news-details
ஞாயிறு மறையுரை
டிசம்பர் 14, 2025, திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு (முதல் ஆண்டு) எசா 35:1-6,10; யாக் 5:7-10; மத் 11:2-11 - ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்!

ஒவ்வொரு மனிதச் செயலின் அடிப்படை இலக்காக இருப்பது மகிழ்ச்சியே! “மகிழ்ச்சிக்குப் பாதை இல்லை, மகிழ்ச்சியே பாதைஎன்பார் புத்தர். “நம் வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பதுதான்என்கிறார் தலாய் லாமா. மகிழ்ச்சி என்பது ஒருவரின் வெற்றியையும் தோல்வியையும்- நன்மையையும் தீமையையும் சார்ந்ததல்ல; அது மனம் சார்ந்த உணர்வுநிலை. அனைத்தையும் கடந்து வாழும் இறைவனில் ஒருவர் இணைந்துள்ளதால் ஏற்படும் சலனமற்ற உணர்வுநிலை. கிறிஸ்துமஸ் விழாவிற்கு இன்னும் பத்து நாள்கள் இருக்கும் இவ்வேளையில், நாம் மகிழ்ச்சியில் திளைக்கவும், அதில் ஆழப்படவும் திரு அவை இன்று நம்மை அழைக்கின்றது.

இன்று திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு. இந்த ஞாயிறைGaudete Sundayஅதாவது, ‘மகிழும் ஞாயிறுஎன்று கொண்டாடுகிறோம். மனித சமுதாயம் என்ற குடும்பத்தில் இறைவன் ஒரு குழந்தையாய்ப் பிறக்கவிருப்பதை மகிழ்வுடன் நாம் எதிர்பார்க்க இன்றைய ஞாயிறு நம்மை அழைக்கிறது.

இன்றைய வழிபாட்டின் தொடக்க வருகைப் பல்லவியில் இடம் பெறும் புனித பவுலின் வார்த்தைகள்: “ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார் (பிலி 4:4-5). ‘மகிழ்வு என்றால் என்ன?’ கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நெருங்கிவரும் இவ்வேளையில், மகிழ்வு கண்ணைக் கவரும் வெளிப்புற அலங்காரங்களிலும் ஆடம்பரங்களிலும் இருப்பதாக வர்த்தக உலகம் நம்மீது திணிக்க முயலும் தவறான எண்ணங்களில் விழாமல், இயேசு காட்டும் வழியில் பயணிக்கும்போது அகமகிழ்ச்சி ஏற்படும் என்பதை இன்றைய மூன்று வாசகங்களும் கற்றுத்தருகின்றன.

இரண்டாம் எசாயா பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், மெசியா காலத்தில் நிகழ இருப்பவை எவை என்பன குறித்து முன்னறிவிக்கின்றன. அசீரியப் படை யூதாமீது படையெடுத்து வந்த பொழுது, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, வேற்று நாட்டினரான எகிப்தியரின் உதவியை நாடினார்கள். யாவே ஆண்டவரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்காதது அவர்கள் செய்த குற்றம். மேலும், தாங்கள் ஆண்டவரோடு நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார்கள். ஆனால், உண்மையில் அவ்வாறு இல்லை. அவர்களுடைய வழிபாடுகள் வெறும் வெளிவேடங்கள்தாம். எனவேதான் ஆண்டவர் அவர்களைக் கண்டிக்கிறார் (எசா 29:13-14). ஆண்டவருடைய கண்டிப்பு என்பது அவர்களை அழிப்பதற்காக அல்ல; மாறாக, அவர்கள் இறைவன் பக்கம் திரும்பி வருவதற்காகவே.

நம்பிக்கையில்லாத தன்மை, கடவுளால் கைவிடப்பட்ட உணர்வு, அரசரின் துரோகம், அரசின் பலவீனம், அசீரியரின் அச்சுறுத்தல் மற்றும் வட அரசான இஸ்ரயேலின் அழிவு, இவற்றிற்கு மத்தியில் சீயோனின் மேன்மைமிகு வருங்காலத்தைப்பற்றி எசாயா எடுத்துரைக்கிறார். வருங்காலத்தில் எருசலேமுக்கு ஆண்டவருடைய மீட்பு உண்டு என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறார். பாலைநிலம் போல் ஆகிவிட்ட ஏதோமில் மறுபடியும் வாழ்வு துளிர்க்கும்; அமைதி திரும்பும்; மனிதர்களின் மனம் மகிழ்ச்சியால் நிரம்பும் (எசா 35:1-2) என்ற நம்பிக்கை அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

