news-details
சிறப்புக்கட்டுரை
“தலை சாய்க்க இடமில்லை...”

அப்பத்தின் வீடுஎனப்படும் பெத்லகேம், தாவீது குலத்துத் தாய்மண். தலைமுறைகளுக்கான பூர்வீகப் பூமி. தாவீது அரசருக்குத் திருப்பொழிவு செய்யபட்ட அரச நகரம். பழைய ஏற்பாட்டு நூல்களில் இறைவாக்கினர்களால்  முன்னறிவிப்பு செய்யப்பட்ட  புண்ணிய பூமி. மீட்பரின் பிறப்பிற்கான பரிசுத்த பூமி. சூசை, மரியாவின் குடிக்கணக்கெடுப்பிற்கான அவர்களின் பயணம் - வாகன வசதிகள் இல்லாத பாலைவனப் பிரதேசத்தில் அக்காலத்தே நெடுந்தூர நடைபயணம்.

புதிய ஏற்பாட்டு நூலில் பாலஸ்தீன நாடு என்ற நிலப்படம் திருவிவிலியத்தில் உண்டு. கலிலேயாவின் நாசரேத்துக்கும், யூதேயாவின் பெத்லகேமுக்கும் உள்ள தூரம் அதிகம். அது வியக்க வைக்கும் நெடுந்தூரம்.

பெத்லகேம் எருசலேமிருந்து தொட்டுவிடும் தூரமே. தெற்கே 10 கிலோ மீட்டர்தான். பாலஸ்தீன நாடு முழுவதும் மலைப்பிரதேசம், பாலைவெளிகள், கடற்கரைகள் என்று பயணிக்கக்கூடிய கரடுமுரடான அமைப்பு கொண்ட நிலப்பரப்பு.

நிறைமாத கர்ப்பிணியான மனைவி மரியாவுடன் பெத்லகேம் சென்ற யோசேப்பு தங்கும் விடுதிகளில் தங்க இடம் தேடினார்; இடம் கிடைக்கவில்லை. திருவிவிலியம் கூறுகிறது... “விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.” ஊரில் யாரும் உதவ முன்வரவில்லை. எளியோர் என்றும் பிறர் துன்பம் அறிவார்கள். அவ்வகையில் இடையர்கள் உதவ, ஒரு சிறு மலைக்குகையில்- மாட்டுக்குடிலில் மனுமகன்  பிறக்க இடம் கிடைத்தது.

நரிகளுக்குப் பதுங்கு குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லைஎனும் இறைவாக்கை எண்ணிப்பார்க்கிறேன். எம் சிந்தனைகளோதலை சாய்க்கக்கூட இடமில்லைஎன்ற வார்த்தைகள் காலங்களில் தொக்கி நிற்கிறது.

இஸ்ரேல் அல்லது பாலஸ்தீன நாடுகளில் எந்த நாட்டில் பெத்லகேம் உள்ளது? பெத்லகேம் குறித்த தெளிவான  அரசியல் மற்றும்  வரலாற்றுப் பார்வை நம்மிடம் இல்லை. இதற்கு விடையாக இன்றைய பெத்லகேம் குறித்து செப்டம்பர் 25 தேதியிட்டநம் வாழ்வுமின் நாளிதழில் நமது ஆசிரியர் அருள்முனைவர் இராஜா அவர்கள் எழுதிய சிறப்புச் செய்திக் கட்டுரை வரலாற்றை வாசிக்க வைக்கிறது; அதைப் பகிர வைக்கிறது.

1967-வரை பெத்லகேமின் மேற்குக் கரை இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதியாக இருந்தது. 1967-இல் இஸ்ரேலுக்கும்  பாலஸ்தீனத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் பெத்லகேம் பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால், தற்போது பெத்லகேம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

