‘தந்தை அன்பின் வார்த்தையோ - புவி
நிந்தை
களைய வந்ததே!
மனிதம்
புனிதம் காணவே - அன்னை
மடியில் உறவைத் தேடுதே!
கடைநிலையோர்
உயர்வடைய வளமையாகுமே - இனி
தடை
உடைய திரை விலக பொதுவிலாகுமே!
சமபந்தி
விருந்தொன்று உதயமாகுமே - எங்கும்
சமத்துவத்தில் இறைச் சமூகம் சங்கமமாகுமே!
இறைச்சித்தம்
நனவாக வரமாகுமே - திரு
மறை
இரத்தம் அன்பாலே விதையாகுமே!
இருளில்லாப்
புதுநாளும் விடியலாகுமே - இறை
அருளெல்லாம்
புவியெங்கும் நிறைவாகுமே!’
நம்
வாழ்வின் என் இனிய வாசகப் பெருமக்களே, உங்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து பிறப்பின் இனிய நல்வாழ்த்துகள்!
இயேசு
பாலன் கொண்டு வந்த அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிறைவாய்த் தங்கிட வாழ்த்துகிறேன்.
இன்று
“விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது”
(லூக் 1:79). ஒவ்வொரு பிறப்பும் ஓர் உறவின் தேடல். கிறிஸ்துவின் பிறப்பு உறவின் உன்னதமான தேடல். இது புது உறவை, புது உலகை நோக்கியத் தேடல். இயேசுவின் பிறப்பு ஒரு செய்தி (Message); “இது
எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி”
(லூக் 2:10). கிறிஸ்துவின் பிறப்பு ஒரு வெளிப்பாடு (Revelation); காலம்
கனிந்தபோது தந்தையாம் கடவுள் மனுக்குலத்திற்குக் கிறிஸ்துவின் உருவில் தமது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். “ஒப்புயர்வற்ற கடவுளின் முழு வெளிப்பாடும் கிறிஸ்து ஆண்டவரில் நிறைவு பெறுகின்றது” (இறை
வெளிப்பாடு-7) என்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு.
கிறிஸ்துவின்
பிறப்பு ஓர் உடனிருப்பு (Presence); “முற்காலத்தில்
பலமுறை, பல வகைகளில் இறைவாக்கினர்
வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்”(எபி
1:1-2).
ஒவ்வொரு
குழந்தையும் மண்ணில் பிறக்கையில் ‘நான் இந்த உலகை அன்பு செய்கிறேன்’ என்னும்
கடவுளின் செய்தியைக் கொண்டு வருகிறது. ஆனால், இந்தத் தெய்வக் குழந்தையின் பிறப்பில் கடவுளே மனுவுருவாகிறார்; கடவுளே அன்பின் வடிவமாகிறார்; அவரே அன்பின் செய்தியாகிறார். இயேசுவின் பிறப்பு உறவின் தேடலாகிறது; உற்சாகத்தின் உடனிருப்பாகிறது; மாற்றத்தை முன்வைக்கும் அன்பின் வெளிப்பாடாகிறது. ஆகவேதான், கிறிஸ்துவின் பிறப்பு ஒரு மாபெரும் கொண்டாட்டமாகிறது. இந்தக் குழந்தையின் பிறப்பில் வரலாறு கி.மு. - கி.பி. என இரண்டாக வகுடெடுக்கப்படுகிறது.
இக்குழந்தை
அன்பினால் உலகை ஒப்புரவாக்கி அமைதியின் வழியில் மீட்பினைத் தர வந்திருக்கிறது. அவரது பிறப்பின்
பயணம் அன்பு (Love), ஒப்புரவு
(Reconciliation), அமைதி
(Peace), மீட்பு
(Salvation) என்னும்
ஆழமான நோக்கங்களைக் கொண்டிருக்கிறது. இறைவன் மனிதனோடு அன்பைப் பகிரவும், மண்ணுலகிற்கு அமைதியைக் கொணரவும், இறை-மனித உறவில் நம்பிக்கை தளிர்க்கவும், நிலை வாழ்வின் உண்மைகள் மனிதனில் ஒளிரவும் மனுவுரு எடுத்திருக்கிறார். இது உலகை ஒளிர்விக்க, உய்விக்க, வாழ்விக்க வந்த ஒளி!