பார்வையற்றோர் பார்வை பெறுவர், காது கேளாதோர் கேட்பர், கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக் குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்என எசாயா முன்னறிவித்துள்ள வாக்குகள் (35:5-6), மெசியாவின் காலத்து அடையாளங்கள். எசாயாவின் இந்தக் கனவு இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகிறது. மேலும், ‘ஒடுக்கப்பட்டோரின் நிலை மாறும். மக்கள் ஆண்டவரிடம் திரும்பி வருவர்; அவரில் அகமகிழ்வர். அன்பும் அமைதியும் நீதியும் நேர்மையும் கொண்ட ஒரு புதிய சமுதாயம் உருவாகும் (29:17-19) எனும் எசாயாவின் வாக்குகள் இயேசுவில் நனவாகின்றன. இதை நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.

திருமுழுக்கு யோவான் தனது இறைவாக்குப் பணியின் விளைவாகச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன் சீடரை இயேசுவிடம் அனுப்பி இயேசுவின் பணியைப் பற்றி உறுதி செய்துகொள்கிறார். “வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்கவேண்டுமா?” (மத் 11:3) எனும் திருமுழுக்கு யோவானுடைய சீடர்களின் கேள்வி, திருமுழுக்கு யோவான் இயேசுவை அறியாததாலோ அல்லது நம்பாததாலோ எழுந்ததல்ல; மாறாக, தன்னுடைய சீடர்களே இயேசுவின் உண்மை நிலையைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் எனப் புரிந்துகொள்ளலாம். இயேசு சீடர்களின் கேள்விக்கு வெளிப்படையாகப் பதில் கூறாமல், மெசியாவின் பணிகளைப் பற்றி ஏற்கெனவே கூறப்பட்ட இறைவாக்கின் நிறைவே தமது பணி என்று பேசுகிறார் (எசா 35:5-6). அதாவது, தம் வல்ல செயல்களால் நோயுற்றோர் நலம்பெறுவதே தமது நற்செய்திப் பணி என்று கூறுகிறார்.

யோவானின் சீடர்கள் சென்றபின் இயேசு யோவானைப் பாராட்டிப் பேசுகிறார். நாணலும் மெல்லிய ஆடைகளும் திருமுழுக்கு யோவான் வாழ்ந்த யோர்தான் பாலைநிலத்தையொட்டிய அரச மாளிகைச் சொகுசுகளின் அடையாளங்கள். ஆனால், யோவானுக்கு இவற்றில் ஈடுபாடு இல்லை (மத் 11:8). அவர் அரச மாளிகையைக் கண்டித்து இறைவாக்கு உரைத்தவர் (11:9). மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தவர் (11:10). அவர் இயேசுவின் முன்னோடி என்ற காரணத்தால் இறைவாக்கினருக்கும் மேலானவர். இதனால் அவர் மனிதருள் சிறந்தவர் (11:11) என இயேசு திருமுழுக்கு யோவானைக் குறித்துச் சான்று பகர்கிறார்.

திருமுழுக்கு யோவான்தான் வரவேண்டிய எலியா என மக்கள் கருதி, அவரை அவர்கள் தேடி வந்தபோது, அத்தருணத்தைத் தனக்கு ஏற்றதாக்கிக் கொண்டு, பெயரும் புகழும் பெறுவதற்குப் பதில், தான் உலக மீட்பர் அல்லர்; அந்த மீட்பர் வரும் வழியைக் காட்டும் கைகாட்டி மட்டுமே என்பதைத் திருமுழுக்கு யோவான் வெளிப்படையாகக் கூறினார். நெருக்கடி, அடக்குமுறை, கைது, கொலை இவற்றிற்கு மத்தியிலும் ஆண்டவருக்குள் இணைந்து வாழ்பவரால் மகிழ்ந்திருக்க முடியும் என்பதற்குத் திருமுழுக்கு யோவான் சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு கூற விளையும் செய்தியும் இதுதான். ஆங்கிலத்தில்பர்ன் அவுட் (burn Out) என்ற ஒரு சொல் உண்டு. ஒரு நபர் நிறைய வேலைகள் செய்ய முயன்று மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் சோர்ந்து வீழ்வதை அல்லது உடலும் மனமும் பாதிக்கப்படுவதைக் குறிக்கும் சொல் இது. எப்போதுமே பரபரப்பாக வாழும் நம்மை, சற்று நிதானமாகச் செயல்பட்டு, பொறுமை, அன்பு, நம்பிக்கை ஆகிய பண்புகள் நம்மை மகிழ்விற்கு இட்டுச்செல்கின்றன என்கிறார் யாக்கோபு.

