news-details
ஞாயிறு மறையுரை
டிசம்பர் 21, 2025, திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு (முதல் ஆண்டு) எசா 7:10-14; உரோ 1:1-7; மத் 1:18-24 - செவிமடு... ஆய்ந்துணர்... வாழ்வாக்கு..!

ஒவ்வொருவரும் இறைவனின் அழைப்புக்கு இயைந்தவகையில் வாழ்வதற்கு, ‘செவிமடுத்தல், ஆய்ந்துணர்தல் மற்றும் அவற்றை வாழ்வாக்குதல்என்ற மூன்று கூறுகள் உதவுகின்றன. நம் ஒவ்வொருவரின் அழைப்பும் வேறுபட்டதாக இருப்பினும், இறைவனிடமிருந்து வரும் அழைப்பின் குரலுக்குச் செவிமடுத்து, ஆய்ந்துணர்ந்து, அவ்வார்த்தைகளை வாழ்வாக்குவதன் வழியாக, நாம் மீட்பின் கருவிகளாக மாறவும் முழு மகிழ்வை நோக்கி நடக்கவும் உதவி பெறுகிறோம்.

இன்று திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு. இறைவனின் மீட்புத் திட்டத்தில் திரைக்குப் பின்னால் இருந்து செயல்பட்டவராக, தன்னை எவ்விதத்திலும் முன்னிலைப்படுத்திக்கொள்ளாத நேர்மையாளரான புனித யோசேப்பு இன்றைய நாளின் கதாநாயகராகிறார். இன்றைய மூன்று வாசகங்களுமே இறைவனின் திருச்சொற்களுக்குச் செவிமடுத்து வாழ நம்மை அழைக்கின்றன.

சிரியாவும் இஸ்ரயேலும் யூதாவிற்கு எதிராகப் போர் செய்ய முயன்ற காலத்தில் நடந்த நிகழ்வை இன்றைய முதல் வாசகம் விவரிக்கின்றது. சிரியாவும் இஸ்ரயேலும் அசீரியாவிற்கு எதிராகப் போர் தொடுக்க முயன்றபோது, யூதாவையும் தங்களுடன் சேருமாறு கேட்டனர். ஆனால், அதற்கு யூதாவின் அரசன் ஆகாசு மறுக்கவே, இஸ்ரயேல் நாட்டு அரசர் பெக்காவும் சிரியா நாட்டு அரசர் இரட்சினும் (2அர 16:5; எசா 7:1) யூதாவின்மீது போர் தொடுத்து அதை வீழ்த்த முயன்றனர். இதனால் அரசர் ஆகாசும் நாட்டு மக்களும் பதற்றமடையவே (7:2), ஆண்டவர் எசாயா வழியாக, “நீ அமைதியாய் இரு; அஞ்சாதே (7:4) என்றும், “அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது; அது ஒருபோதும் நிறைவேறாது (7:7) என்று ஆகாசிடம் உரைக்கிறார். எசாயாவின் இவ்வார்த்தைகள் ஆகாசுக்கு ஆறுதல் அளித்திருக்கவேண்டும். ஆனால், அவர் ஆண்டவருடைய வார்த்தைகளை நம்ப மறுத்து, அசீரிய அரசர் மூன்றாம் திக்லத் பிலேசரின் உதவியை நாடுகின்றார் (2அர 16:7-9).

பிற அரசர்களைப்போலவே ஆண்டவர் முன்னிலையில் தீயவராகக் கருதப்பட்ட ஆகாசு, அதிகாரத்தில் நிலைத்திருக்கத் தன் சொந்த மகனையே வேற்றுத் தெய்வங்களுக்குப் பலியாக்கினான் (2அர 16:3). வேற்றுத் தெய்வங்களின் வழிபாடுகளை ஆதரித்தான் (16:4). இது ஆண்டவரின்மேல் அவனுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. எனவே, ஆண்டவருடைய வார்த்தையை மதிக்காமல் அசீரிய அரசரிடம் தஞ்சம் புகுவது இறுதியில் அவனுக்கே எதிராக அமைகிறது (2குறி 28:20-21). ஆண்டவரால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவருடைய உதவி எப்போதும் உண்டு. ஆனால், ஆண்டவரின் செயல்களில் நம்பிக்கை வைக்காமல் வேற்று மனிதரில் நம்பிக்கை வைத்தால் அல்லல்கள் அதிகமாகுமே தவிர குறையாது. அரசர் ஆகாசுவின் செயல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

