வேளாண் நிலப்பகுதிகளில் உழவர்கள் நிலத்தை உழுதிடவும், நிலங்களுக்கு உரம் வேண்டியும் ஆடு மாடுகளை வைத்திருப்பது உண்டு. நஞ்சை நிலப்பகுதிகளில் வாழ்வோர் சிலவேளை திடீரென கழுகுப் பறவைகள் கூட்டமாகப் பறந்து வருதலைக் காண முடியும். கழுகுக் கூட்டத்தைக் காணும் ஊர் மக்கள் உடனே ஒரு முடிவுக்கு வருவர். அது என்ன முடிவு? ஊரில் யார் வீட்டிலோ மாடு ஒன்று செத்துப் போயுள்ளது என்ற ஏகோபித்த முடிவு. கழுகுகளின் வருகைக்கு மாடொன்றின் சாவுதான் காரணமாகும். மாடொன்றின் சாவு நிகழாவிடத்தில், கழுகுகளின் வரவு இல்லை என்பதே உண்மை. மாட்டின் சாவை அதன் நுகர்வு சக்தியால் உணரும் கழுகுகள், இதுவரை எங்கே குடியிருந்தனவென்று யாருக்கும் தெரியாது.
நவீன கழுகுகள்
புல்வாமாவில்
என்ன நடந்தது என்பது பற்றிப் பேசுவதை நாம் நிறுத்திக்கொண்டோம். இந்திய இராணுவத்தினர் நாற்பதிற்கும் மேற்பட்டோர் இராணுவ வாகனத்தில் பயணப்பட்டபோது, பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலால் அநியாயமாகக் கொல்லப்பட்ட செய்தியையும், அத்தாக்குதலில் நடத்தப்பட்ட கொலைப்பாதகம் இன்றைய ஒன்றிய அரசினை ஆளும் கட்சியின் மற்றொரு வெற்றிக்கு வழிகோலியது என்பதையும் நாம் அறிவோம். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எளிதாகப் பலியானமைக்கு இராணுவத்தினரின் தவறான பாதுகாப்பு நடவடிக்கையே காரணம் என்று உண்மை பேசிய ‘மாலிக்’ எனும் பெயர்கொண்ட அன்றைய ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் என்னவானார்? எதிர்க்கட்சிகள் கூட கவலைப்படவில்லையே!
பிணந்தின்னி
பாசிசக் கழுகுகளுக்கு விலைமதிக்கவியலா உயிர்கள் கிடைத்தன; கழுகுகள் உண்டு ஏப்பம்விட்டன; பசிதீர்ந்த கழுகுகள் வேறொரு பிணத்திற்குக் காத்துக்கிடந்தபோது கிடைத்ததுதான் ‘பெகல்காம்’
எனும் பிணக்காடு. பெகல்காமில் கிடைத்தது நல்ல வேட்டை. கொலையுண்டோர் 26 பேரும் ஆண்களாயிருக்க, அரசியல் ஆதாயம் காண விரும்பிய மதவாதப் பாசிச கழுகுகளுக்கு அது நல்வாய்ப்பாக அமைந்தது. கொல்லப்பட்ட ஆண்களின் மனைவியர் ‘சிந்தூர்’
(பொட்டு) இழந்து வெறும் நெற்றியாயினர். சாவிலும் ஆதாயம் தேடும் இந்தப் பிரிவினைவாத அரசியல் கழுகுகளுக்கு நல்ல வேட்டை. தீவிரவாதிகள் தாக்குதலில் அழிக்கப்பட்ட ‘சிந்தூர்’
என்னும் பொட்டு இவர்களின் இரையாயிற்று. தாக்குதலை மேற்கொண்ட பாகிஸ்தான் கழுகுகளை வீழ்த்த இந்திய அரசின் விமானங்களே கருவியாயிற்று. கழுகுகளின் வாழ்வில் எங்கோ இறந்து கிடக்கும் மாட்டுப் பிணத்தை மட்டுமே தேடி அலைந்து உண்ணுவதைப் பார்க்கிறோம். ஆனால், நமது வாழ்வில், பிணமாக்கப்பட்டவர்களின் சடலமே மற்றோர் அரசியல் வெற்றிக்குப் பாதை அமைக்கவும் அதன் நிமித்தம் மேலும் பல கொலைகளை நிகழ்த்தவும்
வாழும் பாசிஸ்டுகள் தயாராக உள்ளனர்.
