திருப்பலி முன்னுரை
அன்பானவர்களே! இன்று
நாம் தூய இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் இறைவனின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட நாம், இறைமையை வெளிப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். நம் உடல் இறைவன் வாழும் இல்லம். ஊழியூழி காலமாகத் திரு அவையின் வழிகாட்டுதலாலும், திருமுழுக்கு, ஒப்புரவு,
நற்கருணை போன்ற அருளடையாளங்கள் வழியாகவும், கிறிஸ்துவின் உடலாலும் இரத்தத்தாலும் நம் உடலே இறைவனின் இல்லமாக அர்ச்சிக்கப்பட்டுள்ளது. இறைவனின்
இல்லமாகிய இந்த உடலின் புனிதத்தை மாசுபடாமல் பேணிக்காப்பதும், பெற்ற அருளை வீணாக்காமல் பாதுகாப்பதும் நம் கடமையாகும். நம் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் பார்வையாலும் உள்ளம் என்னும் ஆலயத்தை மாசுபடுத்தாமல் பாதுகாப்போம். நமது இதயத்துடிப்பாக இருந்து நம்மை இயக்குவிக்கின்ற தூய ஆவியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழ்வோம். நம் உடல் என்னும் ஆலயத்தை
அன்பு, அமைதி, சமத்துவம். சகோதரத்துவம், உண்மை, நீதி, நேர்மை, மன்னிப்பு போன்ற மதிப்பீடுகளால் அழகுசெய்வோம். நம்மிலும் மற்றவரிலும் வாழ்கின்ற இறைவனைக் கண்டுகொள் வோம். நாம்
அமர்ந்திருக்கும் இந்த ஆலயத்தையும் நமது உள்ளத்தையும் அமைதி என்ற புண்ணியத்தால் பாதுகாத்து, ஆலயத்தின் மகத்துவம் அறிந்து கடவுளை அனுபவித்து வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
ஆலயம்
என்பது ஆண்டவன் வாழும் தூய
இல்லம். இந்த ஆலயத்தை நோக்கி வருகின்றபோது திருச்சிலுவையிலிருந்தும் நற்கருணையிலிருந்தும் அன்பையும் அருளையும் ஆசிரையும் பெற்றுக் கொள்கிறோம். இறைவனின் அருள் வழிந்தோடும் இந்த ஆலயத்தில், அவர் அருளைப் பெற்று இறைவனுக்குச் சான்றுபகர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
நாம்
அனைவரும் கடவுள் எழுப்பும் கட்டடம். இயேசுவே இக்கட்டடத்திற்கு அடித்தளமாய் இருக்கின்றார். நம் உடலுக்கு உயிராக இருக்கின்ற தூய ஆவியின் குரலுக்கு அன்றாடம் செவிகொடுத்து வாழும்போது, நமது வாழ்க்கை சான்றுபகரக்கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை. இறைவனின் கோவிலாகிய நாம் நம்முள் இருக்கும் இறைவனைக் கண்டுகொள்ள அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. ‘நானே உங்களைத்
தேர்ந்து கொண்டேன்’
என்று மொழிந்த ஆண்டவரே! திரு அவையை வழி நடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், இல்லறத்தார் அனைவரையும் உமது தூய ஆவியினால் தூய்மையாக்கிக் காத்திட வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
2. எம்மோடு
வாழ்கின்ற ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், மக்கள் என்ற சொத்தைப் பேணிக்காக்கவும் தேவையான ஞானத்தையும்
விவேகத்தையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்பான
ஆண்டவரே, இறைமக்களாகிய
நாங்கள் ஒவ்வொருவரும் இறைவன் குடியிருக்கும் இல்லம் என்பதை உணர்ந்தவர்களாய் தூய உள்ளத்தோடு வாழ தேவையான அருள்வரங்களைத் தந்து காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எம்
வாழ்வின் அடித்தளமே இறைவா! சோர்ந்து போன இதயங்களுக்கு ஆறுதலளிக்கும் உமது வாழ்வு தருகின்ற வார்த்தையான நீரூற்றைக் கண்டுகொள்ளவும், அந்த நீரைப் பருகி, அதில் நிலைத்திருந்து நிலைவாழ்வுக்குக் கடந்து
செல்லக்கூடிய வழியை எமக்குக் காட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.