இறைவாக்கினர் எசாயா ஆகாசிடம் இறைவனிடம் தஞ்சமடையக் கேட்டும், ஆண்டவரே அவனிடம் ஓர் அடையாளத்தைக் கேட்கச் சொல்லியும் அவன் அதைக் கேட்க மறுத்தான் (எசா 7:12). ஆகாசின் இச்செயல் சரியானதுபோலத் தோன்றினாலும் (கடவுளைச் சோதிப்பது ஒரு பாவம் - இச 6:16; மத் 4:7), ஆகாசு ஏற்கெனவே கடவுளின் வாக்கை மறுத்து, அசீரியரின் சொல்லைக் கேட்டதாலோ கடவுளிடம் அடையாளம் கேட்கத் தயங்கினான் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆயினும், உலகிற்கு வரவிருந்த இயேசுவையே ஆண்டவர் அவனுக்கு அடையாளமாய்க் கொடுத்தார் (7:14). ‘இம்மானுவேல்எனும் குழந்தையைப் பற்றிய இறைவாக்கு பலவழிகளில் புரிந்துகொள்ளப்பட்டாலும் மத்தேயு மற்றும் நம்மைப் பொறுத்தவரையில்இம்மானுவேல்என்றால்இயேசு ஆண்டவரே (மத் 1:25).

கடவுளின் திருவாக்கிற்குச் செவிகொடாமல் தனது நம்பிக்கையின்மையால் அசீரியாவின் கையாலே மடிந்த ஆகாசுக்கு (எசா 7,17: 8,1-10) மாற்றாக, ஆண்டவருடைய வார்த்தையை ஆழ்ந்து கேட்பவராகவும், அதைத் தியானிப்பவராகவும், நம்பிக்கையின் மாதிரியாகவும் வாழ்ந்த புனித யோசேப்பு நமக்கான இன்றைய மாதிரி.

இறைவனின் மீட்புத்திட்டம் நிறைவேற தனது தூக்கத்தைத் தொலைத்தவர் யோசேப்பு. “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில், அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான் (மத் 1:20) என்று தனது கனவுகளில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் வார்த்தைகளைத் தீர்க்கமனம் கொண்டு தீவிரமாய்ச் செயல்படுத்தினார். மரியாவோடு திருமண ஒப்பந்தம் நடந்து ஒருசில நாள்களில், மரியாகருவுற்றிருந்ததுதெரியவரவே, ஒரு சாதாரண மனிதர் எதிர்கொள்ளும் அத்தனை கேள்விகள் மற்றும் ஐயங்களுக்கு மத்தியில் இறைவனின் மீட்புத்திட்டத்திற்காகத் தன்னையும் கறைபடுத்திக் கொள்ளாமல், கருவில் இயேசுவைச் சுமந்தவராய், கலக்கமுற்ற நிலையில் இருந்த அன்னை மரியாவையும் கறைபடுத்திவிடாமல், திருக்குடும்பத்தின் தூணானார்.

மத்தேயு நற்செய்தியில் யோசேப்பு மூன்று முறை கனவுகள் வழியாகச் செய்தியைப் பெறுகிறார். முதலில், மரியாவை ஏற்றுக்கொள்ளும்படியாகவும் (மத் 1:18-24), இரண்டாவதாக, இரவோடு இரவாக மரியாவையும், பச்சிளங்குழந்தை இயேசுவையும் அழைத்துக்கொண்டு எகிப்துக்குச் செல்லும்படியாகவும் (மத் 2:13-14), மூன்றாவதாக, ஏரோது இறந்து விடுகிறான்; எனவே, மீண்டும் இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்பும்படியாகவும் (மத் 2:19-21) ஆண்டவரின் தூதரிடமிருந்து செய்தி வருகிறது. முதலில் அவருக்குக் கனவில் கிடைத்த செய்தி நம்பமுடியாத, அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தபோதிலும், அதுநல்ல செய்திஎன்று நம்பினார். இரண்டாவதாக, கடினமான சூழல்களிலும் தன்னை வந்தடைந்த கனவுகளை இறைவன் விடுத்த அழைப்பு என்று ஏற்றுக்கொண்ட யோசேப்பு அதை உடனே செயல்படுத்தினார். கனவில் ஆண்டவரின் தூதர் அவருக்குப் பணித்தவாறேதன் மனைவியை ஏற்றுக்கொண்டார் (மத் 1:24) என்ற இறைவார்த்தைகள் அவர் ஒரு நேர்மையாளர் என்பதற்குச் சான்றுபகர்கின்றன. ஆகவே, புனித யோசேப்பை மரியாவின் கணவர், இயேசுவின் தந்தை, திரு அவையின் காவலர், கன்னியர்களின் காவலர், குடும்பங்களுக்குக் காவலர், தொழிலாளர்களுக்குக் காவலர், கனவுகளின் காவலர்... எனப் பல வழிகளில் வாழ்த்திப் பெருமைப்படுத்துகிறோம்.

