சனநாயகச் சரிவுப் பணியில் ‘அடையாள அரசியலின் பங்கு என்ன?’ என்பது பற்றிய ஆய்வுகள் நிறையவே வந்துள்ளன; வருகின்றன. அடையாள அரசியலின் உள்ளார்ந்த சனநாயகமற்ற போக்கு, இந்துத்துவர்களின் அரசியல் நடவடிக்கையில் பெரும் இடத்தையும், இவ்வரசியல் சிதைக்கும் சனநாயகப் பண்புகளையும் இந்துத்துவ வகுப்புவாத அரசியலை உற்றுநோக்குபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்தியாவில்
மத ரீதியான வகுப்புவாத அரசியல் என்பது மதத்தை அடிப்படை அலகாகக் கொண்டது. மதம் எனும் அடையாளம் மட்டுமே வகுப்புவாத ரீதியில் மக்களை ஒருங்கிணைக்கும் ஆயுதமாக உள்ளது. மதம் தொடர்பான அனைத்து அடையாளங்களும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு, கேட்போர் காதுகளில் வேத மந்திரமாக உருவேற்றப்படுகிறது. அடையாள அரசியலின் உருவாக்கத்தில் அடையாளங்கள் (Symbols) வகிக்கும்
பங்கை ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.
இந்துத்துவர்கள்
இவ்வடையாள வழி தம் கருத்தியலை மக்கள் மனத்தில் உருவேற்ற மிகப்பெரிய அளவில் திட்டமிட்டுள்ளமையும், அவர்கள் கண்ட வெற்றியும் மிகப்பெரிது. இராமன் என்றும், அயோத்தி என்றும், இராம சென்ம பூமி என்றும் மீண்டும் மீண்டும் உச்சரிக்கச் செய்ததை நாம் அறிவோம். இராமன் எனும் நாமம் வெறும் உச்சரிக்கப்பெறும் நாமமாக மட்டுமல்லாமல், இராமனைச் சுற்றிப் பின்னப்பட்ட அரசியலுக்கும் தூண்டுதலாக அமைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இராமன் எனும் ஒரு பெயரைச் சுற்றி ஐந்து ஆண்டுகளாக நம் வீடுகளில் தினமும் உலாவந்த இராமாயணம் வெறும் திரைக்காட்சியல்ல; அது திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட ஓர் அரசியல் பிம்பம்.
‘இராமாயணம்’
எனும் திரைத்தொகுப்பு மக்கள் மனத்தில் உருவேற்றப்பட்ட பின்பு இராமனுக்கான ஆலயம் உறுதியாயிற்று; திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட பாபர் எனும் தீயபிம்பம் அளிக்கப்பட்டமை மக்களிடம் எந்தவிதக் கசப்புணர்வையும் உருவாக்கவில்லை; இனியும் உருவாக்காது.
குடிமக்களும்
அடையாளங்களும்
குடிகள்
உரிமை மறுக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, உரிமை மானுடருக்கான இயல்பான கவசம் என்ற அடிப்படை அறிவே இல்லாதவர்கள். ஆனால், இக்குடிகள்தான் நாம் அனைவரும் உரிமை பெற்ற குடிமக்களாக உருமாற போராடி வெற்றி பெறத் துணை நின்றவர்கள். முடியாட்சியைத் தகர்த்து, குடியாட்சி எனும் சனநாயக ஆட்சிக்கு வித்திட்டவர்கள். உலகில் தோன்றிய அரசியல் வரலாற்றில் சனநாயக அல்லது குடிமக்களின் ஆட்சியே உயர்வானது என்று கருத இதுவே காரணமாகிறது.
