திருப்பலி முன்னுரை
அன்பின்
காலமான இந்தத் திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு, மனமாற்றம் பெற்று நல்மக்களாய் வாழ திருமுழுக்கு யோவான் வழியாக நமக்கு அழைப்புவிடுக்கிறது. குறைகள் இல்லாத மனிதன் இல்லை; அதைக் குறைக்கத் தெரியாதவன் மனிதனே இல்லை. மனமாற்றம் நம் வாழ்க்கை புனிதத்தை நோக்கிச்செல்லப் பேருதவியாக இருக்கிறது. நம் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் பொறாமை, கோபம், தவறான எண்ணங்கள், ‘தான்’ என்ற ஆணவம், சுயநலம், தவறு என்று தெரிந்தும் துணிந்து செய்தல், பிறர்நலனில் அக்கறையின்மை போன்ற மனிதத்தைச் சிதைக்கும் செயல்களிலிருந்து விடுபட்டு, நமது
வார்த்தைகளில், வாழ்க்கையில், சிந்தனைகளில், பார்வையில் மாற்றம் பெற்று, தூய வாழ்வு வாழ இந்தத் திருவருகைக் காலத்தில் முயற்சி எடுப்போம்.
திருமுழுக்கு
யோவான் நீதியின், உண்மையின், சமத்துவத்தின், தூய வாழ்வின் குரலாகச் செயல்பட்டு, கிறித்தவர்களாகிய நமது வாழ்வு எவ்வாறு அமைந்திடல் வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார். இச்சமூகத்திலும் வாழும் தளங்களிலும் இறைவனின் குரலாக நாம் மாறுவோம்; உண்மையான மனமாற்றத்தை நமது செயல்களால் அறிவிப்போம். உள்ளம் என்னும் ஆலயத்தை ஒப்புரவு அருளடையாளத்தால் தூய்மை செய்வோம். அல்லவைகள் அகற்றி, நல்லவற்றில் நிலைத்து, மனமாற்றம் பெற்று வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
ஆண்டவரின்
வருகை மகிழ்ச்சியையும் அமைதியையும் விதைக்கும். பிளவுகள், பிணக்குகள் அனைத்தையும் வேரறுத்துச் சமத்துவத்தை ஏற்படுத்தும், ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் களையப்பெற்று, அனைத்து மக்களும் வாழ்வு பெறுவர். இல்லாதோர்-இயலாதோர்-தாழ்நிலையில் உள்ளோர் அனைவரும் ஆண்டவரின் மீட்பை அனுபவிப்பர் என்றுகூறி ஆண்டவரின் வருகையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
கடவுளின்
பிள்ளைகளாகிய நாம் அனுதினமும் அளவற்ற நன்மைகளை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம். நாம் வேண்டுகின்ற, விரும்புகின்ற அனைத்தையும் தேவையான நேரத்தில் நிறைவேற்றி, எக்குறையுமின்றிக் காத்துவருகின்றார். எத்தனைமுறை தவறுகள் செய்தாலும் மன்னித்துத் தாயன்போடு ஏற்றுக்கொள்கின்றார். தந்தைக்குரிய அன்போடும் வாஞ்சையோடும் வழிநடத்தி வரும் இறைவனின் பேரிரக்கத்திற்கு நன்றிகூற அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பின்
ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்திவரும் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் திருமுழுக்கு யோவானைப் போன்று கிறிஸ்துவின் வருகையை வீரியத்துடன் விதைக்கவும், சான்றுபகரும் வாழ்க்கை வாழவும் தேவையான வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. இரக்கத்தின்
ஆண்டவரே! உமது வருகைக்காகத் தயாரித்துக் கொண்டிருக்கும் நாங்கள் அனைவரும் எமது
உள்ளத்திலுள்ள கோபம், பகை, போட்டி, தூய்மையற்ற வார்த்தை, வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து, தூய வாழ்வு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நீதியின்
ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தன்னலம் துறந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், ஏழை மக்கள் வாழ்வு பெறுவதற்கு ஏதுவான திட்டங்களைக் கொண்டு வரவும், மக்கள் அனைவரையும் சமத்துவத்தோடு வழிநடத்தவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ஞானத்தின்
ஊற்றான ஆண்டவரே! எம் பங்கில் உள்ள குழந்தைகள் அனைவரும் ஆண்டவரைப் பற்றிய அறிவில் நாளும் வளரவும், ஆன்மிகத்தில் வளரவும், திரு அவை கற்பிக்கும் நெறிமுறைகளில் வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.