ஆயர்கள் திருத்தூதர்களின் வழித்தோன்றல்கள் என்பது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கப் படிப்பினை. அவர்கள் தலத் திரு அவை மற்றும் உலகத் திரு அவையின் ஒன்றிப்புறவிற்காகப் பணியாற்றுபவர்கள். தமது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட இறைமக்கள், அருள்பணியாளர் குழுமம், திருத்தொண்டர்கள், துறவியர், ஏனைய ஆயர்கள், உரேமை ஆயராகிய திருத்தந்தை என்போருடன் கொண்டுள்ள உறவுப் பின்னலில்தான் ஆயரது பணிபுரிந்து கொள்ளப்படவேண்டும். ஆயருடைய இவ்வுறவுகள் அனைத்தின் முதன்மையான நோக்கு மறைத்தூதுப் பணியே.
தமது
தலத் திரு அவையில் நற்செய்தி அறிவிப்பு, திருவழிபாடு என்பனவற்றின் முதல் பொறுப்பு ஆயருடையதே. அவரே அதனை வழிநடத்துபவர்; ஏழைகளுக்கான அருள்பணியையும், வலுவற்றோருக்குப் பாதுகாப்பு வழங்குவதையும் அவர் ஊக்குவிப்பவர். இருப்பினும், “ஆயராகத் திருநிலைப்பாடு பெற்றுள்ளவருக்குத் தரப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளும் கடமைகளும் அவர் அவற்றைத் தனித்து நிறைவேற்றவேண்டும் என்பதற்காக அல்ல”
(இஅ 69); மாறாக, அவர் பெற்றுள்ள அருளும் அழைப்பும் தனி ஆள்கள் மற்றும் குழுமங்கள்மீது தூய ஆவியார் பொழிந்துள்ள கொடைகளை இனங்கண்டு, ஏற்று, குழும ஒன்றிப்பில் இணைப்பதற்காகவே! “அவர் அருள்பணியாளர்கள் மற்றும் திருத்தொண்டர்களுடன் தாம் கொண்டுள்ள பொது அருளடையாளப் பிணைப்பை வெளிப்படுத்தும் முறையில் அவர்களுடன் இணைந்தே இதைச் செயல்படுத்துகிறார்” (இஅ
69). “இப்பணியை அவர் கூட்டுப்பொறுப்புடன் கூடிய ஆளுகை, இறைமக்களுக்குச் செவிகொடுத்துப் போதித்தல், மனத்தாழ்மையோடும் மனமாற்றத்தோடும் புனிதப்படுத்தல் மற்றும் திருவழிபாடு கொண்டாடுதல் என்பவை வழியாகக் கூட்டியக்க முறையில் நிறைவேற்றுகிறார்” (முஅ
11b).
ஆயர்
இறைக்குடும்பமாகிய திரு அவையில் கூட்டியக்க முறையை உயிரூட்டி இயக்குவதில் அவருடைய பணி இன்றியமையாதது. ஆயராகிய ஒருவரது பணி தெளிதேர்வு செய்வதிலும், முடிவெடுக்கும் முறைமைகளிலும் நேரடியாக அதிகம் ஈடுபட்டுள்ள சிலரது பங்களிப்பின் வழியாக நம்பிக்கையாளர்கள் எல்லாருடைய பங்கேற்பையும் போற்றி வளர்க்கிறது. மேலும், “அனைவருக்கும் கூட்டியக்கத்தின் மாதிரியாகத் திகழ ஆயர் அழைக்கப்பட்டுள்ளார். கூட்டியக்க அணுகுமுறை பற்றிய அவரது உறுதிப்பாடும், தமது அதிகாரத்தை அவர் கையாளும் முறையும் அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், இருபால் பொதுநிலையினர், துறவியர் என்போரது கூட்டியக்கப் பங்கேற்பை ஆழமாகப் பாதிக்கும் என்பது உறுதி”
(முஅ 12உ). இதற்கு இன்றியமையாதது அவர்களை அவர் சந்திப்பது. குறிப்பாக, தமது பங்குச் சந்திப்பின்போது மக்களுக்குச் செவிமடுத்து, அவர்களுடைய தேவைகளை அவர் தெரிந்துகொள்வது முக்கியமானது. “ஆயர் தேர்வு முறையில் இறைமக்கள் குரலுக்கு அதிக இடம் தரப்படவேண்டும் என இம்மாமன்றம் விரும்புகிறது” (இஅ
70).
“ஆயர் பணிக்கு இன்றியமையாதவற்றில் அவர் அதிகக் கவனம் செலுத்துவதும் ஏனைய ஆயர்களுடனும் அருள்பணியாளர்களுடனும் உண்மையான சகோதர உறவை வளர்த்துக்கொள்வதும் அவசியம்”
(முஅ 12ந). ஏனெனில், பல ஆயர்கள் தங்கள்
மறைத்தூதுப் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியாத அளவிற்குத் தங்கள் மீதுள்ள எதிர்பார்ப்புகள், நிர்வாகம் மற்றும் சட்டம்சார் கடமைகள் எனும் சுமைகள் தங்களுக்கு இருப்பதாக உணர்கின்றனர். தங்களுக்குப் போதிய ஆதரவு இல்லை எனும் தனிமை உணர்வுக்கும் அவர்கள் ஆளாவது உண்டு. இதனால் ஆயர்களுக்கும் அவர்களது பணியில் ஆதரவும் தோழமையும் தேவைப்படுகின்றன. அண்டை மறைமாவட்டங்களின் ஆயர்களுக்கு இடையே சகோதரத்துவத்தை வளர்ப்பதில் பேராயரின்
பங்களிப்புப் பெரிது.