கடவுள் இறைவாக்கினரின் வாயிலாகப் பல முறை எச்சரித்தும் அவற்றிற்குச் செவிமடுக்காத ஆகாசைப் போலல்லாமல் (எசா 7:10-14), தன் கனவில் கூறப்பட்டவற்றை மனதார நம்பிச் செயல்பட்டார் யோசேப்பு. கடவுளை நம்மோடு இம்மானுவேலாகத் தங்கவைத்தார். கிறித்தவ வாழ்வு என்பது கடவுளின் குரலுக்குச் செவிமடுத்து, அதை ஆய்ந்துணர்ந்து, வாழ்வாக்கும் வாழ்வுமுறை என்பதையே புனித யோசேப்பு தந்தையிடமிருந்து நாம் கற்றுக்கொள்கின்றோம். ‘தூங்கும் புனித யோசேப்புஎனும் பக்திமிகு வாழ்வுமுறையை உள்வாங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், “கிறித்தவ வாழ்வு உண்மையிலேயே மிகவும் எளிதானது. இயேசுவே நம் வாயில்; அவர் நம் பாதையை வழிநடத்துகிறார்; அவரின் குரலுக்கு நாம் செவிசாய்க்கவேண்டும்எனும் கூற்று உள்ளபடியே எண்ணிப்பார்க்கத்தக்கதே (மறையுரை, 18.04.2026).

திருவிவிலியத்தில் ஆண்டவரின் திருவார்த்தைகளுக்குஆம்என்ற பதிலிறுப்பைக் கூறுவோரின் தொடர் ஆபிரகாமில் தொடங்கியது. அவரைத் தொடர்ந்து தலைமைப் பணிக்கு அழைக்கப்பட்ட மோசேவும் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையால், ‘ஆம்என்ற பதிலை அளித்தார். வானதூதரின் செய்திக்கு இளம்பெண் மரியா கூறியஆம்என்ற பதில், தொடர்ந்து யோசேப்பு, கெத்சமனி தோட்டத்தில் துன்பக் கிண்ணத்தை ஏற்பதற்கு இயேசு கூறியஆம்என்ற பதில்வரை தொடர்ந்தது. கிறிஸ்து பிறப்பு நெருங்கி வரும் இவ்வேளையில், நாம் ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்புக்குஆம்என்று பதிலிறுக்க விரும்புறோமா? அல்லது ஆதாம், ஏவாளைப் போல் நம்மையே மறைத்துக் கொண்டுமுடியாதுஎன்று கூறப்போகிறோமா? என்ற கேள்வியை இன்று நம்மில் எழுப்புவோம். கடவுளுடைய வார்த்தைகள் நம் வாழ்வைத் தொடுகின்றன, வடிவமைக்கின்றன, தீமையிலிருந்து விடுவிக்கின்றன மற்றும் அவை நம்மில் மகிழ்வை ஏற்படுத்துகின்றன. எனவே, இறைவனின் திருச்சொற்களுக்குச்  செவிமடுக்கவேண்டும் என்பதை மரியா, யோசேப்பின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்வோம்

இந்த உலகம் ஒவ்வொரு நாளும், உனது பிரச்சினைகளுக்குப் பதில்களைத் தந்துகொண்டே இருக்கின்றது. செவிமடுக்கக் கற்றுக்கொள்என்று கூறுகிறார் ஓர் அறிஞர். இன்றைக்கு நம்மில் பலர் புரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தோடு கேட்பதில்லை; மாறாக, பதில் கூறவேண்டுமென்ற சிந்தனையோடே கேட்கின்றோம். நாம் வாழ்வில் முன்னேறவும், நம் குடும்பங்களிலும் சமூகத்திலும் வாழ்வோர் மகிழ்வான மாண்புடைய வாழ்வு வாழ செவிமடுத்தல், உன்னிப்பாக உற்றுக்கேட்டல் மிகவும் அவசியம். எனவே, ஏழைகளின் குரலுக்கு, இயற்கையின் குரலுக்கு, பிறக்கின்ற பாலன் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்கக் கற்றுக்கொள்வோம்.

உண்மையிலே, நாம் இறைவார்த்தைக்கு மனதார செவிமடுத்து வாழ்ந்தால், அவை நம் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருக்காது (எசா 55:10-11). ஆம், இறைவனின் வார்த்தைக்குச் செவிமடுத்து, ஆய்ந்துணர்ந்து அதன்படி வாழும் போது நம் வாழ்வும், நம்முடன் வாழ்வோர் வாழ்வும் மகிழ்வாய் அமையும். கிறிஸ்துமஸ் காலத்திலும் புலரும் புத்தாண்டிலும் கடவுளின் வார்த்தையைச் செயல்படுத்தி, அவரை நம்மோடு தங்கவைப்போம்.