இந்நிகழ்வில்
காணும் வேடிக்கை என்னவென்றால், மற்றொரு நாட்டின் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கும், பலியானோரின் அவல மரணத்திற்கும் பாகிஸ்தானின் ஊடுருவலைக் காரணமாக்கியது இந்திய ஒன்றிய அரசியலாகும். குறிப்பாக, உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டிய உள்துறை அமைச்சர் அதற்குப் பொறுப்பேற்கவில்லையே? ஏன்?
26 பேர்
கொலை செய்யப்பட்டு வீசி எறியப்பட்டனர். அது அரசியல் இலாபக்கணக்கானது. பிணந்தின்னிக் கழுகுகளுக்கு நல்ல வேட்டை! பிணத்தின் மீதான கோரத்தைக் கேள்வி கேட்க ஆளில்லை. ‘சிந்தூர் ஆப்ரேஷன்’
எனும் பெயரில் வேட்டையாடிய கழுகுகள் தேசப்பற்றாளராயினர். கற்பனைகூட செய்யமுடியாத அளவிற்கு அந்நியக் கழுகுகள் தண்டிக்கப்பட்டதாக நமதூர் பாசிசத் தலைவர்கள் புளகாங்கிதம் அடைகின்றனர்.
மேற்கண்ட
இரண்டு நிகழ்வுகளுமே பிணந்தின்னிக் கழுகுகளுக்கு நல்ல விருந்தாயின. மேலும், மற்றொரு புல்வாமா கிட்டாதா? பெகல்காம் நிகழாதா? என்று ஏங்கும் பிணந்தேடும் கழுகுகளுக்கு அடுத்து இரையாகப்போவது யார்? அந்த இரையின் மீது நடத்தப்படும் அரசியலை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்?
அண்மையில்
இந்தியத் தலைநகரின் மையப் பகுதியில் கார் ஒன்று வெடித்துச் சிதறுகிறது. வழக்கமாகக் குண்டுவெடிப்புகள், தீவிரவாதத் தாக்குதல்கள் என்பன போன்ற நடவடிக்கைகளின் மொத்தப்பழியும் இசுலாமியத் தோழர்கள் மீதுதானே விழும்! டெல்லி குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். இசுலாமியப் பல்கலைக்கழகம் தீவிரவாத வலையுள் சிக்கவைக்கப்பட்டுள்ளது; மீண்டும் கழுகுகளுக்குக் கொண்டாட்டமே!
ஏற்கெனவே
அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்ட (அதாவது செத்துப்போன) இசுலாமியப் பிணங்கள் அரசியல் சூது செய்வோர்க்கு இரையாகி உள்ளன.
இம்மாதிரியான
கோரநிகழ்வுகள் ஆளும் கட்சியினருக்கு, அக்கட்சியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றிய அமைச்சர்களுக்கு அதிர்ச்சியைத் தருவதில்லை; பேரானந்தத்தையே அளிக்கின்றன. அவை கழுகுகளுக்குக் கிடைத்த பெருந்தீனி!
வேண்டாதோரைக்
கைகாட்டிவிட்டு கையை மடக்கிக்கொள்ளும் ஆட்சியாளர்களின் வன்மம் கேள்விக்குள்ளாகும் வேளை, மக்களுக்குப் பதில் கூறவேண்டிய அரசின் பொறுப்பாளர்கள் பதவியைத் துறக்கவில்லையே! கண்டிக்கும் எதிர்க்கட்சிகளோ அரசின் பொறுப்பாளர்களைப் பொறுப்பேற்றுப் பதவி துறக்கக் கட்டாயப்படுத்தவில்லை. ஏன்?
நாட்டில்
நடைபெறுகின்ற தீவிரவாதத் தாக்குதல்கள் அனைத்தும் ஒரு மதம் சார்ந்த தீவிரவாதிகளாலேயே திட்டமிட்டு நடத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தும் ஆட்சியாளர்கள் இந்தியப் பாதுகாப்பிற்கு நேரிட்ட தவறுக்குப் பொறுப்பேற்க வேண்டாமா? தாக்குதல்களில் பலியான மாடுகள் செத்துப் போயின; பிணங்களைச் சுவைப்பதுதான் தங்கள் வேலை என்று இவர்கள் கூறாமல் கூறுகிறார்களோ?