வரலாற்றுப் பதிவுகளின்படி, பெத்லகேம் அரபு நாடுகளில் கிறித்தவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள பகுதியாக இருந்தது. பெத்லகேமில் 1950-களில் அரபு நாடுகளின் கிறித்தவர்களில் 86 விழுக்காட்டினர் இருந்தனர். 2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 10 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. இஸ்ரேலின் நிலக் கையகப்படுத்தல் எனும் கட்டாயத்தால் புலம்பெயரும் அவசியம் பெத்லகேம் கிறித்தவர்களுக்கு உருவானது. பெத்லகேமில் கிறித்தவ மக்கள் 2017-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்குப்படி  28,591  என்ற எண்ணிக்கையில் மட்டுமே   வாழ்கிறார்கள். 2023, அக்டோபர் 7 அன்று தொடங்கியப் போருக்குப் பின்பு, சுற்றுலாவை நம்பியிருந்த பெத்லகேமின் பொருளாதாரம் பேரழிவைச் சந்தித்தது. பரிசுப் பொருள்கள், அங்காடிகள், அழகான ஆலிவ் மர வேலைப்பாடுகள், முத்து மற்றும் நகைகளை உற்பத்தி செய்யும் பட்டறைத் தொழில்கள் என எல்லாமே முடங்கின, மூடப்பட்டன. அரசின் தடை உத்தரவுகளால் மக்கள் வெளியே வர முடியாத அவல நிலை ஏற்பட்டது. நகரெங்கும் இருந்த 134-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம், பணி சார்ந்த நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. இதன் உச்சக்கட்டமாக குடிநீருக்குப் பஞ்சம், தண்ணீருக்கு ரேசன் என நிலைமை மோசமானது. பாலஸ்தீனிய மக்கள்  தங்கள் சொந்த இடத்தில் தண்ணீரைத் தோண்டியெடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலிய மக்களிடம் தண்ணீரை வாங்கியதால் ஒரு நபருக்கு ஒருநாள் தேவையில் ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே அவர்கள் தந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனக் கிறித்தவர்கள் மற்றும் பெத்லகேம் கிறித்தவர்கள் ஆக்கிரமிப்புக் குடியிருப்புகளால் பாதிப்பு அடைகிறார்கள். பாலஸ்தீனியக் கிறித்தவர்களை - மண்ணின் மைந்தர்களை இயற்கை வளப் பகிர்வில் தரப்படும் அழுத்தங்கள் வழி அகதிகளாக உலகம் முழுவதும் தள்ளுகிறது. நான்கு மில்லியன் என்ற எண்ணிக்கையில் உள்ள பாலஸ்தீனியக் கிறித்தவர்கள் இன்று 1,68,000 என வெகுவாகக் குறைந்துள்ளார்கள். கடந்த ஆண்டில் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு 1000 பாலஸ்தீனியக் கிறித்தவர்கள் குடிபெயர ஒப்புதல் பெற்றுள்ளார்கள். பாலஸ்தீனத்திலும் காசாவிலும் உள்ள அரசியல் சூழல்கள் மாறும்போதுதான் பாலஸ்தீனியக் கிறித்தவர்களைக் காக்க முடியும்; அவர்கள் நிம்மதியாக வாழ வழி ஏற்படும்; புனித பூமியான பெத்லகேமைக் காக்க முடியும் என்பதே நடப்பு நிலை.

சமகால நிலையில் திருத்தந்தை மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும்புனித பூமியைக் காப்போம்என்ற மீட்புக் குரல்கள் பிறக்கின்றன. 2000-2005-ஆம் ஆண்டுகளில்  இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் உச்சம் தொட்டபோது, 2002-இல் தற்கொலைப் படையினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குவதைத் தடுக்கும் வகையில்  மேற்குக்கரை சுவர் கட்டப்பட்டது. இது இஸ்ரேலின் நிறவெறியின், இனவெறியின் அடையாளமாகவும், மேற்குக்கரை பிரிவினை தடைச்சுவராகவும்  கூறப்படுகிறது.

இந்தத் தடுப்புச்சுவர் பெத்லகேமை அதன் இதயமான எருசலேமிருந்து பிரிக்கிறது. இது    பெத்லகேமியர்கள் எத்தகைய  பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பதன் அடையாளமாக உள்ளது என்று பெத்லகேம் மேயர் மஹர் நிக்கோலா கன்வத் அவர்கள் திருத்தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும், பெத்லகேம் ஆயர் திருத்தந்தையிடம்புனித  பூமியில் அமைதி மற்றும் ஒற்றுமைக்காகச் செபிக்கவும், போர் நிறுத்தம்  ஏற்படவும், புனித பூமியில் உள்ள கிறித்தவர்களைப் பாதுகாக்கவும் வழிவகை காண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலஸ்தீனிய ஒழுங்குமுறைப்படி, மரபாக பெத்லகேமின் மேயர் கிறித்தவராக இருக்க வேண்டும் என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இருந்தாலும், நாளுக்கு நாள் பெத்லகேம் கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பதே நடப்புநிலை; இது மேலும் நமக்குக் கவலை தருகிறது.

மரபார்ந்த மானுடச் சமூகம், தேசத்தலைவர்கள் புனித பூமி குறித்த தங்களது வலிமையான கருத்துகள் வழி, மத வழிபாட்டு உரிமையைக் காக்க குரல் எழுப்பவேண்டும். எருசலேம் அழிவுகளிலிருந்து மீண்டு, அமைதிப் பூங்காவாக மாற போதிய அரசியல் சமரசங்கள் தேசங்களிடையே ஏற்படுத்தவேண்டும். எருசலேம் மதங்களின் தலைநகரம் என்பதால், அதன்  புனிதத்தன்மை போற்றப்பட அரசியல் தீர்வுகளுக்கு  உட்படுத்துதல் காலத்தே அவசியமானது.

பாலஸ்தீனத்திற்காக, எருசலேமிற்காக, பாலஸ்தீனிய, பெத்லகேம் கிறித்தவர்களுக்காகச் செபிப்போம்.