குடிமக்களும்
அடையாளமும்
குடிமகன்
அல்லது குடிமகள் என்ற ஒற்றைச் சொல் மிக ஆழமான விழுமியத்தை உள்ளடக்கியது. குடிமக்கள் சனநாயக அரசின் சமத்துவ உரிமை பெற்றவர்கள். சமத்துவமே இவர்தம் பொது அடையாளம். இந்தியா விடுதலை பெற்று சனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டு, சனநாயகக் குடியரசைக் காக்கும் வகையில், இந்திய தேசியத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவிற்கான அரசமைப்புச் சட்டம் ‘இந்தியக் குடிமக்களாகிய நாம்’ என்ற முதன்மை வாசகத்தோடு தொடங்குவதன் செம்மையை நாம் கவனிக்கத் தயங்குதல் கூடாது. ‘இந்தியக் குடிமக்களாகிய நாம்’
- ‘நாம்’ என்ற
சொல் உள்ளடங்கிய ஒன்று (inclusive). ‘குடிமக்கள்’ எனும்
பன்மைச் சொல்லும் உள்ளடங்கியதே. இந்தியக் குடிமக்களாகிய நாம் இந்நாட்டைச் சனநாயக சமன்மையுடைய, சமயச்சார்பற்ற இறையாண்மையோடு கூடிய குடியரசாக அறிவிக்கிறோம் (Republic). இந்தியக்
குடிகள் ‘குடிமக்கள்’ எனும்
கவசம் தரித்து ஒன்றுபட்டவர்களாய், ஒருமனப்பட்டவர்களாய் பேதமின்றி அறிவித்த உரிமைப் பெட்டகமே அரசமைப்பு உரிமைச் சட்டம்.
குடிமக்கள்
சனநாயக அரசில் சமமானவர்கள். சமத்துவமானவர்கள். சனநாயக அரசு அளிக்கும் அரசியல் சனநாயகத்தைக் காக்கும் வகையில் ‘ஒரு நபர் ஒரு வாக்கு’ என்ற உத்தரவாதமும் குடிமக்களுக்கான பெருமையே. இங்கு எழுகின்ற மிக முக்கியமான கேள்வி என்னவெனில், பன்மைச் சமூகம் ஒன்றில் வாழ்கின்ற குடிமக்கள், குடிமக்கள் என்ற கவசம் பெறுதலால் அவர்களுக்கென ஏற்கெனவே இருந்த அடையாளங்களை இழந்துவிடுவரா? குடிமக்கள் என்ற நாமத்தைப் பெறுகின்றபோதே அவர்கள் ஏற்கெனவே ஏற்றிருந்த அடையாளத்தை இழந்துவிடுவரா? இக்கேள்விகள் இன்றைய இந்துத்துவ மதவாத அரசியல் போக்கில் இந்தியக் குடிமக்கள் அறிய வேண்டிய ஒன்றாகும்.
சனநாயகம்
உத்தரவாதப்படுத்திய குடிமக்களுக்கான குடியுரிமை, குடிமக்களின் தெரிவு செய்யும் உரிமையை (Power of Choice) உத்தரவாதப்படுத்துகிறது. குடிமக்கள் சமமானவர்கள் என்றாலும், அவர்கள் ஒற்றைப் பண்புடையர் அல்லர். ஒரே அடையாளத்தைக் கொண்டவரும் அல்லர். குடிமக்கள் இனம், மொழி, மதம் எனும் அடையாளங்களால் வேறுபட்டவர்கள். வேறுபட்ட அடையாளத்தைக் கொண்ட இக்குடிமக்கள் ஒற்றைக் குணமுடையவர் அல்லர். சனநாயகம் தந்த குடியுரிமை குடிமக்களின் தனித்த அல்லது வேறுபட்ட பண்புகள். இதை மறுக்க முடியாது.
இந்தியக்
குடிமக்கள் ஒரு தமிழராக, கிறித்தவராக அல்லது ஏதோ ஒரு மதம் அல்லது மொழி அல்லது இனம் சார்ந்தவராக இருக்க உரிமையுண்டு. குடியுரிமை குடிமக்களின் பண்பாட்டுரிமையை மறுக்கக்கூடாது. குடிமக்கள் சமமானவர்கள். ஆனால், வேறுபட்டவர்கள். வேறுபடுதல் அடிப்படை மனித உரிமை (Right to be different). இனம்,
மொழி, மத அடிப்படையிலான அடையாளங்களைத்
தக்கவைத்தல், தனித்த அடையாளங்களைப் பேணுதற்கான போராட்டம் என்பது பிரிவினைக்கான போராட்டமல்ல; தனித்தன்மையைக் காப்பதற்கான போராட்டமே.
