அண்மையில், நவம்பர் 17 தொடங்கி 21-ஆம் தேதி வரை துபாயில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் பங்கேற்ற இந்தியாவின் உள்தயாரிப்பான ‘தி தேஜாஸ்’ போர் விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விமான விபத்தில் இமாச்சலபிரதேசம் காங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த விமானி விங்கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார்.
2011-ஆம் ஆண்டு
இந்திய விமானப்படையில் சேர்ந்த இவர், பல்வேறு கடமைப்பணிகளில் தைரியமாகச் செயல்பட்டு, கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விமான சாகசப் பிரிவில் பணியாற்றினார். விங் கமாண்டர் நமன்ஷ் சியால் இந்திய விமானப் படையில் சிறந்த வீரராகவும் திறமையான விமானியாகவும் கருதப்பட்டவர். இவர் கோவை சூலூர் விமானப்படை
தளத்தில் எண். 45-ஸ்குவாட்ரன் (பிளையிங் டாகர்ஸ்) பிரிவைச் சேர்ந்தவர். மேலும், அவர் ஏரோ இந்தியா மற்றும் பல ஏர் ஷோக்களிலும்
தனது திறமையை வெளிப்படுத்தியவர். இவரது மனைவியும் தற்போது விமானப்படை தொடர்பாக மேற்படிப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. நமன்ஷ் சியாலின் தந்தை ஜெகநாத் சியால், இராணுவ மருத்துவப் பிரிவில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் கல்வித்துறையில் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
துபாயில்
உயிரிழந்த இராணுவ வீரரின் உடல், துபாயிலிருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு கோவை மாவட்ட கலெக்டரும், போலீசார் மற்றும் விமானப் படையின் உயர்ந்த அதிகாரிகளும் திரண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின்
மற்றும் பல தலைவர்கள் தனது
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இவரது
இறுதி மரியாதை நிகழ்ச்சியில் மனைவி மற்றும் மகளுடன் அவரது குடும்பத்தினர், இராணுவப் பணியாளர்கள் கலந்துகொண்டு அவரது மீதான மரியாதையைச் செலுத்தினர். மிகவும் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இவர், இந்திய விமானப் படையின் வரலாற்றில் என்றும் ஒளிரும் முகமாகத் திகழ்வார்.