உலகை
ஒளிர்விக்கும் ‘உலகின் ஒளியாக’
(Light of the World), உலகை
உய்விக்க ‘வாழ்வளிக்கும் உணவாக’
(Bread of Life), உலகை
வாழ்விக்க ‘வழியாக, உண்மையாக, வாழ்வாக’ (The Way, the Truth, The Life) வந்த
ஒளி இவரே! எனவேதான் தூய அம்புரோசியார், “Open your heart and run to meet the Sun of the eternal light that
illuminates all men”
என்கிறார். ஆகவே, எல்லா மனிதரையும் ஒளிர்விக்கும் என்றென்றும் நிலையான ஒளி வீசும் இயேசு என்னும் இந்த ஆதவனைச் சந்திக்கத் திறந்த இதயத்துடன் விரைந்து செல்வோம். இது விண்ணிலிருந்து நம்மைத் தேடி வந்திருக்கும் விடியல்.
இந்த
விடியலின் பிறப்பில் இன்றைய நமது சமூக-அரசியல்-வாழ்வியல் தளத்தில் புரையோடிக் கிடக்கும் சாதிவெறி, சமயவெறி, சுயநலமும் அரசியல் ஆதாயமும் கொண்ட சூழ்ச்சிகள், நயவஞ்சகப் பேச்சுகள், மனிதநேயம் மறந்த செயல்பாடுகள், மானுட மாண்பினைச் சிதைக்கும் ஒடுக்குமுறைகள், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் அடக்குமுறைகள், மதநல்லிணக்கத்தைச் சிதைக்கும் வன்முறைக்கான சூழ்ச்சிகள், சமத்துவ-சகோதரத்துவ-சமயச் சார்பற்ற அரசியல் அமைப்புக்கு எதிரான நிலைப்பாடுகள்... என அண்மைக் காலங்களில்
நாம் சந்திக்கும் அவலங்களின் இருள் அனைத்தும் களையப்பட வேண்டும் என முயல்வோம்.
கிறிஸ்துவின்
பிறப்பு நம்பிக்கையின் வெளிப்பாடு. ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ எனத்
தெளிவுபடுத்தினார் வானவர் கபிரியேல்; ‘ஆகட்டும்’
என்றார் அன்னை; ‘மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்’ என்பதை
ஏற்றுக்கொண்டார் யோசேப்பு. இந்த மீட்பின் திட்டம் முழுவதும் நம்பிக்கையில் புடமிடப்படுகிறது. கிறிஸ்து என்னும் ஒளி கொண்டு வரும் விடியல் அடிமையெனும் இருளை, ஆதிக்கமெனும் இருளை, அதிகார, ஆணவமெனும் இருளை, பொய்மையின் சூழ்ச்சியெனும் இருளை முற்றிலும் அகற்றும் என நம்பிக்கை கொள்வோம்.
திருத்தந்தை
புனித முதலாம் லியோ குறிப்பிடுவதுபோல, “இன்று உலகின் மீட்பர் பிறந்திருக்கிறார்; அவருடைய பிறப்பில் துயரத்திற்கு இனி இடமில்லை. அவருடைய பிறப்பு நிறை மகிழ்வின் வாக்குறுதியைக் கொண்ட பேரின்பத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இது அனைவருக்குமானது; வாருங்கள் நாம் மகிழ்ந்து கொண்டாடுவோம்!”
இயற்கை
நிறைந்தால் எழில்; பானை நிறைந்தால் வளமை; மண்ணில் நிலம் நிறைந்தால் பசுமை; விண்ணில் நிலவு நிறைந்தால் குளுமை; அன்பு நிறைந்தால் ஆண்டவன். இயேசு பாலனின் பிறப்பில் கிடைக்கும் நிறைந்த அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் பேரின்பமும் நம் அகமும் - புறமும் நிறையட்டும்; உலகும் - உறவும் தழைக்கட்டும்; நாடும் - வீடும் செழிக்கட்டும்; நானிலமெங்கும் ஒளிரட்டும்!
அனைவருக்கும்
கிறிஸ்து
பிறப்பு
- புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்