இந்தியக்
குடிமகனாக ஒருவர் தன்னை ஏற்றுக்கொள்வதால், குடிமகன் சார்ந்த அடையாளத்தைக் காவுகொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நாட்டின் குடிமகனின் தனித்த அடையாளங்கள் மறுக்கப்படுகின்றபோது, அந்நாட்டைத் தன் அடையாளமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
என்னுடைய
மொழி அல்லது இனம் அல்லது மதம் சார்ந்த அடையாளம் கேள்விக்குள்ளாக்கப்படுமானால்
அல்லது மறுக்கப்பட்டு ஒற்றை அடையாளத்துள் முடக்கப்படும் சூழல் உருவாக்கப்படுமானால் ‘நான் இந்தியன்’
எனும் அடையாளத்தையும் மறுக்கத் தயங்கமாட்டேன். இது சனநாயகம் வழங்கிய குடியுரிமைக்கான இலக்கணம்.
இந்தியர்கள்
இந்தியராக வாழ வேண்டுமெனில், இந்துகளாகவே இருக்கவேண்டும் என்ற இந்துத்துவர்களின் கொள்கைக்குப் பதில் சொல்ல வேண்டிய காலகட்டத்தில் வாழ்கின்ற மொழி மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு மேற்கண்ட தெளிவு வேண்டும்.
இந்தியரை
இந்துகளாக மட்டும் சுருக்கி, இந்தியாவை அல்லது இந்துவை விமர்சிப்பதைத் தேசத்துரோகமாகக் கட்டமைக்கும் கருத்தியலின் அடையாள அரசியலுக்குள் மறைந்திருக்கும் உரிமை மீறலைக் கண்டுகொள்ள
வேண்டுவது நம் கடமையாகும்.
மத
அடையாளத்தால் வேறுபட்டவர்கள், ‘இந்தியர்’
என்ற அடையாளத்துள் அடங்கார் என்ற இந்துத்துவ முன்னோடிகளான கோல்வால்க்கரும் சவார்க்கரும் கூறிவந்தமையை அறிவோம். இந்திய நாட்டின் துணைப் பிரதமராக இருந்த எல்.கே. அத்வானி அவர்கள் கிறித்தவர், இசுலாமியர் என்ற அடையாளங்களை மறுத்து, இந்தியாவில் வாழும் இசுலாமியர் ‘இந்து இசுலாமியர்’ (Hindu Muslims), கிறித்தவர் ‘இந்து கிறித்தவர்’ (Hindu Christian) என்பவராகத்தான் இருக்கமுடியும் என்ற புதிய அடையாளத்தை வழங்கத் தொடங்கினார். இது தனித்த அடையாள மறுப்பு. வெறும் அடையாள மறுப்பு மட்டுமல்ல, குடிமக்களின் அடிப்படை அடையாள மறுப்பும் ஆகும். இந்து என்ற அடைமொழியோடுதான் இந்திய சனநாயகம் வகுத்த குடிமக்கள் அடையாளப்படுத்தப்படுவர் என்பது கேவலமான ஒரு நடவடிக்கை அல்லாமல் வேறு என்ன?
1948-இல் ஐக்கிய
நாட்டவையின் உறுப்பு நாடுகளின் ஆதரவோடு உருவான அகில உலக மனித உரிமைப் பிரகடனம் குடிமக்களின் அடிப்படை அடையாளம் பற்றிப் பேசியது. இப்பிரகடனம் குடிமக்களின் இயல்பான அடையாளங்களை அங்கீகரித்த நிலையில் இனம், மொழி, தேசிய இனம், மதம் எனும் அடையாள அடிப்படையில் குடிமக்கள் எவரையும் பாகுபடுத்துவதை மனித உரிமை மீறலாகப் பிரகடனப்படுத்தியது; ஐ.நா. அவையின்
உறுப்பு நாடுகள் இதை ஒருமனத்தாக ஏற்றுக்கொண்டன; அதில் இந்தியாவும் ஒன்று.
இங்கு என்ன
நடக்கிறது?