ஆயர்களுக்கும்
பணியிடை உருவாக்க முறைகள் தேவை என மாமன்ற நடைமுறையின்போது
பேசப்பட்டது. அதுபோலவே, “துணை ஆயர்களின் பணி, பதிலாள் உரிமையுடன் ஆயர் பிறரிடம் ஒப்படைக்கக்கூடிய பணிகளை விரிவாக்குதல் என்பனவற்றைத் தெளிவுபடுத்தவேண்டிய தேவையும் மாமன்றத்தின்போது எழுந்தது”
(இஅ 71).
மேலும்,
ஆயர் பற்றிய கற்பனை சார்ந்த மீஉயர் புரிதலையும், மிகுதியான எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையாளர்கள் தவிர்ப்பது அவசியம். ஏனெனில், அவரும் வலுகுறைவுகள் உள்ளவரும்-சோதனைகளை எதிர்கொள்ளுபவரும்தான். இதனால் எல்லாருக்கும்போல் அவருக்கும் உதவி தேவைப்படுகிறது. “மறுபுறம்,
உண்மையான கூட்டியக்கத் திரு அவையில் இறைமக்கள் அனைவருடைய செயல்முறை சார்ந்த பங்கேற்பு எனும் ஆதரவு இருக்கும் போது அவரது பணி மிகவும் சிறப்புற நிகழமுடியும்” (இஅ
71). மேலும், தமது தலத் திரு அவையை வழிநடத்தும் அதேவேளையில், அதன் வரலாறு, மரபு, அருங்கொடை சார்ந்த வளங்களையும் கண்டறிந்து அவற்றைக் காத்து வளர்க்கவும் ஆயர் அழைக்கப்படுகிறார்.
திரு அவையின்
ஒன்றிப்பும்
ஆயர்
பேரவைகளும்
ஆயர்
பேரவைகள் திரு அவைகளுக்கு இடையிலான உறவு ஒன்றிப்பை வெளிப்படுத்துகின்றன; அவை அருள்பணிசார் தேவைகளுக்கு அதிக ஆற்றலுடன் பதிலிறுப்புச் செய்யவும் உதவுகின்றன. “பிணைப்புகளை ஏற்படுத்தவும், திரு அவைகளுக்கு இடையே அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்வு செய்யவும் பல்வேறு பண்பாடுகளுக்கு ஏற்ப கிறித்தவ வாழ்வையும் நம்பிக்கையின் வெளிப்பாடுகளையும் தழுவியமைக்கவும் அவை அடிப்படையான கருவிகளாக விளங்குகின்றன” (இஅ
125). கூட்டியக்கத்தை
வளர்ப்பதில் அவை இறைமக்கள் அனைவரின் ஈடுபாட்டுடன் முக்கியப் பங்களிப்புச் செய்கின்றன.
மாமன்றத்திற்கு
முன்தயாரிப்பாக நடத்தப்பட்ட கண்டங்களைச் சார்ந்த ஏழு கூடுகைகளும் புதுமையானவை. அவை அவசியமானவையும் பாதுகாக்கப்பட வேண்டிய அதிகப் பயன்களை விளைவித்தவையும் ஆகும். ஒவ்வொரு பெரிய சமூக-பண்பாட்டுப் பகுதிக்கேற்ப கிறித்தவ வாழ்வை அப்பகுதி முழுவதற்கும் ஆழமாகத் தழுவியமைக்க இத்தகைய கண்டம் அளாவிய கூடுகைகள் சிறந்த வழிமுறைகளே. அவைபோலவே மாநில மற்றும் நாட்டு அளவிலான திரு அவைக் கூடுகைகளில் இறைமக்களுள் பல நிலையினரும் இணைந்து
வந்து, தெளிதேர்வு செய்வது ஆயர்கள் குழுவாக இணைந்து வந்து முடிவுகள் எடுக்க உதவுகிறது. இவ்வாறு கூட்டியக்க முறையில் திரு அவையின் பணிசார்ந்த முக்கிய முடிவுகளைச் சிலர் செய்தாலும், அதில் அனைவரும் பங்கேற்கின்றனர். இத்தகைய கூடுகைகளின் இறையியல் மற்றும் திரு அவைச் சட்டம்சார் நிலை தெளிவுபடுத்தப்படவேண்டும்.
திரு
அவையில் மிகையான மையப்படுத்தலைக் கைவிட்டு நலமான அதிகாரப் பரவலாக்கலையும், பயனுள்ள பண்பாட்டுமயமாக்கலையும் நடைமுறைப்படுத்த ஆயர் பேரவைகள் மற்றும் மாநில, மாவட்டப் பேரவைகளின்
பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அவ்வப்போது இத்தகைய பேரவைகளைக் கூட்டுவது திரு அவை வரலாற்றில் ஒரு கட்டாயமாகவே இருந்துள்ளது.
இன்றைய இலத்தீன் திரு அவைச் சட்டம் அதற்கு இடமும் அளித்துள்ளது (திரு அவைச் சட்டங்கள் 439-446). அவை அவ்வப்போது கூட்டப்படுவதுடன், அவற்றின் முடிவுகளுக்குத் திரு அவைத் தலைமைப்பீடம் தரும் ஏற்புமுறை சீரமைக்கப்படவேண்டும். முற்றிலும் அருள்பணி அல்லது ஒழுங்குமுறை சார்ந்த அவற்றின் முடிவுகளுக்குத் தலைமைப்பீடம் தனது மௌனத்தால் ஏற்பு
தரும் முறையை நடைமுறைப்படுத்தலாம்.
(தொடரும்)