தொடக்கத் திரு அவை வேதகலாபனை மற்றும் நெருக்கடியை அனுபவித்த வேளையில் எழுதப்பட்ட இந்நூல் பொறுமையோடு இருந்து இயேசுவை ஏற்றுக்கொள்வதா? அல்லது உலகத்தோடு சேர்ந்து இயேசுவை மறுதலிப்பதா? என்ற முக்கியக் கேள்விக்கு விடையளிக்கிறது. “பொறுமையோடிருங்கள்; உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள்; ஏனெனில், ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது (யாக் 5:8) என யூதக் கிறித்தவர்களைத் திடப்படுத்துகிறார் யாக்கோபு. அவரின் போதனை நமக்கும் பொருந்திச்செல்லும்.

ஒருவர் துன்புறுத்தப்படும்போது முதலில் இழப்பது பொறுமையே. தொடக்கக் காலத் திரு அவை தனது வேதகலாபனைக் காலங்களிலும் முதலில் இழந்தது பொறுமையே. அதனுடைய நீட்சிதான்ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடுதல் (5:9). எனவேதான்துன்பத்தைத் தாங்குவதில் பொறுமையைக் கடைப்பிடிக்க... (5:7,8,10) என்று மூன்று முறை அழைப்புவிடுக்கும் யாக்கோபு, பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா, ஆமோஸ், ஓசேயா, யோனா போன்று ஆண்டவருக்குள் மகிழ்ந்து வாழ அழைக்கிறார்.

இன்றைக்கு மன அழுத்தம் நிறைந்த பரபரப்பான உலகில் வாழும் நாம் சந்திக்கும் பிரச்சினைகளுடன் எப்படி மகிழ்ந்திருக்க இயலும்? பெரும்பாலும் நமக்கு நம்மிடம் இல்லாதவை குறித்த வருத்தம் அதிகமாக இருக்கிறதே தவிர, இருப்பதைக் குறித்த மகிழ்ச்சி இல்லை. ‘உள்ளதை அனுபவித்து மகிழ்பவரே உண்மையான செல்வந்தர்என்பது யூதப் பழமொழி. முதலில், இல்லாதவருடன் இருப்பதைப் பகிர்வது, நமது நன்மைகளைப் பிறருடன் பகிர்ந்து அவர்கள் வாழ்வில் மாற்றம் காண்பதே உண்மையான மகிழ்ச்சியின் காரணிகள்.

இரண்டாவதாக, போர்களாலும் வன்முறைகளாலும் மதவாத அடக்குமுறைகளாலும் அறமற்ற வாழ்வுமுறையாலும் இயற்கை அழிப்புகளாலும் இந்த உலகம் கெட்டுவிட்டது என்ற நம்முடைய எதிர்மறை எண்ணங்கள், மகிழ்வை நம்மிடமிருந்து பறித்துவிடுகின்றன. துன்பங்கள், இழப்புகள், சோதனைகளுக்கு மத்தியிலும் நம்மைச் சுற்றி வாழும் நல்லவர்கள், சுற்றி நிகழும் நல்ல நிகழ்வுகளைக் கணக்கில் கொண்டு மகிழ்வோம்.

நிறைவாக, இறைவேண்டல் செய்வதற்கும், நன்றியுணர்வோடு வாழ்வதற்கும், இறைவனின் வழித்தடத்தில் அவரோடு பயணிக்கவும் நேரம் ஒதுக்குவோம். நம்மீது கொண்ட அன்பினால் மனிதனாகப் பிறந்து, நம்மோடு இணைந்த இறைவனோடு நாமும் இணையும்போது, மகிழ்ச்சி இயல்பாகவே நம் வாழ்வில் வெள்ளமெனப் பாய்ந்தோடும்.