மதக்கலவரங்கள்,
படுகொலைகள், பதற்றங்கள்... எல்லாம் அரசியல் இலாபத்திற்கும் மதரீதியான ஒருங்கிணைப்பிற்கும் (Polarise) பயன்படும்
அரசியல் களங்களாக மாறிவருவதை நன்குணர்ந்த மதவாத அரசியல் வணிகர்கள் மிக நேர்த்தியாகவே இத்தொழிலைச் செய்கிறார்கள்.
மானுடத்திற்கு
எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலையாக வர்ணிக்கப்பட்ட 2002-இன் குசராத் ‘கோத்ரா’ வன்முறையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பிணமாயினர். கொலையுண்டோரைத் தாண்டி வன்முறைக்கு- அவதூறுகளுக்கு-அவமானப்படுத்தப்படலுக்கு ஆளான கொடுமையான நிகழ்வுகள் ஏராளம். குசராத் கொலைகளால் வீசி எறியப்பட்ட பிணங்கள் பலருக்கு அன்று விருந்தாயின. இவ்விருந்து தந்த விளைவு என்ன? 2014, 2019, 2024-களில் நல்ல விளைச்சல்! தொடர்ந்து ‘ஹாட்ரிக்’
வெற்றி! குசராத் நிகழ்வில் குற்றம் சாட்டப்பட்டவர் மும்முறை இந்தியப் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அவர் இப்போது வெறும் பௌதீக மனிதரல்லர்; அவர் ஒரு விசுவக் குரு! அவர் ஓர் அவதாரம்! இதுதான் கட்டமைக்கப்பட்ட வெற்றி!
தமிழ்நாட்டுக்
கழுகுகள்
தமிழ்நாட்டு
அரசியல் களம் பல வேடிக்கை நிகழ்வுகளைச்
சந்தித்து வருவதோடு, பல வேடிக்கை மனிதர்களின்
விந்தையான விளையாட்டுகளையும் கண்டுவருகிறது.
விடுதலை
பெற்ற இந்தியா, குடிகளைக் குடிமக்களாக அங்கீகரித்து, குடிமக்களைக் காக்கும் சனநாயக அரசையும், சனநாயகப் பாதுகாப்புக்கென அரசமைப்பு உரிமைச் சட்டத்தையும் தந்தது. சனநாயகம் எனும் நவீன தத்துவத்தையும், சனநாயக விழுமியங்களைக் காக்கும் வகையிலான சனநாயக அரசையும் சனநாயக அரசின் செம்மையான செயல்பாடுகளுக்கு உத்தரவாதம் அளித்திடும் வகையில், சனநாயக நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. விடுதலை பெறும் இந்தியாவில் மதப்பெரும்பான்மையினரின் நாடாக- மதம் சார்ந்த நாடாக இந்தியா கட்டமைக்கப்பட வேண்டும் என்ற மதவாதிகளின் கனவுக்கு மாறாக உருவாக்கப்பட்ட இந்திய சனநாயக அரசின் அரசமைப்புச் சட்டத்தை (Constitution) Un Hindu ‘இந்துப்
பண்பு இல்லாதது’
என்று வர்ணித்த கோல்வால்க்கரின் கூற்றை நனவாக்கும் வகையில், ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் இன்றைய மதவாத அரசு தன் கொள்கைகளால் நாளும் சிதைத்து வருவதை நாடறியும்.
சனநாயக
அரசின் அனைத்துக் கொள்கைப் பண்புகளும் மதவாத அரசினால் சிதைக்கப்பட்டு வரும் நிலை அறிந்த இந்திய மதச்சார்பற்ற கட்சிகள், ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி, மதவாதக் கட்சிகளுக்குச் சவால் விடுத்து வரும் காலம் இது. இன்றைய அரசியல் தளத்தில் கருத்தியல் ரீதியான போரின் தேவையை உணர்ந்து மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைவைப் பெரிய நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் சனநாயக சக்திகள் எதிர்நோக்கியிருக்க, தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி, மேனாள் ஆளுங்கட்சி, திராவிடத்தை முன்னோட்டாகக் கொண்ட ஒரு கட்சி மேலே கூறப்பட்ட பாரதிய சனதா கட்சியோடு கூட்டணி வைக்கிறது.