மதச்சார்பற்ற
இந்திய சனநாயக குடியரசு மத அடிப்படையில் மக்களை
அணிதிரட்டுகிறது. ஒன்றிய அரசின் அன்றாட நிகழ்வுகள், பரப்புரைகள் அனைத்தும் ஏதோ ஓர் அடையாளத்தை முன்வைத்தே நடத்தப்பெறுகின்றன. அண்மையில் ஒன்றிய அரசின் தேர்தல் ஆணையத்தின் மூலம் தீவிரமாக முன்னெடுக்கப்பெறும் சிறப்புத் தேர்தல் திட்டம் மூலம் ஒதுக்கப்பெறும் குடிமக்கள் எப்பகுதியினர்?
ஆந்திர
மாநிலத்தைச் சார்ந்த பிரபாகர் பரகலா அவர்களின் இச்சிறப்புத் திருத்தம் பற்றிய விமர்சனம் இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்: “ஒன்றிய அரசின் இத்திட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்லாது, இத்திட்டம் குடிமக்கள் மீது நடத்தப்படும் இரத்தம் சிந்தா இனப்படுகொலை” (Blood loss Political Genocide) என்கிறார்.
ஹிட்லரின்
பாசிசம் யூதர் என்ற அடையாளத்தை முன்வைத்து நடத்தப்பட்ட படுகொலை! அது வெளிப்படையான ஒன்று. ஆனால், இங்கு நடப்பது என்ன? ஊடுருவலாளரைத் தடுக்கவே இந்நடவடிக்கை என்கிறார் உள்துறை அமைச்சர். ஒன்றிய அரசு பேசும் ஊடுருவலாளர் யார் என்பதை நாடறியும். வங்கதேசத்து இசுலாமியரைத்தான் இவர்கள் ‘ஊடுருவலாளர்’ என
அடையாளப்படுத்திக் குறிவைக்கின்றனர்.
வாக்குத்
திருட்டை அம்பலப்படுத்தி வரும் இராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும் ‘ஊடுருவலாளர்களின்’ ஆதரவைப்
பெறவே இப்பொய்யான பரப்புரையை நடத்துவதாக ஒன்றிய அரசின் தலைவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றனர். புல்வாமா, பெகல்காம் மற்றும் அண்மையில் இந்தியத் தலைநகரில் நடந்த குண்டு வெடிப்பு போன்ற நிகழ்வுகள் மூலம் அடையாளப்படுத்தப்பெறும் தீவிரவாதிகள் யார்?
புது
தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட உமர் காலித், ஐந்து வருடங்களாகச் சிறைவாசத்திலிருந்து, பிணை வழங்கப் பெறாமல், இறுதியில் சிறையில் மடிந்த ஸ்டான் சாமியின் அடையாளம் எது?
இந்திய
சனநாயகம் வழங்கிய குடியுரிமையை வெறும் அடையாளத்துள் சுருக்கி, ஒதுக்கும் (Exclude) பகை
அரசியல் வழி ஒடுக்கும் இந்திய மதவாத அரசியலைப் புரிந்துகொள்வது இன்றைய தேவை. குடிமக்களின் பன்முக அடையாளங்களைச் சிதைத்து, ஒற்றைமத அடையாளத்துள் குடிமக்களைச் சிறை வைப்பதன் அரசியலைப் புரிந்துகொள்வோம்.
“நான் இந்து மதத்தைச் சார்ந்தவன்; உங்களைப் போலவே நான் பின்பற்றும் மதத்தின்மீது கொண்ட நம்பிக்கையால் ஊக்கம் பெற்றுள்ளேன். பகவத் கீதையைக் கையில் ஏந்தி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யவேண்டும் என்பதே நமக்குக் கற்றுத்தரும் பாடம்”-
ரிஷி சுனக், மேனாள் பிரிட்டிஷ் பிரதமர், ‘தினமணி’,
1.7.2024.
மதச்சார்பற்ற
நாடென்று அறிவிக்காமல், மதச்சார்பின்மையை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட இங்கிலாந்தின் பிரதமராகப் பதவியேற்ற ரிஷி சுனக், தன் அடையாளத்தை அந்நாட்டில் சமரசம் செய்யவில்லை. இவர்தம் அடையாளத்தை அங்கீகரித்த இங்கிலாந்து நாடு, ‘மதச்சார்பற்ற’ நம்
இந்தியக் குடியரசுக்குத் தரும் பாடம் என்ன?