை பல முன்னோர், அன்னையர்,
சகோதரிகளின் வாழ்வால், பணியால், வியர்வையால், செந்நீரால் இன்று தழைத்து, செழித்து, பெரிய ஆலமரமாக வளர்ந்து, உலகின் பல இடங்களில் பணியாற்றி
வருவதைக் கண்டு மகிழ்கின்றோம்.
250 ஆண்டுகள் நீண்ட
நெடிய வரலாற்றைக் கொண்ட எம் சபையின் 25 ஆண்டுகள் கொன்சாகா சபையின் துறவிகளாக நாங்கள் பயணித்து இருக்கின்றோம் என்பதை நினைத்து அழைத்த இறைவனுக்கும், உருவாக்கிய சபைக்கும் நன்றி கூறுகிறோம். 25 ஆண்டுகளில் அன்பையும் அரவணைப்பையும் அர்ப்பணத்தையும் அறிவாற்றலையும் அறநெறிகளையும் அரசியலையும் ஆன்மிகத்தையும் ஆளுமையையும் கலை இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் சரித்திரத்தையும் சமத்துவத்தையும் சபைப் பற்றையும் சகிப்புத்தன்மையையும் மனிதர்களையும் மதநல்லிணக்கத்தையும் மனிதத்தையும் மதிக்கும் பண்பையும் உண்மை உழைப்பையும் உதவி செய்யும் குணத்தையும் தைரியத்தையும் தன்மானத்தையும் விவேகத்தையும் விருந்தோம்பல் பண்பையும் கற்றுக்கொடுத்து, வளர்த்தெடுத்தது மட்டுமல்லாமல், சபையின் பல பொறுப்புகளைக் கொடுத்து,
மறையறிவு-இறையறிவோடு உலகறிவை ஊட்டி எங்களைப் பீனிக்ஸ் பறவைகளாய்த் திரு அவைக்கும் உலகிற்கும் அளித்தவர்தான் எம் கொன்சாகா தாய்!
250-வது யூபிலி
கொண்டாட்டத்தில் தங்களின் தியாகம் நிறைந்த வாழ்வால் வாழ்ந்து காட்டி, எங்களை அழகாக வளர்த்தெடுத்து, அற்புதமான வேட்கையை உணவாக ஊட்டி, சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களுக்காக உயிர் உள்ளவரைப் பணியாற்ற வேண்டும் என்ற உணர்வைத் தந்த அத்தனை பேருக்கும் நன்றி கூறுகிறோம். துறவிகள் என்பதைவிட பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா துறவிகள் என்பதில் மகிழ்கின்றோம்.
இறையாட்சிப்
பாதையில் ஏழை மக்களுக்காகவே பணியாற்றி, ஒளிரும் தீபங்களாய் எம் சபையின் சகோதரிகள் திகழ, தூய ஆவியின் துணையை வேண்டி நன்றியோடு வாழ்த்துகிறோம்.
நன்றியுடன்
வாழ்த்திடும்
2025-2026-இல் வெள்ளி
விழா காணும்
கொன்சாகா அருள்சகோதரிகள்