திராவிடம்
ஒரு கருத்தியலின் அடையாளமாயின், இந்துத்துவம் இவ்வடையாளத்தோடு எப்போதும் உடன்படாதது! ஒரு பிற்போக்குக் கொள்கையின் அடையாளம் அது என்பதனை அனைவரும் அறிந்த நிலையிலும், ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியைத் தகர்க்கவேண்டும் என்ற ஒரே நோக்கில் மதவாதப் பாசிசக் கட்சியோடு டெல்லி வரை பயணித்து உடன்பாடு செய்துகொண்ட மேனாள் முதல்வரை-தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரை தமிழ்நாடு ஆளும் கூட்டணியினர் கேள்விக்குள்ளாக்கியபோது, மேனாள் முதல்வர் எடப்பாடியார் அளித்த பதில்தான் நம்மைச் சிந்திக்க வைத்தது.
“அண்ணா தி.மு.க.
எவரோடு கூட்டுவைக்கலாம் அல்லது கூடாது என்று தீர்மானிக்கும் உரிமையை எவரும் கேள்வி கேட்க முடியாது.” இப்படிக்
கேலியாகப் பதில் கூறிய எடப்பாடியாரின் தோரணை ஆயிரம் கேள்விகளை உள்ளடக்கியது. இந்தியாவில் பா.ச.க.
எதிர்ப்பைக் கொள்கை ரீதியாக முன்னெடுத்துவரும் மாநிலங்களுள் தமிழ்நாடு முதன்மை பெறுவதை அறிவோம். தமிழ்நாட்டை விழுங்குவதன் மூலம் இந்தியாவை முழுமையாக விழுங்கிடத் துடிக்கும் பா.ச.க.வின் போக்கினை எடப்பாடி அறியாதவரா?
இது
கட்சிக் கூட்டு அல்ல; கொள்கையை அடகு வைக்கும் கூட்டு. இப்போக்கு எதேச்சதிகாரத்தின் விளைவு. இக்கூட்டு பொருந்தாக் கூட்டு. எந்தவிதக் குற்றவுணர்வுமின்றி எடப்பாடியார் அளித்த பதிலில், குடிமக்கள் கேலி செய்யப்படுவதோடு விடுதலை பெற்ற இந்தியா, கட்டிக்காக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் பலியாகப் போவதை நாம் காண முடியவில்லையா?
தி.மு.க. ஆட்சி
விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஆட்சியென்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுவதில்லை. தி.மு.க.
அரசு திராவிடக் கொள்கைகளின் மொத்த வடிவம் என்றும் நாம் ஏற்கவேண்டுவதில்லை. ஆனால், ‘வாழ்வா? சாவா?’ என்ற இக்கட்டான சூழலில் எடப்பாடியார் போன்றோரின் சந்தர்ப்பவாதப்போக்கை எதிர்த்தே ஆகவேண்டும். எடப்பாடியார் விரும்பும் ஆட்சி மாற்றம் நிகழுமானால், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எவரும் காப்பாற்ற இயலாது.
எங்கேயாவது
பிணம் விழாதா? பசியாறுவோமா? என்று அலையும் கழுகுகளைவிட, கேவலமாக எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் பரப்புரைகளைக் காணமுடிகிறது.
தமிழ்நாட்டில்
எங்கோ ஒரு மூலையில் எப்போதோ நடக்கும் ஒரு பாலியல் வன்முறை, ஆணவக்கொலை, காவல்நிலையக் கொலை மற்றும் சித்திரவதை நிகழ்வுகளை தமிழ்நாடு முழுவதும் எப்போதும் நடப்பதாகப் பரப்புரை செய்வதும், ‘தி.மு.க.
ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்ற
ஒற்றை முழக்கத்தோடு கழுகு போன்று சுற்றித்திரிவோரின் நோக்கமென்ன?
ஏற்கெனவே
கூறியதுபோல தமிழ்நாட்டில், தி.மு.க.
ஆட்சியில் சீர்செய்யப்பெற வேண்டியன நிறையவே உள்ளன. எங்கேயாவது பிணம் விழாதா? என்று அலைந்து இந்த ஆட்சியை வீழ்த்த எண்ணும் கழுகுகளின் நோக்கைப் புரிந்துகொள்வோம்.