news-details
ஆன்மிகம்
ஒரு குரல் ஒரு பாலைவனம்

ஒரு குரல்

ஒலி குரலுடன் அடையாளப்படுத்தப்படும் உயிர்க் குறியீடு. உலகின் முதல் ஒலியே கடவுளின் குரல்தான். கடவுளின் குரல் உலகைப் படைத்தது. உலகைப் படைத்த கடவுளின் குரல் பல்வேறு சூழல்களில், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மனிதர்கள் வழியாக ஒலித்தது.

ஏதேன் தோட்டத்தில் தொலைந்துபோன ஆதாம், ஏவாளைத் தேடும் குரலாக ஒலித்தது. ஊர் என்ற கிராமத்தில் வாழ்ந்த குழந்தையற்ற முதியவர் ஆபிரகாமுக்கு வாக்குறுதி கொடுத்து அழைக்கும் குரலாக ஒலித்தது. எகிப்து நாட்டில் தம் மக்கள் படும் அழுகுரலைக் கேட்டு, எரியும் முள்புதரில் தோன்றி மோசேவை அழைத்து, மாற்றத்தின் குரலாக ஒலித்தது. மக்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்றபொழுது, சவுலைத் திருநிலைப்படுத்தி அரச குரலாக ஒலித்தது. எசாயா இறைவாக்கினர் மூலம் மெசியாவை அறிவித்த மீட்பின் குரலாக ஒலித்தது.

இன்று தம் மகனின் வருகைக்காக வழியை ஆயத்தம் செய்ய, இறைவாக்குகளும் திருச்சட்டங்களும் நிறைவேற திருமுழுக்கு யோவானில் ஒலிக்கிறது. ‘மிதியடிவாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன்என்று தாழ்ச்சியின் குரலாக, ‘பிறர் மனைவியை வைத்திருப்பது தவறுஎன்று நீதியின் குரலாக, ‘மனம் மாறுங்கள், வழியை ஆயத்தம் செய்யுங்கள்என்று மீட்பின் குரலாக, ‘இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டிஎன்று மெசியாவைச் சுட்டிக்காட்டிய குரலாக ஒலித்தது திருமுழுக்கு யோவானின் குரல்.

கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்என்ற இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்கி, பாலைவனக்  குரலாம் திருமுழுக்கு யோவானின் குரலுக்குச் செவிசாய்ப்போம்; மெசியாவிற்கு வழியை ஆயத்தம் செய்வோம்; பிறருக்காகவும் குரல் கொடுப்போம்!

ஒரு பாலைவனம்

பாலைவனம் மனமாற்றத்திற்கான ஓர் இடம்; ஒரு மனிதனை வெறுமையாக்கும் இடம்; ஒறுத்தலின் இடம்; தன்னை ஆயத்தப்படுத்தும் இடம். பாலும் தேனும் பொழியும் கானான் தேசம் வந்தடைய நாற்பது ஆண்டுகள் பாலைவன அனுபவம் தேவைப்பட்டது. ஆகார் தன் மகன் இஸ்மாயிலைக் காப்பாற்ற பாலைவனம் தேவைப்பட்டது. யோனா நினிவே மக்களை மனமாற்ற பாலைவன அனுபவம் தேவைப்பட்டது. இறைமகன் இயேசு, தம் இறையாட்சிப் பணியைத் தொடர நாற்பது நாள்கள் பாலைவன அனுபவம் தேவைப்பட்டது. வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும் உண்டு, தன்னை வெறுமையாக்கி மக்களை மீட்பிற்காகத் தயார் செய்ய ஒரு பாலைவன திருமுழுக்கு யோவானுக்குத் தேவைப்பட்டது.

பாலைவனம், நீதியைக் கற்றுக்கொடுத்தது, அநீதியை எதிர்க்கச் செய்தது, உண்மையை உரக்க அறிவிக்கச் செய்தது, பல மக்களைத் திருமுழுக்கினால் மனம் மாறச்செய்தது, தாழ்ச்சியைக் கற்றுக்கொடுத்தது, மீட்பரை அடையாளப்படுத்தியது.

பாலைவன அனுபவம் நம்மையும் சீர்படுத்தும் ஆற்றுப்படுத்தும் உறுதிப்படுத்தும் உயிரூட்டும் வாழ்வு கொடுக்கும். மீட்பரைத் தரிசிக்க, மீட்பில் பங்குபெறச் செய்யும். எனவே, திருமுழுக்கு யோவானின் குரலுக்குச் செவிமடுப்போம். பாலைவன அனுபவத்தில் பங்கெடுப்போம். வழியை ஆயத்தம் செய்வோம்.

கிறிஸ்துவை மையப்படுத்தி வழியை ஆயத்தம் செய்தல்

திருமுழுக்கு யோவானின் தயாரிப்பு இயேசுவை மையப்படுத்தியிருந்தது. இயேசுவை முன்னிறுத்தி இயேசுவுக்கு முன்னோடியாக, மணமகனின் தோழராகத் தன் பணியைத் தொடர்ந்தார். “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் வருபவர் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்என்று இயேசுவின் திருமுழுக்கை முன்னிறுத்தினார் திருமுழுக்கு யோவான்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்ற பல குழுக்களின் கேள்விக்குப் பதிலளித்தார் (லூக் 3:10). கூட்டத்தினரிடம், ‘இரண்டு அங்கிகள் உள்ளவர் இல்லாதவரிடம் பகிருங்கள்என்றுபொருளாதார நீதியைவலியுறுத்தினார்வரி வசூலிப்பவரிடம், “உங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதை விட அதிகமாக வசூலிக்க வேண்டாம்என்று ஊழலை எதிர்த்து, ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார். வீரர்களுக்குஅச்சுறுத்தல்கள் மூலமாக மிரட்டிப் பணம் பறிக்காதீர்கள்என்றுநீதியைவலியுறுத்தினார்.

திருமுழுக்கு யோவானின் இறையாட்சிப்பணி மீட்பின் திட்டத்திற்கு ஆணிவேராகவும் தனிமனித மற்றும் சமூக மாற்றத்திற்கு அச்சாணியாகவும் திகழ்ந்தது. மெசியாவை எல்லாரும் கண்டுணர வழியை ஆயத்தம் செய்தார். மனமாற்றம், நம்பிக்கை, கீழ்ப்படிதல் இறையாட்சியின் பிரதிபலிப்பாக நம்மிலும் சமூகத்திலும் நிலவவேண்டும் என்று எடுத்துரைத்தார்.

திருமுழுக்கு யோவானின் குரல் நம்மில் ஒலிக்க வேண்டும். நம் சமூகங்களில் ஒலிக்க வேண்டும். நம் இதயத்திலும் உலகிலும் வழியை ஆயத்தம் செய்ய வேண்டும். “வாருங்கள், கடவுளின் ஆட்டுக்குட்டியைக் கண்டு கொள்வோம்என்ற திருமுழுக்கு யோவானின் வழியை ஆயத்தம் செய்வோம். ஓங்கிய குரலாக ஒலிப்போம். மாற்றம் நம்மிலும் நிகழட்டும், கிறிஸ்து நம்மில் பிறக்கட்டும்!